Published : 28 Dec 2014 12:53 PM
Last Updated : 28 Dec 2014 12:53 PM
சென்னை நீலாங்கரை அருகே உள்ள அக்கரை பகுதி கடற்கரை யில் கடந்த 22-ம் தேதி மாலை கல்லூரி மாணவி ஒருவர் தனது காதலனுடன் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மர்ம நபர் ஒருவர் தான் போலீஸ்காரர் என்று கூறி மிரட்டி மாணவியை மட்டும் விசாரணைக்கு அழைத்து சென்றுள்ளார்.
தன்னை மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்றவர் ஒரு அறையில் அடைத்து பலாத்காரம் செய்ததாக நீலாங்கரை போலீஸில் மாணவி புகார் கொடுத்தார். அதைத் தொடர்ந்து அந்த மாணவிக்கு மருத்துவ பரிசோதனை நடந்தது. இதில் மாணவி பலாத்காரம் செய்யப்படவில்லை என்பது உறுதி செய்யப்பட்டது. ஆனால் மாணவிக்கு அந்த நபர் பாலியல் தொந்தரவு கொடுத்தது விசாரணையில் தெரியவந்தது.
போலீஸ் என்று கூறி மாணவியை அழைத்துச்சென்ற நபரை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டன. மாணவி கூறிய அடையாளத்தை வைத்து அந்த மர்ம நபர் தங்கியிருந்த அறையை கண்டுபிடித்த போலீஸார், அக்கம்பக்கத்தில் இருந்தவர்களிடம் விசாரித்தனர். காரைக்காலைச் சேர்ந்த அருண்மொழி என்பவர் அங்கு தங்கியிருந்ததாகவும், தன்னை உதவி ஆய்வாளர் என்று கூறிக்கொண்ட அவர் அடிக்கடி அந்த அறைக்கு பெண்களை அழைத்து வந்ததாகவும் அவர்கள் போலீஸாரிடம் கூறினார்கள்.
அதைத் தொடர்ந்து காரைக்காலுக்கு சென்ற தனிப்படையினர் நேற்று பிற்பகலில் அருண்மொழியை கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையில், சோழிங்கநல்லூரில் ஒரு தனியார் ஐடிஐ நிறுவனத்தில் அவர் ஊழியராக பணிபுரிவது தெரிந்தது.
வேலைக்கு செல்லும்போது அவர் காக்கி உடையை அணிந்து செல்வார். அப்போது பலர் அவரை போலீஸ்காரர் என்று நினைத்து மரியாதை செய்துள்ளனர். கடற்கரைக்கு வரும் காதலர்கள் பலரை புகைப்படம் எடுத்து மிரட்டி, பாலியல் கொடுமைகள் செய்திருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT