Published : 09 Dec 2014 09:36 AM
Last Updated : 09 Dec 2014 09:36 AM

சிமென்ட் ஒதுக்கீட்டில் தாமதம்: பசுமை வீடு கட்டுமான பணிகள் பாதிப்பு

வாலாஜாபாத் அடுத்த தம்ம னூரில், இருளர் இன மக்களுக்காக கட்டப்பட்டு வரும் பசுமை வீடுகளுக்கு சிமென்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. மேலும், மாவட்டம் முழுவதும் இதே நிலை நீடிப்பதால் பசுமை வீடுகள் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டங்களின் கட்டுமான பணிகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் வாலாஜாபாத் அடுத்த தம்மனூர் ஊராட்சியில் 20-க்கும் மேற்பட்ட குடும்பங்களைச் சேர்ந்த இருளர் இன மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள், தம்மனூர் கிராமப் பகுதியில் உள்ள அரசு நத்தம் புறம்போக்கு நிலத்தில், குடிசை வீடுகள் அமைத்து வசித்து வருகின்றனர். இவர்களில், 2013-14ம் ஆண்டு பசுமை வீடுகள் திட்டத்தில் 16 வீடுகள் மற்றும் இந்திரா நினைவு குடியிருப்பு திட்டத்தில் 3 வீடுகள் என 19 பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு, வீடுகள் கட்டும் பணி நடைபெற்றது.

இதில் அனைத்து வீடு களுக்கும் சிமென்ட் தளம் அமைக்கப்பட்டுள்ளது. மேற்கொண்டு கட்டுமான பணிகளை தொடர்வதற்கான சிமென்ட் வழங்குவதில் தாமதம் ஏற்பட்டுள்ளதால், பணிகள் அனைத்தும் தாமதமாகியுள்ளன. இந்நிலையில், வீடுகள் அமைக்கும் பணிகள் தாமதம் மற்றும் தொழில் இல்லாத காரணத்தால் பயனாளிகளாக தேர்வு செய்யப்பட்ட இருளர் இன மக்கள், தொழிலுக்காக வேறு பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது.

தம்மனூர் ஊராட்சி தலைவர் பயனாளிகளை தேடி பிடித்து மீண்டும் அதேபகுதியில் குடியமர்த்தியுள்ளார்.

இதுகுறித்து, அப்பகுதி இருளர் இன மக்கள் கூறியதாவது: குடியிருக்க வீடும் இல்லை, வருமானத்துக்கு வழியும் இல்லை என்ற நிலையில் வேலை தேடி வெளியூர் சென்றோம்.

வீடுகளை விரைவாக கட்டி தருவதாக கூறி, எங்களை அழைத்து வந்தனர். ஆனால், கட்டுமான பணி இதுவரை தொடங்கப்படவில்லை. வேலை யும் இல்லாததால் நாங்கள் உணவுக்கு கூட கஷ்டப்படும் நிலை உள்ளது. எங்களுக்கு வீடுகளை விரைவாக கட்டிதந்ததால் ஏதேனும் சுயதொழில் செய்தாவது வருமானத்தை தேடிகொள்வோம் என்றனர்.

இதுகுறித்து, காஞ்சிபுரம் வட்டார வளர்ச்சி அலுவலக வட்டாரங்கள் கூறியதாவது: சிமென்ட் ஒதுக்கீடு செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. இதனால் மாவட்டம் முழுவதும் சிமென்ட் விநியோகம் சுணக்கமடைந்து கட்டுமான பணிகள் பாதிக்கப்பட் டுள்ளன. இன்னும் சில நாட்களில், மாவட்டத்துக்கு தேவையான சிமென்ட் வந்துவிடும்.

விரைவில் பசுமை வீடுகளின் கட்டுமான பணிகள் தொடங்கப்படும் என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x