Published : 15 Dec 2014 11:59 AM
Last Updated : 15 Dec 2014 11:59 AM

‘குடும்பத்தை கவனிக்காத ரசிகர் தேவையில்லை’: நடிகர் விஜய் உருக்கம்

‘தனது குடும்பத்தை கவனிக்காத ரசிகர் தேவையில்லை’ என, திருநெல்வேலியில் நடிகர் விஜய் பேசினார்.

நடிகர் விஜய் நடித்த கத்தி படத்தின் 50-வது நாள் வெற்றி விழா மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, திருநெல்வேலி பாளையங்கோட்டை நீதிமன்ற வளாகத்துக்கு எதிரே உள்ள மைதானத்தில் நேற்று நடைபெற்றது.

விழாவில் விஜய் பேசும்போது, ‘விவசாயத்துக்கு பெயர்பெற்ற திருநெல்வேலியில் கத்தி திரைப்பட வெற்றி விழா நடப்பது பொருத்தமானது. வெற்றி-தோல்வி இடையே சிறிய வித்தியாசம்தான் உள்ளது. கடமையை சரியாக செய்தால் வெற்றி. கடமைக்காக செய்தால் தோல்வி. இயக்குநர் ஏ.ஆர்.முருகதாஸும், நானும் கடமையை மிகவும் சரியாக செய்ததால் கத்தி படம் வெற்றியைத் தந்துள்ளது. எந்த செயலிலும் முயற்சியை விட அதிகமாக எதிர்ப்பு இருக்கும். அதைக்கண்டு அஞ்சாமல் உறுதியோடு செயல்பட வேண்டும்.

எதிரிகளை அவர்களது போக்கிலேயே விட்டு வெற்றி காண வேண்டும். குடும்பத்தைக் கவனிக்காமல் எனக்கு ரசிகராக மட்டும் இருப்பதில் உடன்பாடில்லை. குடும்பத்துக்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.

மனைவி கடவுள் தந்த பரிசு, தாய் கடவுளுக்கு நிகரான பரிசு, நண்பன் கடவுளுக்கும் கிடைக்காத பரிசு என்பதை உணர்ந்து வாழ வேண்டும். பணம் கொடுத்து படம் பார்க்கும் ஒவ்வொரு ரசிகரும் எனக்கு முதலாளிதான்’ என்றார் அவர்.

பல்வேறு நலத்திட்ட உதவிகளை விஜய் வழங்கினார்.

தென் மாவட்டங்களில் இருந்து ஆயிரக்கணக்கான ரசிகர்கள் கலந்து கொண்டனர். தூத்துக்குடி- திருச்செந்தூர் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டதால் வாகனங்கள் வேறு பாதையில் திருப்பிவிடப்பட்டன.

விஜய் மேடைக்கு வந்ததும், அருகே வைக்கப்பட்டிருந்த 40 அடி உயர அவரது படத்துக்கு ரசிகர்கள் பாலாபிஷேகம் செய்தனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x