Published : 14 Feb 2014 12:07 PM
Last Updated : 14 Feb 2014 12:07 PM
விஜயகாந்த் நல்ல ஸ்டன்ட் நடிகர் என்றார் திமுக தலைவர் கருணாநிதி.
திமுக மாநில மாநாட்டில் பங்கேற்பதற்காக வியாழக்கிழமை இரவு திருச்சி வந்த கருணாநிதி, வெள்ளிக்கிழமை காலை மாநாட்டு ஏற்பாடுகளை நேரில் சென்று பார்வையிட்டார். தொடர்ந்து, அங்கு செய்தியாளர்களிடம் அவர் கூறியது:
“திருச்சி மாநாட்டைக் காண ஏராளமான பொதுமக்களும் திரண்டு வருகின்றனர். இது மக்களவைத் தேர்தலில் எழுச் சியை ஏற்படுத்துவதோடு மட்டு மன்றி, தமிழகத்திலும் ஆட்சி மாற்றத்துக்கான ஆரம்ப அறிகுறி.
நண்பர்கள் என்ற முறையில் தான் காங்கிரஸ் தலைவர்கள் என்னைச் சந்திக்க வருகின்றனர். இந்த சந்திப்புகளில் அரசியல் பேச வில்லை. அதேபோல, டெல்லியில் காங்கிரஸ் தலைவர் சோனியாவை கனிமொழி சந்தித்ததில் எவ்வித உள்நோக்கமுமில்லை. கனி மொழி சில நாள்களுக்கு முன் உடல்நலமின்றி மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார். அவரது உடல்நலம் குறித்து தெரிந்து கொள்ள சோனியா விரும்பியதால், நாடாளுமன்ற கூட்டத் தொடருக்காக டெல்லி சென்ற கனிமொழி சோனியாவைச் சந்தித்தார்.
2 ஜி விவகாரத்தை வைத்து காங்கிரஸ் திமுகவை மிரட்டுவதாக எழுதப்படும் செய்திகளைப் பார்த்து, மக்கள் அவ்வாறு நினைக்கிறார்கள். திமுகவின் நிதி நிலைமை மேம்பட்டு வருகிறது. ஆனால், முற்றுப்புள்ளி வைக்கும் அளவுக்கு இல்லை.
அணிகள் மாறுவதற்கும், ஆட்சிகள் மாறுவதற்கும் மக்கள் எண்ணங்கள் மாற வேண்டும் என்பதை மறுப்பதற்கில்லை. எந்தக் கட்சி மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று இப்போதே திட்டவட்டமாகச் சொல்ல முடியாது, நான் சொல்லவும் விரும்பவில்லை.
வெடித்த பலூனான 2ஜி விவகாரம்
ரூ.80 ஆயிரம் கோடி, ரூ.90 ஆயிரம் கோடி ஊழல் என ராசா மீதும், வேறு சிலர் மீதும் புகார் கூறி 2 ஜி விவகாரத்தை பத்திரிகைகள் ஊதிப் பெரிதாக்கின. அந்த விவகாரம் இப்போது வெடித்த பலூனைப் போல சுருங்கி கேள்விக்குறியாகிவிட்டது.
விஜயகாந்த் நல்ல ஸ்டன்ட் நடிகர். அவர் சினிமாவில் எதிரிகளிடம் பிடிகொடுக்காமல் எப்படி நடிப்பாரோ, அதேபோல அவருடன் கூட்டணி அமைக்க விரும்புகிறவர்களுக்கு பிடிகொடுக்காமல் இருக்கிறார். திமுக கூட்டணிக்கு அவர் வர வேண்டும் என ஏற்கெனவே அழைத்துவிட்டேன்.
தமிழக மக்களை இன உணர்வோடும், மானத்தோடும் வாழ வைக்க வேண்டும் என விரும்புகிறவர்கள் எங்களது கூட்டணிக்கு வருவார்கள் என்று நம்புகிறேன். விஜயகாந்தும் அதற்கு விதிவிலக்கல்ல.
சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட ஜெய லலிதாவைப் பிரதமராக்க வேண்டும் என்று கம்யூனிஸ்டுகள் கூறுவது அடிமைத்தனமாக இருக்கிறது.
வருகிற மக்களவைத் தேர்தலிலும், அடுத்து வரும் சட்டப்பேரவைத் தேர்தலிலும் இந்திய நாட்டின் ஒற்றுமையை, மதவாதத் தன்மையற்ற நிலையை, ஊழலற்ற நிர்வாகத்தை, மற்றவர் களை மதித்து அரசியல் நடத்தும் அண்ணாவின் கொள்கைகளை மையமாக வைத்து எங்களின் பிரச்சாரம் இருக்கும்.
கட்சியில் கலகம் செய்து தண்டிக்கப்பட்டவர்கள் மன்னிக்கப்பட வேண்டிய முறையில் நடந்துகொண்டால் மன்னிக்கப்படுவார்கள்” என்றார் கருணாநிதி.
சில கேள்விகளுக்குப் பூடக மாக பதிலளித்தார். காங்கிரஸ், தேமுதிக, திமுக ஆகிய கட்சிகள் இணைந்து மெகா கூட்டணி அமையுமா? என்ற கேள்விக்கு “வாய்ப்பு வந்தால் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்” என்றும், பிரதமராகும் ஆசை இருக்கிறதா? என்ற கேள்விக்கு “எனது உயரம் எனக்குத் தெரியும்” என்றும் கருணாநிதி கூறினார்.
மேலும், “கடந்த சில ஆண்டுகளாக தமிழக சட்டப்பேரவையிலும், நாடாளுமன்றத்திலும் ஜனநாயகத்தைக் கட்டிக் காக்க வேண்டியவர்களாலேயே அது சிதைக்கப்படுவது வேதனையாக இருக்கிறது” என்ற கருணாநிதி, “மூன்றாவது அணி அமைவது காங்கிரஸுக்கு சாதகமாக அமையும் என்று மோடி கூறிய கருத்துக்கு, தான் கருத்து சொல்ல விரும்பவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT