Published : 22 Dec 2014 04:24 PM
Last Updated : 22 Dec 2014 04:24 PM
குடும்ப அட்டைகளில் உள்தாள் இணைப்புப் பணிக்கு காலக்கெடு நிர்ணயிக்கவில்லை என்று தமிழக உணவுத்துறை அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பு:
உணவுப் பொருட்கள் வழங்கல் துறையின் மாநில அளவிலான ஆய்வுக் கூட்டம், அமைச்சர் காமராஜ் தலைமையில் சென்னையில் நேற்று நடந்தது. தற்போதைய குடும்ப அட்டைகளின் செல்லத்தக்க காலத்தை ஓராண்டுக்கு நீட்டிக்கும் வகையில், உள்தாள் ஒட்டும்பணி குறித்து ஆய்வு செய்யப்பட்டது. கூட்டத்தில் அமைச்சர் பேசியது:
இதுவரை ஒரு கோடியே 42 லட்சத்து 93 ஆயிரத்து 355 அட்டைகளில் உள்தாள் ஒட்டும் பணி நிறைவடைந்துள்ளது. குடும்ப அட்டைதாரர்களின் வசதிக்கென அவர்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்ட நாட்களில் அங்காடிகளுக்கு சென்று உள்தாள்களை பெற்றுக் கொள்ளலாம். தங்களுக்கு குறிப்பிடப்பட்ட நாட்களில் செல்ல இயலாதவர்கள், அந்த வாரத்தின் சனிக்கிழமையில் அங்காடிகளில் உள்தாள்களை பெற்றுக் கொள்ளலாம்.
குடும்ப அட்டையில் உள்தாளை இணைத்து பெறுவதற்கு காலக்கெடு எதுவும் நிர்ணயம் செய்யவில்லை. பொதுமக்களுக்கு சிரமமின்றி உள்தாள் இணைப்புப் பணியை துரிதப்படுத்தி முடிக்க வேண் டும்.
வெள்ளை, மஞ்சள் நிற அட்டைகள் புதுப்பிக்க..
பொருட்கள் வாங்காத வெள்ளை நிற குடும்ப அட்டைதாரர்கள் மற்றும் முகவரி ஆதாரத்துக்காக வழங்கப்படும் மஞ்சள் நிற தட்கல் குடும்ப அட்டைதாரர்களுக்கு புதுப்பிக்க இணையதளத்தில் வசதி செய்யப்பட்டுள்ளது. மார்ச் வரை இது செயல்பாட்டில் இருக்கும்.
குடும்ப அட்டை கோரி மனு செய்தவர்கள், குறிப்பிட்ட காலக்கெடுவுக்குள் தகவல்கள் கிடைக்காவிட்டால், உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத் துறை ஆணையாளர் அலுவலக இ-மெயில் முகவரிக்கு கோரிக்கை அனுப்பலாம். அலுவலர்களின் மொபைல்போன் மற்றும் இ-மெயில் முகவரிகள் இத்துறையின் இணையதளத்தில் அளிக்கப்பட்டுள்ளது என்றார் அமைச்சர்.
இக்கூட்டத்தில், உணவுப் பொருள் வழங்கல்துறை முதன்மைச் செயலாளர் முகம்மது நசிமுதீன், ஆணையாளர் எஸ்.கோபாலகிருஷ்ணன், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக நிர்வாக இயக்குநர் எம்.சந்திரசேகரன், கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் ஆர்.கிர்லோஷ்குமார், உணவுப் பொருள் குற்றப்புலனாய்வுத் துறை கூடுதல் இயக்குநர் கே.ராதாகிருஷ்ணன் மற்றும் துறை அலுவலர்கள் பங்கேற் றனர்.
இவ்வாறு அரசு செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT