Published : 31 Dec 2014 12:14 PM
Last Updated : 31 Dec 2014 12:14 PM
‘சென்னை ஓபன் டென்னிஸ் 2015’ வரும் ஜனவரி 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது. இப்போட்டி சிறப்பாக நடைபெறும் பொருட்டு தமிழ்நாடு அரசு தனது பங்களிப்பாக 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாடு டென்னிஸ் சங்கத்தால் ஆண்டுதோறும் சென்னையில் நடத்தப்பட்டு வருகின்ற உலகப் புகழ் பெற்ற டென்னிஸ் விளையாட்டு வீரர்கள் கலந்து கொள்ளும் மிக முக்கியப் போட்டியான சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியினை 2005-ஆம் ஆண்டு சிறப்பாக நடத்திட அப்போதைய முதல்வர் ஜெயலலிதா முதன் முறையாக தமிழ்நாடு அரசின் சார்பில் 1 கோடி ரூபாய் நிதி வழங்கினார்.
பின்னர், ஜனவரி 2014-ல் நடைபெற்ற சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியை சிறப்பாக நடத்திடும் வகையில் தமிழ்நாடு அரசின் சார்பில் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்பட்டது.
மேலும் 2014 முதல் 2016 வரையிலான மூன்று ஆண்டுகளுக்கு சென்னை ஓபன் டென்னிஸ் போட்டியினை நடத்துவதற்கு ஒவ்வொரு ஆண்டிற்கும் 2 கோடி ரூபாயினை தமிழ்நாடு அரசு வழங்கும் வகையில் தமிழ்நாடு அரசினை ‘தலைமை பிளாட்டின நிதி ஆதரவாளராகக்’ கொண்டு நிதி ஆதரவு தரும் பிற நிறுவனங்களை இணைத்து ‘நிதி ஆதரவாளர் குழுமத்தை’ நியமனம் செய்து முன்னாள் முதல்வர் உத்தரவிட்டார்.
இதுதவிர தமிழ்நாடு அரசு சென்னை நுங்கம்பாக்கத்தில் அமைந்துள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய டென்னிஸ் விளையாட்டு அரங்கத்தினை 4 கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில் புனரமைத்திட ஆணையிடப்பட்டது. அதனடிப்படையில் சென்னை, நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் அனைத்து புனரமைப்புப் பணிகளும் மேற்கொள்ளப்பட்டு, தற்போது இந்த டென்னிஸ் விளையாட்டு அரங்கம் உலகத்தரத்திற்கு இணையாக மேம்படுத்தப்பட்டுள்ளது.
இவ்வாறு அனைத்து வசதிகளுடன் மேம்படுத்தப்பட்ட நுங்கம்பாக்கம் டென்னிஸ் விளையாட்டரங்கத்தில் தான் ‘சென்னை ஓபன் டென்னிஸ் 2015’ வரும் ஜனவரி 5-ம் தேதி முதல் 11-ம் தேதி வரை நடைபெறவுள்ளது.
சென்னை மாநகருக்கும், தமிழகத்திற்கும் பெருமை சேர்க்கும் வகையில் நடைபெறவுள்ள இந்த ‘சென்னை ஓபன் டென்னிஸ் 2015’ சீருடனும் சிறப்புடனும் நடைபெறும் பொருட்டு, தமிழ்நாடு அரசு தன் பங்களிப்பாக 2 கோடி ரூபாய் வழங்கியுள்ளது.
இதன்மூலம், தமிழ்நாட்டில் இளைஞர்களிடையேயும் டென்னிஸ் ஆர்வலர்களிடையேயும் டென்னிஸ் விளையாட்டினை மேலும் பிரபலம் அடையச் செய்து அதன்மூலம் இம்மாநிலத்திலிருந்து அதிகப்படியான வீரர்கள் இவ்விளையாட்டில் ஆர்வம் கொண்டு பயிற்சி பெற்று விளையாடி வெற்றி கண்டு உலக அரங்கில் தமிழ்நாட்டிற்கும் இந்தியாவிற்கும் புகழ் தேடித்தர வாய்ப்பு உருவாகும்" என குறிப்பிடப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT