Published : 22 Dec 2014 03:10 PM
Last Updated : 22 Dec 2014 03:10 PM

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்கள் மதம் மாற்றப்பட்டது ஏமாற்று வேலை: மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் தகவல்

உத்தரப் பிரதேசத்தில் முஸ்லிம்களை மதமாற்றம் செய்தது நம்பகமற்ற, ஏமாற்று வேலை என உத்தரப் பிரதேச மாநில சிறுபான்மையினர் நல ஆணையம் தெரிவித்துள்ளது.

டெல்லியை அடுத்த ஆக்ராவில் கடந்த 8-ம் தேதி ஆர்எஸ்எஸ் சார்பில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 37 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 100 முஸ்லிம்கள் மீண்டும் இந்து மதத்துக்கே மாறினர். இவர்கள் கட்டாய மத மாற்றம் செய்யப்பட்டதாக புகார் எழுந்தது. இந்த விவகாரம் காரணமாக எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றத்தில் அமளியில் ஈடுபட்டனர்.

இந்நிலையில் சம்பவ இடத்தை நேற்று முன்தினம் பார்வையிட்ட உ.பி. சிறுபான்மை யினர் நல ஆணைய 4 உறுப்பினர்கள் குழு அலிகாரில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஆக்ராவில் உள்ள இந்து சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியப் பிரமுகர்களை நாங்கள் சந்தித்து பேசினோம். அங்கு நடைபெற்ற மத மாற்ற நிகழ்ச்சிக்கு தாங்கள் அனுமதி அளிக்கவில்லை என்று அவர்கள் தெரிவித்தனர்.

எனவே, இந்த சம்பவம் ஒரு ஏமாற்று வேலை. அது நம்பகமானது அல்ல.

இதுபோல கிறிஸ்துமஸ் தினத் தன்று அலிகார் மாவட்டத்தில் கிறிஸ்தவர்களை இந்து மதத் துக்கு மாற்றுவதற்கான நிகழ்ச்சிக்கு சில அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்தன. இதற்கு மாவட்ட நிர்வாகம் அனுமதி மறுத் திருப்பது பாராட்டுக்குரியது. இவ்வாறு தெரிவித்துள்ளனர்.

இந்த ஆணைய உறுப்பினர்களில் ஒருவரான ஜுல்பிகர் அலி கூறும்போது, “முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியின் போது சிறுபான்மையினருக்கு பாதுகாப்பான சூழல் நிலவியது என்பதைக் கூறுவதில் தயக்கம் இல்லை. ஆனால் இப்போதைய பாஜக தலைமையிலான ஆட்சியில் அத்தகைய பாதுகாப்பு வேகமாக காணாமல் போய்விட்டது. இது வருத்தமளிக்கிறது” என்றார்.

இந்த ஆணையத்தின் முழு அறிக்கை அடுத்த மாதம் வெளியாகும் என எதிர்பார்க் கப்படுகிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x