Published : 10 Apr 2014 12:22 PM
Last Updated : 10 Apr 2014 12:22 PM
பட்டப்படிப்பு வரை கல்வியை இலவசமாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுப் பள்ளிக்கான மாநில மேடை வலியுறுத்தியுள்ளது.
இது தொடர்பாக அந்த அமைப்பின் பொதுச் செயலாளர் பிரின்ஸ் கஜேந்திரபாபு புதன் கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை:
கல்வி உரிமைக்காக போராடுகின்ற மாணவர், ஆசிரியர் அமைப்புகளின் கூட்டமைப்பாக கல்வி உரிமைக்கான அகில இந்திய பேரவை இருக்கிறது. நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிற அரசியல் கட்சிகளிடம் மக்களுக்கான கல்வி தொடர்பான கோரிக்கைகளை அது முன்வைத்துள்ளது. அவை வருமாறு:
உயர்கல்வி ஒரு வணிகரீதியான சேவை என உலக வர்த்தக கழகத்திடம் தந்த ஒப்புதலை மத்திய அரசு திரும்பப் பெற வேண்டும்.
கல்வியை வணிகமயமாக்க அரசு வெளியிட்ட அனைத்து அறிவிப்புகளையும் ரத்து செய்யவேண்டும். கல்வியை ஒரு தொழிலாக கருத முடியாது என இந்திய அரசியல் சாசனத்தில் திருத்தம் கொண்டுவர வேண்டும்.
இலவச கல்வி என்பதை மழலைக்கல்வி முதல் பட்டப்படிப்பு வரை என வரையறுக்க வேண்டும். இந்திய நாட்டின் உள்நாட்டு உற்பத்தியில் 6 சதவீதத்தை கல்விக்காக செலவிட வேண்டும். பொதுப் பள்ளி முறையும், அருகாமைப் பள்ளி முறையும் அமலாக்கப்பட வேண்டும். 12வது ஐந்தாண்டு திட்ட காலகட்டத்தில் குறைந்த பட்சம் 40 சதவீதம் பேராவது உயர்கல்வி முடித்தவர்களாக இருப்பதை உறுதி செய்ய வேண்டும்.
பிரெய்லி, சைகை மொழிகளை பயன்படுத்தும் மாற்றுத்திறனாளிகளுக்கு மொழி சிறுபான்மையினர் அந்தஸ்து வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை பேரவை முன்வைத்துள்ளது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT