Published : 05 Apr 2014 12:07 PM
Last Updated : 05 Apr 2014 12:07 PM

காஞ்சிபுரம், ஸ்ரீபெரும்புதூரில் 19 பேர் வேட்பு மனு தாக்கல்

காஞ்சிபுரம் (தனி), ஸ்ரீபெரும்புதூர் ஆகிய தொகுதிகளில் போட்டியிட வெள்ளிக்கிழமை மதிமுக வேட்பாளர்கள் உட்பட 19 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

மதிமுக சார்பில் காஞ்சிபுரம் (தனி) தொகுதியில் போட்டி யிடும் மல்லை சத்யா, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிடும் மாசிலாமணி ஆகியோர் தொண்டர்கள் சூழ ஊர்வலமாக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்துக்கு வந்தனர்.

காஞ்சிபுரம் மாவட்ட மதிமுக செயலர் சோமு, பாமக துணைப் பொதுச் செயலர் திருகச்சூர் ஆறுமுகம், மாவட்ட பாஜக தலைவர் பலராமன், தேமுதிக மாவட்ட செயலர் ரமேஷ் பிரபாகர் உள்ளிட்டோர் முன்மொழிய, மல்லை சத்யா வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

மாவட்ட ஆட்சியர் கா.பாஸ் கரன் பெற்றுக் கொண்டார். மல்லை சத்யாவுக்கு மாற்று வேட்பாளராக அவரின் மனைவி துர்காஷினி வேட்பு மனு தாக்கல் செய்தார்.

மதிமுக மாநில துணைச் செயலர் கௌரிகுமார், காஞ்சிபுரம் மாவட்ட துணைச் செயலர் எஸ்.மணி, கட்சியின் சொத்து பாதுகாப்புக்குழு உறுப்பினர் மல்லையா உள்ளிட்டோர் முன்மொழிய, ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் மாசிலாமணி வேட்பு மனு தாக்கல் செய்தார். அதை மாவட்ட வருவாய் அலுவலர் எம்.சம்பத்குமார் பெற்றுக்கொண்டார்.

பகுஜன் சமாஜ் கட்சி சார்பில், அதன் வேட்பாளர் சத்தியராஜ், ஆதரவாளர்களுடன் காஞ்சிபுரம் பேருந்து நிலையத்திலிருந்து ஊர்வலமாக வந்து, காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட வேட்புமனு தாக்கல் செய்தார்.

ஊர்வலத்தில் பங்கேற்ற பெண்கள், பகுஜன் சமாஜ் கட்சித் தலைவி மாயாவதியின் உருவம் பதித்த முகமூடியை அணிந்துகொண்டு வந்திருந்தனர்.

மேலும் காஞ்சிபுரம் மக்களவைத் தொகுதியில் சுயேச்சைகளாக போட்டியிட காஞ்சிபுரம் புத்தேரி காலனியைச் சேர்ந்த சத்யநாதன், நைனார் தெருவைச் சேர்ந்த இளங்கோவன், ரயில்வே ஸ்டேஷன் சாலையைச் சேர்ந்த வினோத் ராஜ், மரகதம், நங்கநல்லூரைச் சேர்ந்த சீனிவாசன் ஆகியோர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.

ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் சுயேச்சைகளாக போட்டியிட குரோம்பேட்டையைச் சேர்ந்த ஸ்ரீதரன், ருக்மாந்தகன், போந்தூரைச் சேர்ந்த ராமச்சந்திரன், சோழவரத்தைச் சேர்ந்த சீனிவாசன், சென்னை முகப்பேரைச் சேர்ந்த ரமேஷ் என்கிற அதியமான், இவரின் மாற்று வேட்பாளராக ஜெயப்பிரகாஷ், கிழக்கு தாம்பரத்தைச் சேர்ந்த பாரதிதாசன், நங்கநல்லூரைச் சேர்ந்த சம்பத், மலைப்பட்டைச் சேர்ந்த கே.சீனிவாசன், மாடம்பாக்கத்தைச் சேர்ந்த சிவராமன் ஆகியோரும் வேட்பு மனு தாக்கல் செய்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x