Published : 23 Dec 2014 08:54 AM
Last Updated : 23 Dec 2014 08:54 AM

நேரடி காஸ் மானியத் திட்டத்தை செயல்படுத்த தடைகோரி வழக்கு: மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

ஆதார் கார்டு மற்றும் காஸ் சிலிண்டர் நேரடி மானியத் திட்டத்துக்கு எதிரான வழக்கில் மத்திய அரசு பதில் மனு தாக்கல் செய்ய உயர் நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டது.

வீட்டு உபயோக சிலிண் டருக்கான மானியம் பெறுவதற்கு ஆதார் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு எண் கேட்பதற்கு எதிராக, சிவகாசி வழக்கறிஞர் எஸ்.எம். ஆனந்தமுருகன், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதில் வீட்டு உபயோக சிலிண்டருக்கான மானியம் பெற, ஆதார் அடையாள அட்டை மற்றும் வங்கிக் கணக்கு எண் சமர்ப்பிக்குமாறு இணைப்புதாரர்களுக்கு காஸ் ஏஜென்சிகள் செல்போன் மூலம் குறுந்தகவல்கள் அனுப்பி வருகின்றன. ஆதார் கார்டு கேட்கக்கூடாது என ஏற்கெனவே உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளன.

இந்த உத்தரவை மீறி, தற்போது காஸ் பதிவுக்கு ஆதார் கார்டு மற்றும் வங்கிக் கணக்கு எண் கேட்கின்றனர். இதனால், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயுத்துறை செயலர் சவுரவ் சந்திரா, இந்திய எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத் தலைவர் தினேஷ் கே.சராப் ஆகியோர் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் எனக் கூறப்பட்டிருந்தது.

இந்த மனுக்கள் நீதிபதிகள் வி.தனபாலன், வி.எம்.வேலுமணி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் தரப்பில் கூடுதல் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதில், இந்த வழக்குக்குப் பின், காஸ் மானியம் பெற ஆதார் கார்டு நகல் அளிப்பது கட்டாயம் அல்ல என மத்திய அரசு அறிவித்தது. இதையடுத்து, காஸ் ஏஜென்சிகள் இணைப்புதாரர்களுக்கு புதிய விண்ணப்பங்களை வழங்கி வருகின்றன.

அந்த விண்ணப்பத்தில், ஆதார் கார்டு இல்லாதவர்கள், வங்கிக் கணக்கு எண்ணை கொடுக்க வேண்டும், ஆதார் கார்டு கிடைத்ததும் அதன் நகலை சமர்பிக்க உறுதி அளிக்குமாறு கூறப்பட்டுள்ளது. இது நீதிமன்ற அவமதிப்பாகும்.

மேலும், அந்த ஒருங்கிணைந்த விண்ணப்பத்தில், வங்கிக் கணக்கு ரத்தானால், மானியத் தொகையை வங்கிகள் தர மறுத்தால் எண்ணெய் நிறுவனங்களுக்கு எதிராக வழக்கு தொடர மாட்டேன் எனவும் உறுதி கேட்கப்படுகிறது. அஞ்சல் அலுவலகங்களில் பலர் கணக்கு வைத்துள்ளனர். கூட்டுறவு வங்கிகளில் கணக்கு வைத்திருப்பவர்களுக்கு எப்படி மானியம் வழங்கப்படும் என்பதும் தெளிவாகக் குறிப்பிடப்பட வில்லை. பல்வேறு குழப்பங்கள் உள்ளன.

காஸ், பெட்ரோல், டீசல் விலைகளை நிர்ணயம் செய்ய எண்ணெய் நிறுவனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 2 ஆண்டுகளுக்கு முன் 115 டாலராக இருந்த கச்சா எண்ணெய் விலை, தற்போது 50 சதவீதம் குறைந்துள்ளது.

இதனால் மக்களுக்கு தற்போது உள்ள முறைப்படி மானியம் வழங்கு வதில் சிரமம் இல்லை. எனவே, வங்கிகள் மூலம் மானியம் பெறும் திட்டத்தை அமல்படுத்தக்கூடாது எனக் கூறப்பட்டிருந்தது.

இதையடுத்து, இந்த மனுக்களுக்கு மத்திய அரசு பதிலளிக்க நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் விசாரணையை ஜனவரி 9-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x