Published : 21 Dec 2014 05:11 PM
Last Updated : 21 Dec 2014 05:11 PM
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது பாஜக தலைமையில்தான் கூட்டணி அமையும் என்றும் தேர்தலுக்கு முன்பே முதல்வர் வேட்பாளரை அறிவிப்போம் என்றும் அக்கட்சியின் தேசிய தலைவர் அமித் ஷா கூறினார்.
2 நாள் பயணமாக நேற்று முன்தினம் தமிழகம் வந்த பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா, அன்று மாலை மறைமலைநகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசி னார். மாநில தலைமை அலுவலக மான கமலாலயத்துக்கு நேற்று காலை வந்தார். அங்கு நடந்த மாநில நிர்வாகிகள் கூட்டத்தில் பங்கேற்ற அவர், உறுப்பினர் சேர்க்கை குறித்து 2 மணி நேர பயிலரங்கை நடத்தினார். பின்னர் நிருபர்களிடம் அமித் ஷா கூறியதாவது:
தமிழகத்தில் கடந்த மக்களைவைத் தேர்தலில் தே.ஜ.கூட்டணிக்கு 19 சதவீத வாக்குகள் கிடைத்தன. மோடி தலைமையிலான பாஜக அரசு, 6 மாதத்தில் விலைவாசியை குறைத்துள்ளது. பெட்ரோல், டீசல் விலை 10 முறைக்கு மேல் குறைக்கப்பட்டுள்ளது. இளைஞர்களின் திறன் மேம்பாட்டுக்காக தனி அமைச் சகத்தை தொடங்கியுள்ளது.
முன்பிருந்த திட்டக் குழுவில் பிரதமரும் அமைச்சர்களும் மட்டுமே முடிவுகளை எடுக்க முடிந்தது. எனவே, தற்போது ‘டீம் இந்தியா’ உருவாக்கப்பட்டு மாநில முதல்வர்களும் முடிவுகளை எடுக்க வாய்ப்பு தரப்பட்டுள்ளது. வாஜ்பாய் ஆட்சிக் காலத்தில் நாட்டின் வளர்ச்சி விகிதம் 4.2 சதவீதத்தில் இருந்து 8.7 சதவீதமாக உயர்ந்தது. ஆனால் ஐ.மு.கூட்டணியின் பத்தாண்டு கால ஆட்சியில், அது 4.6 சதவீதமாக குறைந்தது. பாஜக ஆட்சியமைத்த 3 மாதத்தில் 5.1 சதவீதமாக உயர்ந்துள்ளது.
அண்டை நாடுகளுடனான உறவு நல்லமுறையில் உள்ளது. இலங்கையில் தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட 5 மீனவர்களை மீட்டது பாஜக அரசின் வெற்றி யாகும். காவிரி பிரச்சினை மட்டு மன்றி மாநிலங்களுக்கு இடையே யான பிரச்சினைகள் பேச்சு வார்த்தை மூலம் தீர்க்கப் படும்.
தமிழகத்தில் 60 லட்சம் உறுப்பினர்களை கட்சியில் சேர்க்க உள்ளோம். தமிழகத்தை திமுகவும் அதிமுகவும் மாறி மாறி ஆண்டு சீரழித்துவிட்டன. 11-வது ஐந்தாண்டு வளர்ச்சி திட்டத்தில் பாஜக ஆளும் மாநிலங்களின் வளர்ச்சி சதவீதம் 11 ஆக உள்ளது. ஆனால் தமிழகத்தின் வளர்ச்சி சதவீதம் 8.5தான். தமிழகத்தில் வேலையில்லா திண்டாட்டம் 9 சதவீதமாக உள்ளது. இது, பாஜக ஆளும் மாநிலங்களில் 1 சதவீதம்தான். வறுமையை ஒழிப்பதில் தமிழகம் 11-வது இடத்திலும், தனி நபர் வருமானத் தில் 9-வது இடத்திலும் உள்ளது.
கட்டாய மதமாற்றத்தை பாஜக அரசு ஒருபோதும் ஆதரிக்காது. இந்தியாவில் கட்டாய மதமாற்ற தடைச் சட்டத்தை கொண்டு வர பாஜக தயார். மதச்சார்பற்றவர்களாக கூறிக்கொள்ளும் கட்சிகள் இதை ஆதரிக்கத் தயாரா? கூட்டணி என்றால் கருத்து வேறுபாடுகள் வருவதும் சிலர் வெளியே போவ தும், சிலர் உள்ளே வருவதும் சகஜம்தான். வைகோ திரும்ப வந்தாலும் சேர்த்துக் கொள்வோம்.
தமிழகத்தில் 2016-ம் ஆண்டு நடக்கவுள்ள சட்டப்பேரவை தேர்த லுக்கு தற்போதுள்ள கூட்டணியை மேலும் வலுப்படுத்துவோம். பாஜக தலைமையில்தான் கூட்டணி உருவாகும். முதல்வர் வேட்பாளரை தேர்தலுக்கு முன்பாகவே அறிவிப்போம்.
இவ்வாறு அமித் ஷா கூறினார்.
சோவிடம் நலம் விசாரிப்பு
பத்திரிகையாளர் சோ ராமசாமியை எம்.ஆர்.சி. நகரில் உள்ள அவரது இல்லத்தில் நேற்று காலை 9.30 மணிக்கு அமித் ஷா சந்தித்தார். சோ உடல்நிலை குறித்தும் தமிழக அரசியல் சூழல் குறித்தும் பேசிய அமித் ஷா, அங்கேயே காலை உணவு சாப்பிட்டார். இந்த சந்திப்பின்போது ஆடிட்டர் குருமூர்த்தியும் உடன் இருந்தார்.
மேல்மருவத்தூர் பங்காரு அடிகளாரின் மகன் கோ.ப.செந்தில் குமார், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் விக்கிரமராஜா ஆகியோர் கமலாலயத்தில் அமித் ஷாவை சந்தித்து பேசினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT