Published : 24 Apr 2014 07:56 AM
Last Updated : 24 Apr 2014 07:56 AM
நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தில் முதல்முறையாக 5 முனைப் போட்டி நிலவுகிறது. எனவே, நிச்சயிக்கப்பட்ட வெற்றி யாருக்கு என்பதை கணிக்க முடியாதபடி குழப்பமான சூழல் இருக்கிறது.
நாடாளுமன்ற பொதுத் தேர்தல் நாடு முழுவதும் 9 கட்டங்களாக நடத்தப்படுகிறது. கடந்த 7-ம் தேதி முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது. கடைசிக்கட்ட வாக்குப்பதிவு மே 12-ம் தேதி நடக்கிறது. இதுவரை 5 கட்ட தேர்தல்கள் முடிந்துள்ளன. 6-வது கட்டமாக தமிழகம் உள்பட 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இன்று (24-ம் தேதி) வாக்குப்பதிவு நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 நாடாளுமன்றத் தொகுதிகளுக்கும் இன்று ஒரேநாளில் வாக்குப்பதிவு நடக்கிறது.
இத்தேர்தலில், ஆளும் கட்சியான அதிமுக தனித்துப் போட்டியிடுகிறது. திமுக தலைமையிலான ஜனநாயக முற்போக்கு கூட்டணியில் விடுதலைச் சிறுத்தைகள், புதிய தமிழகம், மனிதநேய மக்கள் கட்சி, இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உள்ளிட்ட கட்சிகள் உள்ளன.
பாஜக தலைமையில் புதிதாக உதயமாகியுள்ள தேசிய ஜனநாயகக் கூட்டணியில் தேமுதிக, பாமக, மதிமுக, கொங்குநாடு தேசிய மக்கள் கட்சி, இந்திய ஜனநாயகக் கட்சி (ஐஜேகே), புதிய நீதிக்கட்சி ஆகிய கட்சிகள் உள்ளன. 7 கட்சிகள் கொண்ட இப்புதிய கூட்டணியை “வானவில்” கூட்டணி என்று அழைக்கின்றனர்.
காங்கிரஸ் கட்சி தனித்தும், இந்திய கம்யூனிஸ்டு, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சிகள் இணைந்து தனி அணியாகவும் போட்டியிடுகின்றன. இவை தவிர, தமிழகத்தில் முதல்முறையாக களம் காணும் ஆம் ஆத்மி கட்சி 25 தொகுதிகளில் வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது.
தமிழகத்தில் 5 முனைப்போட்டி நிலவுகின்ற போதிலும், பெரும்பாலான தொகுதிகளில் திமுக அதிமுக இடையேதான் கடும் போட்டி இருப்பதாகவும், சில தொகுதிகளில் அதிமுக அல்லது திமுகவுக்கு இணையாக பாஜக கூட்டணிக் கட்சி வேட்பாளர்கள் சம பலத்துடன் இருப்பதாகவும் விவரம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். இருப்பினும், 5 முனைப் போட்டியால் யாருக்கு நிச்சயிக்கப்பட்ட வெற்றி என்று கூற முடியாத அளவுக்கு குழப்பமான சூழல் காணப்படுகிறது.
வாக்குகள் பிரியும் வாய்ப்பு இருப்பதால், அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறும் வேட்பாளர்களை விரல்விட்டு எண்ணும்படிதான் இருக்கும். ஒவ்வொரு கட்சியின் உண்மையான செல்வாக்கு என்ன என்பதும் இத்தேர்தலில் தெரிந்துவிடும்.
தமிழகத்தில் உள்ள 39 நாடாளுமன்றத் தொகுதிகளில் 845 பேர் போட்டியிடுகின்றனர். அதிகபட்சமாக தென்சென்னை யில் 42 வேட்பாளர்களும், குறைந்தபட்சமாக நாகப்பட்டினம் (தனி) தொகுதியில் 9 பேரும் களத்தில் உள்ளனர்.
ஆலந்தூர் சட்டமன்றத் தொகுதி தேமுதிக உறுப்பினர் பண்ருட்டி ராமச்சந்திரன் அக்கட்சியில் இருந்து விலகி அதிமுகவில் சேர்ந்ததால், அத்தொகுதியில் இன்று இடைத்தேர்தல் நடக்கிறது. 2 பெண்கள் உள்பட 14 பேர் களத்தில் உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT