Published : 27 Apr 2014 10:00 AM
Last Updated : 27 Apr 2014 10:00 AM

தமிழக மின் வாரிய நஷ்டம் ரூ.75,000 கோடியாக அதிகரிப்பு: மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த திட்டம்?

தமிழக மின் வாரியத்தின் நஷ்டம் ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக அதிகரித்துள்ளது. இதை சமாளிக்க, மின் கட்டணத்தை 15 சதவீதம் உயர்த்த ஆலோசனை நடத்தப்பட்டு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

தமிழகத்தில் கடந்த 2005-ம்ஆண்டுக்குப் பிறகு 2011-ம் ஆண்டுவரை மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. இதன்காரணமாக 2011-ம் ஆண்டு வரை மின் வாரியத்துக்கு 45 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது. மின் வாரியம் திவாலாகும் நிலையில் இருந்ததால் வங்கிகள் அதற்கு கடன் கொடுப்பதை நிறுத்தின.

இதைத் தொடர்ந்து 2011-ல் அதிமுக ஆட்சிக்கு வந்ததும், மின் துறையை வளப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன. இதன்படி, மின் வாரியத்தின் கடன் தொகைக்கு தமிழக அரசே உத்தரவாதம் கொடுத்தது. மேலும், பவர் பைனான்ஸ் கார்ப்பரேஷன் மற்றும் மத்திய அரசின் ஊரக மின்மயமாக்கல் திட்டம் ஆகியவற்றின் மூலம் சுமார் 10 ஆயிரம் கோடி ரூபாய் வரை மின் வாரியத்துக்கு நிதி கிடைத்தது.

மின் வாரிய பங்குகளும் தனியாருக்கு விற்கப்பட்டன. அத்துடன் 2012-ல் மின் கட்டணம் 37 சதவீதம் உயர்த்தப்பட்டது. நஷ்டத்தை சமாளிக்க, தொடர்ந்து மின் கட்டணத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது. ஆனால், மக்கள் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் அதன்பிறகு மின் கட்டணம் உயர்த்தப்படவில்லை. மாறாக மின் வாரியத்துக்கான அரசின் மானியம் மட்டும் உயர்த்தப்பட்டது.

இந்நிலையில், சமீபத்தில் மின் துறை அதிகாரிகள் நடத்திய ஆய்வில், மின் வாரியத்தின் இழப்பு ரூ.45 ஆயிரம் கோடியிலிருந்து ரூ.75 ஆயிரம் கோடியாக உயர்ந்திருப்பது தெரியவந்துள்ளது. நிலைமையை சரிசெய்ய, மின் கட்டணத்தை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு மின் வாரியம் தள்ளப்பட்டுள்ளது. இதற்கிடையே, ஆண்டுக் கணக்கையும் மின் கட்டணம் குறித்த மறுஆய்வு அறிக்கையையும் தாக்கல் செய்யுமாறு மின்சார ஒழுங்குமுறை ஆணையமும் உத்தரவிட்டுள்ளது.

இந்த ஆண்டு 15 சதவீதம் அளவுக்கு மின் கட்டணத்தை உயர்த்தினால்தான் ஊழியர்களுக்கு சம்பளமே கொடுக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. எனவே, மின் கட்டணத்தை மாற்றி அமைப்பது குறித்த அறிக்கையை மின்சார ஒழுங்குமுறை ஆணையத்தில் அதிகாரிகள் விரைவில் தாக்கல் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

நஷ்டம் அதிகரிக்க என்ன காரணம்?

கடந்த 2011-ம் ஆண்டில் 45 ஆயிரம் கோடி ரூபாயாக இருந்த நஷ்டத் தொகை, தற்போது 75 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்ததற்கு பல காரணங்களை அதிகாரிகள் கண்டறிந்துள்ளனர்.

சமீபகாலத்தில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் நிலக்கரி மற்றும் நாப்தா விலை கணிசமாக உயர்ந்துவிட்டது. இதனால் புதிய மின் திட்டங்களுக்கு அதிக நிதி செலவிட வேண்டியுள்ளது. வெளிநாட்டிலிருந்து நிலக்கரி இறக்குமதி செய்வதற்கான போக்குவரத்து செலவும் அதிகரித்துள்ளது. இதுபோன்ற காரணங்களால் நஷ்டம் அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x