Published : 02 Apr 2014 12:00 AM
Last Updated : 02 Apr 2014 12:00 AM
நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கான கட்டணம் 10 முதல் 12 சதவீதம் வரை திடீரென உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கு லாரி உரிமையாளர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
தமிழகம் முழுவதும் தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் வாகனங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது. பல இடங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதாக கூறி, வாகன ஓட்டிகள் போராட்டங்களில் ஈடுபடும் சம்பவங்களும் நடக்கின்றன.
இந்நிலையில் செவ்வாய்க்கிழமை திடீரென சங்கச் சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. 10 முதல் 12 சதவீதம் வரை கட்டணத்தை உயர்த்த மத்திய அரசு உத்தரவிட்டுள்ளதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து தமிழ்நாடு லாரி உரிமையாளர்கள் சம்மேளனத் தலைவர் ஆர்.சுகுமார் கூறியதாவது:
நெடுஞ்சாலைகளை சரியாக பராமரிக்காமலேயே சுங்கச்சாவடி களில் ஆண்டுதோறும் கட்டணம் உயர்த்தப்படுகிறது. இதனால் லாரி உரிமையாளர்களும் பொதுமக்களும் கடுமையாக பாதிக்கப்படுகின்றனர். மோசமான சாலைகளால் சில நேரங்களில் வாகனங்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்புகளும் நிகழ்கின்றன. இந்நிலையில், திடீரென சுங்கச் சாவடிகளில் கட்டணத்தை 10 முதல் 12 சதவீதம் உயர்த்திவிட்டனர்.
உதாரணத்துக்கு, ஸ்ரீபெரும் புதூரிலிருந்து வாலாஜாபாத் நோக்கி செல்லும் கார்களுக்கு தினக் கட்டணம் ரூ.10-ம் மாதக் கட்டணம் ரூ.115-ம் உயர்த்தப்பட்டுள்ளது.
இதேபோல் மினி லாரி, வேன் போன்ற வாகனங்களுக்கு தினக் கட்டணம் ரூ.10, மாதக் கட்டணம் ரூ.150 மற்றும் லாரி, பஸ்களுக்கான தினக் கட்டணம் ரூ.10, மாதக் கட்டணம் ரூ.280 உயர்த்தப்பட்டுள்ளது.
இந்தக் கட்டண உயர்வை மத்திய அரசு திரும்பப் பெறாவிட்டால் பொது மக்களுடன் லாரி உரிமையாளர்கள் இணைந்து சுங்கச் சாவடிகளில் முற்றுகைப் போராட்டம் நடத்துவோம். இவ்வாறு சுகுமார் கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT