Published : 28 Dec 2014 01:01 PM
Last Updated : 28 Dec 2014 01:01 PM

சொந்த கட்டிடம் இல்லாததால் திறந்தவெளியில் அங்கன்வாடி மையம்: குளக்கரையில் தஞ்சமடையும் குழந்தைகள்

தாயார்குளம் அருகே அங்கன் வாடி மையத்துக்கு சொந்த கட்டிடம் இல்லாததால் அதில் பயிலும் பிள்ளைகள் திறந்த வெளியில் தங்க வைக்கப்படுகின்றனர். அருகிலேயே குளம் மற்றும் சாலை அமைந்துள்ள நிலையில் குழந்தைகளுக்கு ஏதேனும் அசம்பாவிதம் நிகழ்ந்துவிடும் வாய்ப்புள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர்.

காஞ்சிபுரம் நகராட்சிக்கு உட்பட்ட 44-வது வார்டு பகுதியில், கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அங்கன்வாடி மையம் ஒன்று இயங்கி வருகிறது. 25 குழந்தைகள் பயிலும் இந்த அங்கன்வாடிக்கு சொந்த கட்டிடம் ஏதும் இல்லை. தாயார்குளத்தையொட்டி அமைந்துள்ள 8 அடி அகலம் கொண்ட கட்டிடத்தில் இந்த மையம் இயங்குகிறது. இங்கு பயில வரும் பிள்ளைகள், குளக்கரையில் உள்ள அம்மன் கோயிலில் திறந்வெளியில் தங்க வைக்கப்படுகின்றனர்.

திறந்த வெளியில் விடப்படும் பிள்ளைகள் அருகில் உள்ள சாலையில் விளையாடும் நிலை உள்ளதால் விபத்துகள் ஏதும் நிகழ்ந்துவிடும் வாய்ப்பிருப் பதாக அப்பகுதி மக்கள் அச்சம் தெரிவித்துள்ளனர். பிள்ளைகளின் பாதுகாப்புக்காக அங்கன்வாடிக்கு சொந்த கட்டிடம் அமைத்து தரவேண்டும் என அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, அப்பகுதியைச் சேர்ந்த பெற்றோர் கூறியதாவது: எங்கள் பகுதியில் வசிக்கும் மக்களில் பெரும்பாலானோர் கூலி வேலை செய்து வருகின்றனர். இதனால், பணிக்கு செல்லும் போது பிள்ளைகளை அங்கன்வாடி மையத்தில் விட்டு செல்வது வழக்கம். அங்கன்வாடிக்கு கட்டிடம் இல்லாததால், குளக்கரை திறந்தநிலை கோயி லில் பிள்ளைகள் தங்க வைக்கப்படுகின்றனர்.

பிள்ளைகள் அருகில் உள்ள குளத்துக்கு தவறுதலாக சென்று விடும் அபாயம் உள்ளது. அங்கன்வாடியில் பிள்ளைகள் பாதுகாப்பாக இருப்பார்கள் என்ற நம்பிக்கையில்தான் பெற்றோர்கள் பிள்ளைகளை விட்டு செல்கின்றனர். எனவே பெற்றோர்களின் அச்சத்தை போக்கும் வகையில் அங்கன்வாடி மையத்துக்கு சொந்த கட்டிடம் கட்டித் தரவேண்டும் என்றனர்.

இதுகுறித்து, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: தாயார் குளம் பகுதியில் செயல்படும் அங்கன்வாடி மையத்துக்கான கட்டிடம் கட்ட 2 முறை இடம் தேர்வு செய்யப்பட்டது. ஆனால், அப் பகுதி வாசிகள் தொலைவாக இருப்பதாக புகார் தெரிவித்தனர். இதனால், பணிகள் நிறுத்தப்பட்டன. அதேபகுதியில் கட்டிடம் அமைக்க எங்களிடம் நிலம் இல்லை. நகராட்சி நிர்வாகம் நிலம் தேர்வு செய்துகொடுத்தால், கட்டிடம் அமைத்து தர தயார் நிலையில் உள்ளோம் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

இதுகுறித்து, காஞ்சிபுரம் நகராட்சி ஆணையர் விமலா கூறியதாவது: ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள், நகராட்சியிடம் முறையாக விண்ணப்பித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x