Published : 22 Dec 2014 07:06 PM
Last Updated : 22 Dec 2014 07:06 PM

மீண்டும் இந்தி மொழி திணிப்பா?: கருணாநிதி கண்டனம்

இந்தி மொழி திணிப்பு மற்றும் கட்டாய மதமாற்றத் தடைச் சட்டம் ஆகியவற்றைக் கண்டித்து திமுக தலைவர் கருணாநிதி அறிக்கை வெளியிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில்,

மத்திய உள்துறை அமைச்சகத்தின் ஆட்சி மொழிப்பிரிவு பொதுத் துறை வங்கிகளுக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பணப் பரிவர்த்தனைகளுக்காக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்படும் மின்னஞ்சல்கள், செல்போன் குறுந்தகவல்கள் இந்தி மொழியில் இருப்பதை உறுதி செய்யுமாறு அந்தக் கடிதத்தில் அறிவுறுத்தப்பட்டிருப்பதாக ஏடுகளில் செய்தி வந்துள்ளன.

இது போலவே ஏ.டி.எம். இயந்திரங்களில் வழங்கப்படும் “ஸ்லிப்”களிலும் இந்தி மொழியைப் பயன்படுத்த வேண்டுமென்று வங்கிகளுக்கு மத்திய அரசு பரிந்துரை செய்திருக்கிறது. மேலும் வங்கிகளின் இணைய தளங்கள், மற்றும் மொபைல் விண்ணப்பங்களிலும் இந்தி மொழியைப் பயன்படுத்த மத்திய அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகச் செய்தி வந்துள்ளது. நாம் எத்தனை முறை கண்டனம் தெரிவித்த போதிலும், சமஸ்கிருதத்தையும், இந்தியையும் திணிப்பதில் பா.ஜ.க. அரசு தொடர்ந்து இது போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டுக் கொண்டு தான் இருக்கிறது.

மேலும் கேரளாவில் 8 குடும்பங்களைச் சேர்ந்த கிறித்தவர்களை விசுவ இந்து பரிஷத் அமைப்பினர் இந்து மதத்திற்கு மாற்றியதாக செய்தி வந்துள்ளது. குஜராத், உத்தரப் பிரதேசம் போன்ற மாநிலங்களிலும் உள்ள ஏழையெளிய இஸ்லாமியர்களையும், கிறித்தவர்களையும் இந்துக்களாக மதமாற்றம் செய்யும் முயற்சியிலே சங் பரிவார் அமைப்புகள் ஈடுபட்டுள்ளனர்.

பா.ஜ.க.வின் மூத்த தலைவர்களில் ஒருவரும், மத்திய அமைச்சருமான திரு. வெங்கைய நாயுடு கட்டாய மத மாற்றத் தடைச் சட்டம் தயாராக இருப்பதாகப் பயமுறுத்தியிருக்கிறார். இதே கருத்தை ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் தலைவர் மோகன் பகவத் அவர்களும் கொல்கத்தாவில் தெரிவித்திருக்கிறார். பா.ஜ.க.வின் தலைவரான அமித்ஷா அவர்களும் கட்டாய மத மாற்றச் சட்டத்தை தேசிய அளவில் கொண்டு வர பா.ஜ.க. தயாராக இருப்பதாகக் கூறியிருக்கிறார்.

பொதுத் தேர்தலுக்கு முன்பு பா.ஜ.க. மக்களிடம் கொடுத்த உறுதிமொழிக்கு மாறாக தற்போது பல வகைகளிலும் நடந்து கொள்வது நாட்டு மக்கள் மத்தியில் மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்துகின்றது. இதனை பிரதமர் மோடி அவர்களும், மத்திய அரசும் கண்டும் காணாமல் இருப்பதற்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்துக் கொள்வதோடு, மத்திய அரசு இப்படிப்பட்ட செயல்களை இனியாவது திருத்திக் கொள்ள வேண்டு மென்று வலியுறுத்துகிறேன்.

என்று கூறியுள்ளார் கருணாநிதி.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x