Published : 29 Dec 2014 08:22 AM
Last Updated : 29 Dec 2014 08:22 AM

ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை தொடங்காவிட்டால் வேலைநிறுத்தப் போராட்டம் தொடரும்: போக்குவரத்து தொழிற்சங்கங்கள் அறிவிப்பு

ஊதிய உயர்வு குறித்து அமைச்சர் தலைமையில் பேச்சுவார்த்தை தொடங்காவிட்டால் வேலை நிறுத்தப் போராட்டம் தொடரும் என்று அரசு போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தெரிவித் துள்ளன.

வேலைநிறுத்தம் தொடர்பாக தொமுச, சிஐடியு, ஏஐடியுசி உள்ளிட்ட 11 தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் சென்னை பல்லவன் இல்லத்தில் உள்ள தொமுச அலுவலகத்தில் நேற்று அவரச ஆலோசனை நடத்தினர். இதில், தொமுச சார்பில் மு.சண்முகம், நடராஜன், சிஐடியு சார்பில் சவுந்தரராஜன் எம்எல்ஏ, ஆறுமுகநயினார், சந்திரன், ஏஐடியுசி சார்பில் ஜெ.லட்சுமணன், எஸ்.கஜேந்திரன், ஐஎன்டியுசி சார்பில் எம்.கே.விஷ்ணுபிரசாத், சுப்பராயன் உட்பட பல்வேறு தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

பின்னர் நிருபர்களிடம் சிஐடியு தலைவர் அ.சவுந்தரராஜன், தொமுச சண்முகம் ஆகியோர் கூறியதாவது:

இந்த வேலை நிறுத்தத்துக்கு தமிழக அரசுதான் காரணம். அரசு மீது தொழிலாளர்களுக்கு ஏற்பட்ட அதிருப்தி காரணமாக நாளை (29-ம் தேதி) தொடங்க வேண்டிய வேலைநிறுத்தம் இன்றே தொடங்கியுள்ளது. தமிழகம் முழுவதும் 80 சதவீத பஸ்கள் ஓடவில்லை.

போக்குவரத்து ஊழியர்களுக்கு 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிய ஊதிய ஒப்பந்தம் போட வேண்டும். பழைய ஒப்பந்தம் முடிந்து ஓராண்டு ஆகியும் முறையாக பேச்சுவார்த்தைகூட தொடங்கவில்லை. ஓய்வூதிய பலன்கள், பணி நிரந்தரம் உள்ளிட்ட கோரிக்கைகள் குறித்து அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை நடத்த நிர்வாகம் முன்வரவில்லை. கடந்த 2 நாட்கள் நடந்த பேச்சுவார்த்தையிலும் எந்த உறுதியும் அளிக்கவில்லை.

தொமுச வழக்கு நீதிமன்றத்தில் இருப்பதை காரணம் காட்டி, காலதாமதம் ஏற்படுத்துகின்றனர். தொழிற்சங்கங்களுக்குள் எந்தப் பிரச்சினையும் இல்லை என கையொப்பமிட்டு கடிதம் வழங்கி இருக்கிறோம். அதை அவர்கள் ஏற்க மறுக்கின்றனர். கடந்த 15 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். எனவே, போக்குவரத்துத் துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும். இல்லாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்தம் தொடரும்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

கடந்த 15 மாதங்களாக பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறோம். எனவே, போக்குவரத்துத் துறை அமைச்சர், செயலாளர் ஆகியோர் தலைமையிலான உயர்மட்ட பேச்சுவார்த்தையை உடனே தொடங்க வேண்டும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x