Published : 30 Dec 2014 11:05 AM
Last Updated : 30 Dec 2014 11:05 AM

முடக்கப்படும் மதுரை பன்னாட்டு விமான முனையம்:அரசியல் பின்னணி இருப்பதாகக் குற்றச்சாட்டு

மதுரை விமான நிலையத்திலிருந்து சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு விமான சேவைகளைத் தொடங்க வெளிநாட்டு விமான நிறுவனங்களுக்கு முட்டுக்கட்டை போடப்படுவதாக வெளிநாடு வாழ் இந்தியர்கள் குற்றம் சாட்டுகின்றனர்.

மதுரை விமான நிலையத்தின் கஸ்டம்ஸ் (சிறப்பு அனுமதியுடன் வெளிநாட்டு விமானங்களை இயக்கும் விமான நிலையம்) விமான முனையம் ரூ.130 கோடி செலவில் 2010-ல் கட்டிமுடிக்கப்பட்டு பயன்பாட்டுக்கு திறக்கப்பட்டது. இதற்கான கால்கோள் விழாவில் அப்போதைய நிதியமைச்சர் ப.சிதம்பரம், சிவில் விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் பிரபுல் பட்டேல் ஆகியோர் கலந்துகொண்டனர். அப்போது விழாவில் பேசிய அவர்கள், “மதுரையிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏர் இந்தியா நிறுவனம் விரைவில் விமானப் போக்குவரத்தைத் தொடங்கும். அத்துடன் மதுரையிலிருந்து சர்வதேச கார்கோ சேவையும் தொடங்கப்படும்” என்றனர். ஆனால், நான்கு ஆண்டுகளுக்கு மேலாகியும் இதுவரை விமான சேவை தொடங்கப்படவில்லை.

இந்திய பொதுத்துறை விமான நிறுவனங்கள் மதுரையிலிருந்து மலேசியா, சிங்கப்பூர் மற்றும் வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்க முன்வராததால் சிங்கப்பூர், மலேசியாவில் உள்ள வெளிநாடு வாழ் இந்தியர்கள் அந்த நாடுகளின் பிரதமர்களை அணுகி அங்கிருந்து மதுரைக்கு விமான சேவையைத் தொடங்க வலியுறுத்தினர். இதையடுத்து சிங்கப்பூர் அரசு சில்க் ஏர் மற்றும் டைகர் ஏர்வேஸ் விமானங்களையும் மலேசிய அரசு ஏர் ஏசியா, மலிண்டோ விமானங்களையும் மதுரைக்கு இயக்க அனுமதி கோரின. ஆனால், இந்திய பொதுத்துறை விமான நிறுவனங்களுக்கு நஷ்டம் ஏற்படும் என்று சொல்லி அனுமதி மறுத்துவிட்டது இந்திய அரசு.

இந்நிலையில், மதுரையிலிருந்து சிங்கப்பூர், மலேசியா நாடுகளுக்கு விமான சேவையை தொடங்க வலியுறுத்தி மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் ’மதுரை விழிப்புணர்வு இயக்கம்’ பொதுநல வழக்குத் தாக்கல் செய்தது. அந்த வழக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாக நிலுவையில் உள்ளது.

இதுகுறித்து ’தி இந்து’விடம் சிங்கப்பூரிலிருந்து பேசிய மதுரை விழிப்புணர்வு இயக்கத்தின் மகேந்திரன் கூறியதாவது: சிங்கப்பூர், மலேசியாவில் வசிக்கும் தமிழர்களில் பெரும்பாலானோர் தென்மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள். மதுரை விமான நிலையம் முழுவீச்சில் செயல்பட ஆரம்பித்தால் தென் மாவட்டங்கள் வேகமாக முன்னேற்றம் அடையும். ஒரே நேரத்தில் எட்டு சர்வதேச விமானங்களை இயக்கும் அளவுக்கு மதுரை விமான நிலையத்தில் அனைத்து வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளன. ஆனாலும், சிங்கப்பூர், மலேசியாவுக்கு விமானங்களை இயக்க மறுக்கின்றனர்.

இதுதொடர்பாக மத்திய அமைச்சர்களை பலமுறை சந்தித்து நாங்கள் மனு கொடுத்தும் எந்தப் பயனும் இல்லை. சிங்கப்பூர், மலேசியா, இலங்கை மற்றும் வளைகுடா நாடுகளுக்கு விமானங்களை இயக்க இந்தியாவிலுள்ள தனியார் விமான நிறுவனம் ஒன்றுக்கு 2012-ல் அனுமதி கொடுத்துள்ளனர். அரசியல் பின்புலம் கொண்ட அந்த நிறுவனம் கொழும்பு, துபாய்க்கு மட்டும் விமானங்களை இயக்குகிறது. மலேசியாவுக்கும் சிங்கப்பூருக்கும் விமானங்களை இயக்கவில்லை. ஏன் விமான சேவையை அளிக்கவில்லை என்று மத்திய அரசும் அவர்களை கேள்வி கேட்கவில்லை.

சேவையளிக்கத் தயாராய் இருக்கும் சிங்கப்பூர், மலேசிய விமான நிறுவனங்களுக்கு அனுமதி கொடுக்க விடாமல் அரசியல் சக்திகள் தடுக்கின்றன. மதுரையிலிருந்து மட்டுமே தினமும் 350 டன் கார்கோ பொருட்கள் திருச்சி விமானநிலையத்துக்கு அனுப்பப்படுகின்றன. மதுரைக்கு சர்வதேச விமான சேவை முழுமையாக வந்துவிட்டால், இவை அனைத்தும் திருச்சிக்கு போகாது என்பதால் கார்கோ சேவையில் இருக்கும் அரசியல் பினாமிகள் சிலரும் இதற்கு முட்டுக்கட்டை போடுகின்றனர். வெளிநாட்டு விமானங்கள் வர ஆரம்பித்தால் மெடிக்கல் டூரிஸத்திலும் மதுரை முன்னேறிவிடும். இதையெல்லாம் தடுக்கத்தான் சதி நடக்கிறது என்று தெரிவித்தார்.

இதுகுறித்து விமானப் போக்குவரத்துத் துறை அதிகாரிகளிடம் கேட்டபோது, “சிறு நகரங்களிலிருந்து வெளிநாட்டு விமானங்களை இயக்க அனுமதி கிடையாது என்பது அரசின் கொள்கை முடிவு; அதனால் அனுமதிக்கவில்லை’’ என்று தெரிவித்தனர்.

அரசியல் பின்னணி காரணமா?

அதிகாரிகள் தரப்பில் கொள்கை முடிவு என்று சொல்லப்பட்டாலும் இலங்கையைச் சேர்ந்த மினி லங்கா நிறுவனத்துக்கு கொழும்பு - மதுரை விமான சேவைக்கு அனுமதி கொடுத்துள்ளனர். சிவில் விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் அசோக் கஜபதி ராஜுவின் முயற்சியில் விசாகப்பட்டினத்திலிருந்து சிங்கப்பூருக்கு விமானங்களை இயக்க டைகர் ஏர்லைன்ஸ் மற்றும் ஏர் ஏசியா நிறுவனங்களுக்கு அண்மையில் அனுமதியளிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இதற்கு அரசியல் பின்னணி காரணமாக இருக்கலாம் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x