Published : 20 Dec 2014 11:13 AM
Last Updated : 20 Dec 2014 11:13 AM
காவிரி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைகளில் அனைத்துக் கட்சியினரையும் ஒன்று திரட்டி, பிரதமர் நரேந்திர மோடியை சந்தித்து பேசி தீர்வுகாண வேண்டும் என்று முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஈவிகேஎஸ் இளங்கோவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் மாநில நிர்வாகிகள் மற்றும் மாவட்டத் தலைவர்கள் கூட்டம் சென்னையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டத்துக்கு தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் தலைமை வகித்தார். அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி பொதுச் செயலாளரும், தமிழக காங்கிரஸ் பொறுப்பாளருமான முகுல் வாஸ்னிக், செயலாளர் டாக்டர் ஜி.சின்னா ரெட்டி, முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம், கே.வி.தங்கபாலு உட்பட பலர் இதில் கலந்துகொண்டனர். இக்கூட்டத்துக்கு பிறகு நிருபர்களிடம் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியதாவது:
காங்கிரஸ் கட்சிக்கான உறுப்பினர் சேர்க்கை முகாம் புத்தாண்டு தினத்தன்று தொடங்கப்படுகிறது. இந்த முகாம் ஒரு மாதம் நடைபெறும். இந்த உறுப்பினர் சேர்க்கை முகாமுக்கு, ராகுல்காந்தியை அழைத்துள்ளோம். ஜனவரி மாதம் அவர் வரக்கூடும்.
பாஜக அரசு, இந்தி, சமஸ்கிருதம் ஆகியவற்றை கொல்லைப்புற வழியாக நுழைக்க முயற்சி மேற்கொண்டு வருகிறது. இதைத் தமிழக காங்கிரஸ் கட்சி வன்மையாகக் கண்டிக்கிறது. பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் விலை சர்வதேச சந்தையில் 40 சதவீதம் அள வுக்கு குறைந்துள்ளது. ஆனால், மத்திய அரசு அவற்றின் மீதான விலையை 13 சதவீதம் மட்டுமே குறைத்துள்ளது.
காவிரி, முல்லைப் பெரியாறு அணைப் பிரச்சினைகளில் கர்நாடகா, கேரளா மாநிலங்களில் உள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருகின்றன. தமிழக முதல்வர் ஓ.பன்னீர்செல்வமும் அனைத் துக் கட்சியினரையும் புதுடெல்லிக்கு அழைத்துச் சென்று பிரதமர் நரேந்திர மோடியை நேரில் சந்தித்து, பேச்சுவார்த்தை நடத்தி இப்பிரச்சினைக்கு ஒரு தீர்வுகாண வேண்டும்.
இவ்வாறு இளங்கோவன் கூறினார்.
தமிழக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளர் முகுல் வாஸ்னிக் நிருபர்களிடம் கூறியதாவது:
தமிழகத்தில் காங்கிரஸ் கட்சி பின்தங்கிய நிலையில் உள்ளது. இழந்த இடத்தை மீண்டும் பிடிப்போம். காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகிய வாசன், ஞானதேசிகன் உள்ளிட்டோர் கட்சியில் இருந்து விலகியதற்கு, தமிழக காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய பொறுப்பாளரே காரணம் என என் மீது பழிசுமத்தியுள்ளனர். அவர்களின் குற்றச்சாட்டில் உண்மையில்லை. நான் அவர்களுடன் கடந்த 12 ஆண்டுகளாக நல்லுறவை வளர்த்து வந்துள்ளேன்.
இவ்வாறு முகுல் வாஸ்னிக் கூறினார்.
முன்னதாக, இக்கூட்டத்தில் பாஜகவின் மொழித் திணிப்பு கொள்கையை கண்டித்தும், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை முடக்குவதை கண்டித்தும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT