Published : 10 Dec 2014 10:48 AM
Last Updated : 10 Dec 2014 10:48 AM
சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டையைப் பெறுவது எப்படி என்பது குறித்து தமிழ்நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் விளக்கியுள்ளார்.
ஆதார் அட்டைக்காக பதிவு செய் வதில் பொதுமக்கள் மத்தியில் பல்வேறு குழப்பங்கள் நிலவி வரு கின்றன. இது குறித்த தெளிவான விவரங்களை மாநகராட்சி தெரி விக்கவில்லை என்று பொதுமக்கள் புகார் கூறி வருகின்றனர்.
இந்நிலையில் சென்னையில் சிரமம் இன்றி ஆதார் அட்டை பெறு வது எப்படி என்பது குறித்து தமிழ் நாடு மக்கள் தொகை கணக்கெடுப்பு இயக்குநரக இணை இயக்குநர் எம்.ஆர்.வி.கிருஷ்ணாராவ் “தி இந்து”விடம் கூறியதாவது:
சென்னையில் எத்தனை மையங்கள் திறக்கப்பட்டுள்ளன?
சென்னை மாநகராட்சிக்கு உட் பட்ட பகுதிகளில் 15 மண்டல அலு வலகங்கள் மற்றும் அதன் பகுதி அலுவலகங்கள் என மொத்தம் 51 இடங்களில் நிரந்தர மையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இம்மையங் களுக்கான ஆபரேட்டர்களை, பி.இ.எல். நிறுவனம் அனுப்புகிறது. சில மையங்களுக்கான ஆபரேட்டர் கள் இன்னும் அனுப்பப்படவில்லை. ஆபரேட்டர்கள் வந்தவுடன் அந்த மையங்களிலும் பணிகள் தொடங்கப்படும்.
மையங்கள் இயங்கும் நேரம் மற்றும் விடுமுறை நாள் எது?
இந்த மையங்கள் ஒவ்வொரு நாளும் காலை 10 முதல் மாலை 6 மணி வரை இயங்கும். ஒரு ஆப ரேட்டர் ஒரு நாளில் 60 பேரின் விவ ரங்களை பதிவு செய்ய முடியும். பணிக்கு செல்லும் பொதுமக்களின் நலன் கருதி சனி மற்றும் ஞாயிற் றுக்கிழமைகளில் மையங்கள் திறக்கப்படும். செவ்வாய்க்கிழமை விடுமுறை விடப்படும்.
இந்த நிரந்தர மையங்கள் எத்தனை மாதங்கள் இயங்கும்?
தமிழக அரசு உத்தரவுப்படி இந்த நிரந்தர மையங்கள் ஓராண்டு, அதா வது அடுத்த ஆண்டு அக்டோபர் 31-ம் தேதி வரை இயங்கும்.
ஆதார் அட்டையைப் பெற பொது மக்கள் என்ன செய்ய வேண்டும்?
கடந்த 2010-ம் ஆண்டு அரசு மேற்கொண்ட மக்கள்தொகை கணக்கெடுப்பின்போது வழங்கப் பட்ட அத்தாட்சி சீட்டை கொண்டு வர வேண்டும். மக்கள்தொகை கணக்கெடுப்பில் பதிவு செய்யாத வர்கள், அதற்கான விண்ணப்பங் களை பெற்று பூர்த்தி செய்து, மையங்களில் வழங்கி, ஆபரேட் டர்கள் தெரிவிக்கும் தேதியில் வந்து தங்கள் விவரங்களை பதிவு செய்யலாம்.
என்னென்ன ஆவணங்களை பொது மக்கள் கொண்டுவர வேண்டும்?
பொதுமக்கள் தங்கள் புகைப்படம் இடம்பெற்ற, அரசு அறிவித்துள்ள அடையாள ஆவணங்களான குடும்ப அட்டை, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட மத்திய, மாநில அரசுகளால் வழங்கப்பட்ட ஆவணங்களை கொண்டு வந்து பதிவு செய்துகொள்ளலாம். ஆவணங்கள் இல்லாவிட்டாலும் பரவாயில்லை. அவர்களின் விவரங்கள் பதிவு செய்யப்படும்.
எந்த மையத்தில் வேண்டுமானாலும் பதிவு செய்துகொள்ளலாமா?
பொதுமக்கள் எந்த மையத் தில் வேண்டுமானாலும் ஆதார் அட்டைக்கு பதிவு செய்துகொள்ள லாம். ஆனால் அந்த மையம், அவர்கள் குடியிருக்கும் மாநகராட்சி மண்டலத்துக்கு உட்பட்டதாக இருக்க வேண்டும்.
புகார் தெரிவிக்க யாரை தொடர்பு கொள்ளலாம்?
மாநகராட்சி புகார் எண்ணான 1913-ல் புகார் தெரிவிக்கலாம்.
இதுவரை எத்தனை பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்பட்டுள்ளது?
சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பகுதியில் மட்டும் இதுவரை 25 லட்சத்து 94 ஆயிரத்து 5 பேரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்டுள் ளன. இதில் 24 லட்சத்து 4 ஆயிரத்து 17 பேருக்கு ஆதார் அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன. 1 லட்சத்து 89 ஆயிரத்து 988 பேருக்கு ஆதார் அட்டை வழங்கப்படவில்லை.
விவரங்கள் பதிவு செய்து பல மாதங்கள் ஆகியும் ஆதார் அட்டை கிடைக்காதவர்கள் என்ன செய்ய வேண்டும்?
ஆதார் அட்டைக்கு விவரங்களை பதிவு செய்து அட்டை கிடைக்காதவர்கள், அட்டையின் நிலை குறித்து http://uidai.gov.in என்ற இணையதளத்தில் பார்த்து தெரிந்துகொள்ளலாம். அதில் ரத்து செய்யப்பட்டது என்று குறிப்பிட்டிருந்தால், ஏற்கெனவே பதிவு செய்யப்பட்டபோது வழங்கப்பட்ட அத்தாட்சி சான்றுடன் வந்து, எந்த ஆவணத்தையும் வழங்காமல், மீண்டும் விரல் ரேகை உள்ளிட்டவற்றை பதிவு செய்துகொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு அந்தந்த மையத்தில் உள்ள ஒருங்கிணைப்பு அலுவலரை சந்திக்கலாம்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT