Published : 07 Dec 2014 09:46 AM
Last Updated : 07 Dec 2014 09:46 AM

கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி கொடுங்கள்: பொதுமக்களுக்கு முதல்வர் வேண்டுகோள்

கொடிநாள் நிதிக்கு தாராளமாக நிதி அளிக்குமாறு தமிழக மக்களுக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

கொடிநாளை முன்னிட்டு நேற்று அவர் வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில் கூறியிருப்பதாவது:

பாரதத் திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாக காக்கும் முப்படை வீரர்களின் அரும்பணிகளையும், தியாகத் தையும் போற்றும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 7-ம் தேதி படை வீரர் கொடி நாளாக அனுசரிக்கப்படுகிறது. தேசத்தை காத்திடும் தியாக உணர்வுமிக்க பணியில் ஈடுபடும் முப்படை வீரர்களின் குடும்ப நலன்களையும், முன்னாள் படைவீரர்களின் நலன்களையும் காப்பது நமது கடமை ஆகும்.

இந்த சமுதாய கடமையை நிறைவேற்றும் வகையில் கொடி விற்பனை மற்றும் நன்கொடை மூலம் திரட்டப்படும் நிதி, படைவீரர் குடும்பத்தினரின் நல்வாழ்வுக்காகவும் உடல் உறுப்புகளை இழந்த வீரர்களின் மறுவாழ்வு பணிகளுக்காகவும் பயன்படுத்தப்படுகிறது.

முப்படை பணியில் உயிர் நீத்தோரின் வாரிசுதாரர்களுக்கு உயர்த்தப்பட்ட கருணைத் தொகை, கருணை அடிப்படையில் பணி, முன்னாள் படைவீரர் கழகம் மூலம் பணிபுரியும் பணியாளர்களுக்கு உயர்த்தப்பட்ட தொகுப்பூதியம், முன்னாள் படைவீரரின் மகள் திருமணத்துக்கு உயர்த்தப்பட்ட மானியம், வீர தீரச் செயல்கள் மற்றும் சிறப்பாக பணிபுரிந்தமைக்கான விருது மற்றும் பதக்கம் பெறும் தமிழகத்தைச் சேர்ந்த படைவீரர்களுக்கு உயர்த்தப்பட்ட பணப்பயன்கள் என பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியவர் ஜெயலலிதா. அவர் வழியில் செயல்படும் தமிழக அரசு இவற்றை சீரிய முறையில் செயல்படுத்தி வருகிறது.

முப்படை வீரர்களின் நலன் காப்பதில் முன்னோடியாக விளங்கும் தமிழக அரசால் திரட்டப்படும் கொடி நாள் நிதிக்கு தமிழக மக்கள் அனைவரும் தாராளமாக நிதி வழங்கி உதவி செய்யுமாறு அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த செய்தியில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x