Published : 17 Dec 2014 11:02 AM
Last Updated : 17 Dec 2014 11:02 AM
கன்னியாகுமரி மாவட்ட மீனவர் கள் 10 பேர் பிரிட்டனுக்கு சொந்தமான தீவில் சிறைபிடிக்கப் பட்டுள்ளனர்.
இந்தியப் பெருங்கடலில் கன்னியாகுமரிக்கு தெற்கே 2,200 மைல் தொலைவில் உள்ளது பிரிட்டனுக்கு சொந்தமான ‘டீகோ கார்சியா’என்ற தீவு. இங்கு அமெரிக்கா தனது விமானப்படை தளத்தை நிறுவியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் சின்னத்துறையைச் சேர்ந்த டைட்டஸ் என்பவரது ‘கிரீஷ்மா’ என்ற விசைப்படகில் மீன்பிடிக்கச் சென்ற 14 மீனவர்கள், இத்தீவின் அருகே கடந்த 10 நாட்களுக்கு முன் கைது செய்யப்பட்டனர். இந்நிலை யில் மேலும் 10 மீனவர்கள் அங்கு சிறை வைக்கப்பட்டுள்ள விவரம் தற்போது தெரியவந்துள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் தூத்தூரைச் சேர்ந்த டைட்டஸ் (48) என்பவருக்கு சொந்தமான ‘போசின்’ என்ற விசைப்படகில் டிசம்பர் 2-ம் தேதி, கேரள மாநிலம் விழிஞ்ஞம் துறைமுகத்தில் இருந்து, டைட்டஸ்(46), தர்மையன்(56), ஜெரோன் (55), ராஜாமணி (45), ஜெய்மான்ஸ் (57), பினு (40) உள்ளிட்ட 10 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றனர்.
`டீகோ கார்சியா’தீவின் அருகே மீன் பிடித்துக் கொண்டிருந்த போது, அவ்வழியே வந்த பிரிட்டிஷ் கப்பல், மீனவர்களை கைது செய்தது. ஏற்கெனவே டிசம்பர் 3-ம் தேதி கைது செய்யப்பட்டு அந்த தீவில் பிணைக் கைதிகளாக வைக்கப்பட்டுள்ள மீனவர்களுக்கு, அவர்களின் குடும்பத்தினருடன் பேச நேற்று வாய்ப்பளிக்கப்பட்டது. அப்போது அவர்கள் இவ்விஷயத்தை தெரிவித்துள்ளனர்.
மீனவர்களை மீட்கக் கோரி ஜனாதிபதி, உள்துறை அமைச்சர், தமிழக முதல்வர் உள்ளிட்டோருக்கு தமிழ்நாடு மீனவர் வளர்ச்சி அறக்கட்டளைத் தலைவர் ஜஸ்டின் ஆண்டனி மனு அனுப்பியுள்ளார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT