Published : 31 Dec 2014 09:39 AM
Last Updated : 31 Dec 2014 09:39 AM
ராமேசுவரம் கடல் பகுதியில் ஒரே மாதத்தில் மூன்று டால்பின்கள் இறந்து கரை ஒதுங்கியதால் சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கவலை அடைந்துள்ளனர்.
ராமநாதபுரம் மாவட்டம், மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில், டால்பின், கடல் பசு, திமிங்கலம், கடற்குதிரை உள்ளிட்ட அரியவகை கடல் வாழ் உயிரினங்கள் அதிகமாக வசிக்கின்றன. இவை கடலில் ஏற்படும் இயற்கை சீதோஷ்ண மாற்றங்கள், விபத்துகள் மற்றும் மீனவர்களின் வலைகளில் சிக்கி உயிரிழந்து கரை ஒதுங்குவது தற்போது அதிகரித்துள்ளது.
நேற்று ராமேசுவரம் சங்குமால் கடல் பகுதியில் 4 அடி நீளமும், 50 கிலோ எடையும் கொண்ட டால்பின் ஒன்று இறந்த நிலையில் கரை ஒதுங்கியது. பிரேதப் பரிசோதனைக்கு பின்னர் வனத்துறையினர் அதன் உடலை புதைத்தனர். டிசம்பர் மாதம் மட்டும் மூன்று டால்பின்கள் ராமேசுவரம் கடல் பகுதியில் இறந்து கரை ஒதுங்கியுள்ளன. இதுகுறித்து நமது செய்தியாளரிடம் சுற்றுச்சூழல் ஆர்வலர் ராஜீ கூறும்போது, அழிந்துவரும் அரியவகை உயிரினமாக டால்பின் உள்ளதால், இந்திய அரசு 2009-ம் ஆண்டு அக்டோபர் மாதம் இந்தியாவின் தேசிய கடல்நீர் விலங்காக டால்பின்களை அறிவித்தது.
மன்னார் வளைகுடா மற்றும் பாக். ஜலசந்தி கடல் பகுதிகளில் டால்பின் மீன்கள் அதிகமாகக் காணப்படுகின்றன. பாரம்பரிய மீன்பிடி முறையை மறந்து, நாம் விசைப்பிடி மீன்பிடி முறைகளுக்கு மாறி விட்டோம். இதனால், ஆழ்கடலில் வாழும் டால்பின்கள் கரையை நோக்கி வரத் தொடங்கி விட்டன.
எனவே விசைப்படகுகள் மற்றும் பாறைகள் மீது மோதியும், வலைகளில் அடிபட்டும் டால்பின்கள் இறந்து விடுகின்றன. கடலோரப் பகுதி மக்களிடம் அரியவகை உயிரினமான டால்பின் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். பள்ளி மாணவர்களுக்கு பாடத்திட்டங்களில் சுற்றுச்சூழல் கல்வியில் அரியவகை உயிரினங்களை பற்றி போதிக்க வேண்டும் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT