Published : 03 Dec 2014 08:09 AM
Last Updated : 03 Dec 2014 08:09 AM

5 மாநிலங்களில் வங்கி ஊழியர் வேலை நிறுத்தம்: ரூ.1.75 லட்சம் கோடி வர்த்தகம் முடக்கம்

ஊதிய உயர்வு, பணி வரன்முறை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழகம் உட்பட 5 மாநிலங்கள் மற்றும் 2 யூனியன் பிரதேசங்களில் வங்கி ஊழியர்கள் நேற்று வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். இதனால் ரூ.1.75 லட்சம் கோடி மதிப்பிலான வர்த்தகம் பாதிக்கப்பட்டது.

கடந்த 2 ஆண்டுகளாக நிலுவையில் இருந்துவரும் சம்பள உயர்வை அமல்படுத்த வேண்டும், வாரத்தில் 5 நாட்கள் வேலை, புதிதாக பணிக்கு சேர்ந்தவர்களுக்கும் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும், அதிகாரிகளின் பணி நேரத்தை வரைமுறைப்படுத்த வேண்டும் என்பது உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அகில இந்திய வங்கி ஊழியர்கள் சங்கம் சார்பில், பல்வேறு கட்டங் களாக வேலை நிறுத்தப் போராட் டங்கள் நடத்தப்பட்டு வருகிறது.

வங்கி உயர் அதிகாரிகள் முதல், கடைநிலை ஊழியர்கள் வரை அனைத்து பிரிவு ஊழியர் சங்கங்களும் ஒருங்கிணைந்து இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். இதன்படி, முதல் கட்டமாக நேற்று தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம், ஆந்திரம், தெலுங்கானா ஆகிய 5 மாநிலங்கள் மற்றும் புதுவை, லட்சத்தீவுகள் ஆகிய 2 யூனியன் பிரதேசங்களில் வேலைநிறுத்தம் நடைபெற்றது. இதில் தென் மாநிலங்களைச் சேர்ந்த வங்கி ஊழியர்கள் 2.5 லட்சம் பேர் பங்கேற்றனர்.

வேலை நிறுத்தப் போராட்டம் குறித்து, இந்திய வங்கி ஊழியர்கள் கூட்டமைப்பின் தமிழகப் பிரிவு பொதுச் செயலாளர் சி.பி.கிருஷ்ணன் கூறியதாவது:

ஊதிய உயர்வு உட்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோம். இந்த வேலை நிறுத்தத்தில் பொதுத்துறை மற்றும் சில தனியார் வங்கிகளின் 30 ஆயிரம் கிளைகளில் பணிபுரியும் மொத்தம் 2.5 லட்சம் ஊழியர்கள் பங்கேற்றுள்ளனர்.

இந்த வேலை நிறுத்தம் காரணமாக, ரூ.1.75 லட்சம் கோடி அளவுக்கு வங்கி பணப் பரிவர்த்தனை முடங்கியது. 3-ம் தேதி வடக்கு மண்டலத்திலும், 4-ம் தேதி கிழக்கு மண்டலத்திலும், 5-ம் தேதி மேற்கு மண்டலத்திலும் இந்த வேலை நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

வங்கித் துறையில் 25 ஆயிரம் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளது. குறைவான எண்ணிக்கையிலான ஊழியர்களைக் கொண்டு பணிபுரிந்து வரும் வேளையில், பிரதமரின் ஜன் தன் திட்டத்தின் கீழ் ஆயிரக்கணக்கான புதிய சேமிப்புக் கணக்குகள் தொடங் கப்பட்டுள்ளன. எங்கள் கோரிக் கைகள் நிறைவேற்றப்பட வில்லையெனில், அடுத்த கட்டமாக தொடர் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட திட்டமிட்டுள்ளோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த வேலை நிறுத்தப் போராட்டம் காரணமாக, தமிழகம் முழுவதும் வங்கிப் பணிகள் பாதிக்கப்பட்டது.

தனியார் வங்கிகளான ஐசிஐசிஐ, எச்டிஎப்சி, ஆக்சிஸ் வங்கிகள் வழக்கம் போல் செயல்பட்டன.

சென்னையில் வேலை நிறுத்தத்தில் பங்கேற்ற வங்கி அதிகாரிகளும், ஊழியர்களும் ஆட்சியர் அலுவலகம் அருகில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர்.

இதில், அகில இந்திய வங்கி ஊழியர் சங்க பொதுச் செயலாளர் சி.எச்.வெங்கடாசலம், பல்வேறு சங்க பிரதிநிதிகள் மற்றும் ஏராளமான வங்கி ஊழியர்கள் பங்கேற்றனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x