Published : 16 Apr 2014 10:19 AM
Last Updated : 16 Apr 2014 10:19 AM
அழுக்கடைந்த சட்டை, லுங்கியுடன் சங்கரன்கோவில் அரசு மருத்துவமனை குழந்தைகள் பிரிவின் வாயிலில் நின்றுகொண்டு தன் மகனை பார்க்க வருவோரைக் கைகூப்பி வரவேற்கிறார் அவர். இன்னும் சகஜநிலையை எட்டவில்லை என்பதை அவரது முகம் சொல்லாமல் சொல்கிறது. கண்களில் நீர் திரையிட்டிருக்கிறது.
அவர் வேறுயாருமல்ல சங்கரன்கோவிலில் இருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ள குத்தாலப்பேரி என்ற கிராமத்தில் 400 அடி ஆழ்துளை குழியில் இருந்து போர்வெல் ரோபோ மூலம் உயிருடன் மீட்கப்பட்ட ஹர்சனின் தந்தை வி. கணேசன். சங்கரன்கோவில் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொழிற் கல்வி ஆசிரியராகப் பணிபுரிகிறார். வருவோருக் கெல்லாம் நடந்ததை துக்கம் தோய்ந்த முகத்துடன் பகிர்ந்து கொண்டிருந்தார். செல்போனில் தொடர்புகொண்டு நலம் விசாரித்தவர்கள், நேரில் வந்த உறவினர்களிடம் மகன் நன்றாக இருப்பதாக அவர் பதில் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவரிடம் பேசினோம். பல்வேறு விஷயங்களை நம்மிடம் பகிர்ந்து கொண்டார்.
எனது மூத்த மகன் ஹர்சன். 2-வது மகள் ஸ்ரீ வைஷ்ணவி. திருமணம் முடிந்த ஓராண்டிலேயே ஹர்சன் பிறந்தான். தாத்தா, பாட்டியிடம் ஒன்றரை வயசுவரை வளர்ந்தான். அதனால் அவர்களிடம் அவனுக்கு பிரியம் அதிகம்.
ஒருவாரத்துக்கு முன்னாடிதான் எனது எலுமிச்சை தோட்டத்திலே போர் போட்டேன். தண்ணீர் வரல. அதன்மேல் சாக்குபோட்டு மூடிவைத்திருந்தேன். திங்கள் கிழமை காலையில் தோட்டத்துக்கு மோட்டார் சைக்கிளில் மகனை அழைத்துச் சென்றிருந்தேன். மோட்டார் சைக்கிளில் இருந்து இறங்கி ஓடியவன் திடீரென்று குழிக்குள் எனது கண்முன் விழுந்துவிட்டான். நெஞ்சே அடைச்சதுமாதிரி ஆயிட்டது. பதறிப்போய் 108 ஆம்புலன் சுக்குத்தான் போன் செய்தேன். அவர்கள்தான் தீயணைப்பு நிலையத்துக்கும் போலீஸாருக்கும் தகவல் தெரிவித்தனர். அரைமணி நேரத்துக்குள்ள அனைவரும் அங்குவந்து குழிக்குள்ள டியூப் மூலம் ஆக்சிஜனை செலுத்தினர். எனக்கு ஊக்கம் அளித்து மகனுடன் பேசிக்கொண்டே இருக்கும்படி கூறினர். நானும், எனது மனைவி தமிழ்செல்வியும் அவனிடம் பேச்சுக்கொடுத்துக் கொண்டே இருந்தோம்.
அப்புறம் கலெக்டர், எஸ்பி என்று அதிகாரிகள் அங்குவந்தனர். கலெக்டரோட நடவடிக்கையால மகன காப்பாத்த முடிஞ்சது. அவரு மதுரை கலெக்டருக்கு போன்செய்து மீட்பு குழுவை வரவழைச்சாரு. மதுரையில் இருந்து இங்குவர 3 மணிநேரம் ஆகும். ஆனால் ஒன்றே கால் மணிநேரத்தில் மீட்பு குழுவினர் அங்கு வந்து எம்பிள்ளைய காப்பாத்திட்டாங்க. மகனை குழியிலிருந்து வெளியே தூக்கினபோது போன உசுரு திரும்பி வந்தது மாதிரி இருந்தது. எல்லாரோட பிரார்த்தனையும் என் மகனை காப்பாத்திருச்சு. கடவுள்தான் ஹர்சனை காப்பாத்தியிருக்கிறார்.
தீயணைப்பு படையினரும், மருத்துவர்களும் பெரும் உதவி செஞ்சாங்க. மதுரையிலிருந்து விரைவாக வந்த மீட்பு குழுவினருக்கு என்ன கைமாறு செய்ய முடியுமுன்னு தெரியல. அவங்க எதையும் எதிர்பார்க்காம என் மகனது உயிரை காப்பாத்தியிருக்காங்க. அவர்கள் வாடகை காரில் வந்ததுக்கு ஆன செலவைகூட வாங்க மறுத்தாங்க. பலவந்தமாகவே நான் கொடுத்தேன்.
சம்பவத்துக்கு முந்தைய நாள்தான் ஆலங்குளத்திலுள்ள எங்களோட பூர்வீக கோவில் வைகை உடையான் கோவிலுக்கு குடும்பத்தோடு சென்று பொங்கல் வைத்து, பூஜை செய்து சாமி கும்பிட்டு வந்தோம். சாமி எங்கள கைவிடல. கடவுள் புண்ணியத்துடன் ஹர்சனின் தைரியமும் அவனைக் காப்பாத்தியிருக்கு. மருத்துவ மனைக்கு வந்து நலம் விசாரித்த கலெக்டருக்கு அவன் கைகொடுத்து வாழ்த்து தெரிவித்தபோது கலெக்டருக்கு ரொம்ப சந்தோஷம். இவன் பெரிய ஆளா வருவான்.. நன்றாக படிக்க வையுங்கள் என்று அவர் கூறிவிட்டு சென்றார்.
டாக்டர்கள் ஒன்றும் இல்லை என்று கூறிவிட்டார்கள். கூடுதலாக எம்.ஆர்.ஐ. ஸ்கேன் செய்து பார்க்க லாம் என்று நினைத் திருக்கி றேன். திருநெல்வேலி மருத்துவம னைக்குத்தான் செல்ல வேண்டும். மகனை அழைத்து க்கொண்டு மதுரைக்கு வாருங்கள் என்று மீட்பு குழுவை சேர்ந்தவர்கள் கூறியிருக்கிறார்கள். மதுரைக்கும் செல்ல வேண்டும் என்று நம்பிக்கை யுடன் தெரிவித்தார் கணேசன்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT