Published : 28 Dec 2014 11:26 AM
Last Updated : 28 Dec 2014 11:26 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்கக் கோரி ஆர்ப்பாட்டம்: விவசாய சங்கங்கள் தீர்மானம்

காவிரி மேலாண்மை வாரியம், காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும், மீத்தேன் திட்டத்துக்கு கடந்த ஆட்சியில் வழங்கப்பட்ட அனுமதியை ரத்து செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் ஜனவரி மாதம் சென்னையில் சாஸ்திரி பவன் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்த விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழு முடிவு செய்துள்ளது.

திருவாரூர் மாவட்ட அனைத்து விவசாய சங்கங்களின் ஒருங்கிணைப்புக் குழுவின் ஆலோசனைக் கூட்டம் திருவாரூரில் நேற்று முன்தினம் மாலை நடைபெற்றது.

கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்: காவிரி டெல்டா மாவட்டங்களுக்கு பேரழிவை ஏற்படுத்தும் மீத்தேன் எரிவாயு எடுக்கும் திட்டத்துக்கு கடந்த ஆட்சிக் காலத்தில் வழங்கப்பட்ட ஒப்பந்தம் டிசம்பர் மாதத்துடன் காலாவதியாகிறது. இந்த ஒப்பந்தத்தைப் புதுப்பிக்க அந்த தனியார் நிறுவனம் மறைமுக நடவடிக்கைகளில் ஈடுபடுவதாக கூறப்படுகிறது.

தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா, கடந்த சுதந்திர தின உரையில் மீத்தேன் எரிவாயு எடுக்க தமிழக அரசு அனுமதிக்காது என ஆணித்தரமாக அறிவித்தது விவசாயிகளுக்கு நம்பிக்கையை ஏற்படுத்தியது. ஆனால், அதன் தற்போதைய நிலையையும் தமிழக அரசு தெளிவுபடுத்த வேண்டும்.

விவசாயிகளின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் நோக்கத்துடன் சங்கத்தின் ஒருங்கிணைப்புக் குழுத் தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் மீது வழக்கு பதிய காவல் துறையை அச்சுறுத்தும் ஒருசில சக்திகளை கண்டிக்கிறோம். இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்ற வேண்டும் என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூட்டத்துக்கு, நெல் ஜெயராமன் தலைமை வகித்தார். தலைவர் பி.ஆர்.பாண்டியன் மற்றும் நிர்வாகிகள் கிருஷ்ணமணி, பழனிவேல், ராமச்சந்திரன், சந்திரசேகரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x