Published : 31 Dec 2014 10:07 AM
Last Updated : 31 Dec 2014 10:07 AM
பிரசவ சிகிச்சையின்போது 4 பெண்கள் மரணமடைந்தது தொடர்பாக உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் மருத்துவப் பணிகள் திட்ட இயக்குநர் சண்முகம், மருத்துவப் பணிகள் இயக்குநர் சந்திரநாதன் ஆகியோர் ஆய்வு நடத்தினர்.
உதகை அரசு மகப்பேறு மருத்துவ மனையில் கடந்த 23-ம் தேதி முதல் 29 வரை பிரசவத்துக்காக அனுமதிக்கப்பட்டிருந்த ஜெயந்தி, அமுதா, சரஸ்வதி ஆகிய மூவரும் உயிரிழந்தனர். மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராதிகா நேற்று உயிரிழந்தார்.
பெண்கள் இறந்ததற்கு சிகிச்சை குறைபாடு, மருந்துகளின் தரம் காரணமில்லை என, மருத்துவப் பணிகள் திட்ட இயக்குநர் சண்முகம், மருத்துவப் பணிகள் இயக்குநர் மருத்துவர் சந்திரநாதன் ஆகியோர் தெரிவித்தனர். உதகை மகப்பேறு மருத்துவமனையை நேற்று ஆய்வு செய்து, சுகாதாரத் துறை இயக்குநர் அமராவதி ராஜனிடம் ஆலோசனை நடத்தினர். பின்னர் செய்தியாளர்களிடம் அவர்கள் கூறியது: மூச்சுத் திணறல், ரத்தப்போக்கு காரணமாக 4 பேரும் உயிரிழந்துள்ளனர். சிகிச்சை குறைபாடு, மருந்துகள் தரம் உள்ளிட்டவை காரணம் இல்லை. உதகை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்றும், ரேவதிக்கு பல உறுப்புகள் செயலிழந்து வருகின்றன. அவருக்கு தட் அணுக்கள் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதால், 3 யூனிட் தட் அணுக்கள் செலுத்தப்பட்டுள்ளன. அவரது உடல்நிலையை தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.
பிரசவத்தின்போது ரத்தப்போக்கு, உயரழுத்தம், எக்லிசியா உள்ளிட்டவற்றால் தமிழகத்தில் லட்சத்தில் 69 பேரும், நாடு முழுவதும் 140 பேரும் உயிரிழக்கின்றனர்.
உதகை அரசு மகப்பேறு மருத்துவமனையில் கடந்த ஆண்டு நவம்பர் முதல் இந்த ஆண்டு நவம்பர் வரை நடந்துள்ள 2,947 பிரசவங்களில், 1,356 அறுவைச் சிகிச்சைகளும் அடங்கும். இதில் ஒரு மரணம்கூட ஏற்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. மருத்துவமனையில் ஒரே ஒரு செயற்கை சுவாசக் கருவி மட்டும் உள்ளதால், உடனடியாக மூன்று கருவிகள் வாங்க உத்தரவிடப்பட்டுள்ளது. கோவை மருத்துவக் கல்லூரியில் இருந்து மகப்பேறு மருத்துவர் இருவரை, இங்கு ஒரு மாதம் தங்கி சிகிச்சை அளிக்கவும், செவிலியர்களுக்கு பயிற்சி அளிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது என்றனர்.
தொடர் இறப்பு சம்பவங்களால் பிரசவத்துக்காக வரும் பெண்கள், இரு நாட்களுக்கு கோவைக்கு அனுப்பப்படுகின்றனர் என்றனர்.
இந்த சம்பவம் குறித்து நீதி விசாரணை நடத்த வேண்டுமென, அரசியல் கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT