Last Updated : 12 Dec, 2014 05:12 PM

 

Published : 12 Dec 2014 05:12 PM
Last Updated : 12 Dec 2014 05:12 PM

திமுக-விலிருந்து விலகல்: செய்திகளை மறுக்கும் துரைமுருகன்

"திமுக எனது கட்சி, கலைஞர் என்னுடைய தலைவர், தளபதி எங்கள் வழிகாட்டி. இதுதான் எனது நிலைப்பாடு. திமுக-விலிருந்து நான் விலகும் பேச்சுக்கே இடமில்லை” என்று துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

திமுக துணைப் பொதுச் செயலர் துரைமுருகன் தனது பதவியைத் துறந்ததாக எழுந்துள்ள செய்திகள் ‘அப்பட்டமான பொய்’ என்றும் வேண்டுமென்றே சிலர் இதனை திட்டமிட்டு பரப்பியுள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.

அதேபோல் கருணாநிதி மற்றும் ஸ்டாலின் ஆகியோருடன் கருத்து வேறுபாடு கொண்டுள்ளதாக எழுந்த செய்திகளையும் அவர் மறுத்தார்.

"திமுக எனது கட்சி, கலைஞர் என்னுடைய தலைவர், தளபதி எங்கள் வழிகாட்டி. இதுதான் எனது நிலைப்பாடு. திமுக-விலிருந்து நான் விலகும் பேச்சுக்கே இடமில்லை.” என்றார்.

வேலூர் மாவட்ட திமுக செயலர் பதவியை தனது மகனுக்கு கொடுக்கும் விவகாரத்தில் கட்சித்தலைமை அதற்கு விருப்பம் காட்டவில்லை என்பதால் துரைமுருகன் ஏமாற்றமடைந்தார் என்ற செய்திகளை மறுத்த அவர், வியாழனன்று உட்கட்சித் தேர்தலை ஒழுங்கமைக்க வேலூர் சென்றதாக தெரிவித்தார்.

"சென்னையில் என் இல்லத்தின் முன்னால் காத்திருந்த செய்தியாளர்களிடம் “இது அப்பட்டமான பொய்; யாரோ சில விஷமிகள் இதை திட்டமிட்டு பரப்பியிருக்கிறார்கள்” என்று பேட்டி கொடுத்தேன். ஆனால் இன்று காலையில் எந்தெந்த பத்திரிகை நிருபர்கள் என்னோடு பேசினார்களோ, அதே பத்திரிகைகளில் நான் துணை பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்தி வெளியிட்டிருக்கிறார்கள். தமிழ்நாட்டில் நிலவும் பத்திரிகை தர்மத்தை என்ன சொல்வது?

நான் முறையாக கட்சியில் வளர்ந்தவன். நிறை வாழ்க்கையோடு வாழ்ந்து வருபவன். 1954ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் உறுப்பினராக இருப்பவன். 50 ஆண்டுகளாக தலைவர் கலைஞரின் அடியொற்றி நிற்பவன்.

நான் வெறும் அரசியல்வாதி அல்ல, திராவிட கொள்கைகளில் தீவிரப்பற்றுள்ளவன்.” என்று அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x