Published : 06 Dec 2014 09:50 AM
Last Updated : 06 Dec 2014 09:50 AM

திட்டக்குழுவுக்கு மாற்றான அமைப்பு குறித்து ஆலோசனை: முதல்வர்கள் மாநாட்டில் பங்கேற்க ஓ.பன்னீர்செல்வம் முடிவு

திட்டக்குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை ஏற்படுத்துவது குறித்து, நாளை புதுடெல்லியில் முதல்வர்கள் மாநாடு நடக்கிறது. இந்த மாநாட்டில் பங்கேற்க தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் தலைமைச் செயலர் முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

திட்டக்குழுவுக்கு மாற்றாக புதிய அமைப்பை ஏற்படுத்துவது குறித்து, அனைத்து மாநிலங்களின் முதல்வர்களுடன், பிரதமர் நரேந்திர மோடி, நாளை (டிசம்பர் 7) புதுடெல்லியில் ஆலோசனை நடத்தவுள்ளார். திட்டக்குழுவுக்கு மாற்றாக கொண்டு வரப்படும் புதிய அமைப்பில், ஆதார் திட்ட ஆணையத்தையும், நேரடி மானிய உதவி அளிக்கும் திட்டத்தையும் இணைப்பது குறித்தும் ஆலோசனை செய்யப்படும் எனத் தெரிகிறது.

இந்த மாநாட்டில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்வர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த அழைப்பின் பேரில் தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் மாநாட்டில் பங்கேற்க இன்று புதுடெல்லி புறப்பட்டுச் செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. அவருடன் தமிழக தலைமைச் செயலர் கே.ஞானதேசிகன் மற்றும் தமிழக திட்டக்குழு அதிகாரிகளும் செல்வர் எனத் தெரிகிறது.

இந்த பயணத்தின் போது, பிரதமர் நரேந்திர மோடியை தனியாக சந்தித்து, தமிழக கோரிக்கைகள் குறித்த மனுவை, தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வழங்குவார் எனக் கூறப்படுகிறது. மானிய விலை மண்ணெண்ணெய் வினியோகத்தை மின் இணைப்பு அடிப்படையில் முறைப்படுத்தும் மத்திய அரசின் முடிவுக்கு தமிழகம் எதிர்ப்புத் தெரிவிக்கும் எனத் தெரிகிறது.

இதேபோல் பொது வினியோகத்தில் உணவுப் பொருள் மானியம் மற்றும் அளவு குறைப்பு, ஆதார் அட்டையை, சமையல் எரிவாயு மானியத்துடன் இணைத்தல், இலங்கையிடம் உள்ள தமிழக மீனவர்களின் படகுகளை மீட்பதுடன், சவுதி அரேபியா உள்ளிட்ட வெளிநாடுகளில் வழக்குகளிலுள்ள மீனவர்களை மீட்பது, முல்லைப் பெரியாறு அணைக்கு மத்தியப் பாதுகாப்பு, காவிரி மேகேதாட்டு அணைக்கு அனுமதி அளிக்காமல் இருப்பது உள்ளிட்ட பல பிரச்சினைகள் குறித்து, முதல்வர் பன்னீர்செல்வம் கோரிக்கை மனு அளிப்பார் என்று தலைமைச் செயலக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x