Published : 31 Dec 2014 10:03 AM
Last Updated : 31 Dec 2014 10:03 AM
நீலகிரி மாவட்டம், குன்னூரை சேர்ந்தவர் கார்த்திக். இவரது மனைவி ராதிகா (25). பிரசவ சிகிச்சைக்காக உதகை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த அவருக்கு அறுவை சிகிச்சை மூலமாக பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறப்புக்கு பின்னர் அவரது உடல் நிலை மோசமடைந்ததால், மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு நேற்றுமுன்தினம் கொண்டு வரப்பட்டார்.
மருத்துவமனையில் தீவிர சிகிச்சையில் இருந்த அவர் நேற்று காலை உயிரிழந்தார். ராதிகாவின் சடலத்தை மருத்துவமனை நிர்வாக நடைமுறைகளுக்கு பின்னர் உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. சடலத்தை பெற்றுக் கொண்ட உறவினர்கள் திடீரென மருத்துவமனை எதிரே திருச்சி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ராதிகாவின் சடலத்தை பிரேதப் பரிசோதனை செய்து ஒப்படைக்க வேண்டும். அவரது உயிரிழப்பில் சந்தேகம் உள்ளது. அவருக்கு சிகிச்சை அளித்த உதகை அரசு மருத்துவமனை மருத்துவர்களிடம் உரிய விசாரணை நடத்த வேண்டும். குழந்தை பிறப்புக்கு பின்னர் சரியான சிகிச்சை அளிக்கத் தவறியதே உயிரிழப்புக்கு காரணம். எனவே, அரசு மருத்துவர்கள், செவிலியர்களை பொறுப்பாக்க வேண்டும் என வலியுறுத்தினர். மேலும், அங்கு வந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினரும் உறவினர்களுக்கு ஆதரவாக போராட்டத்தில் ஈடுபட்டனர். ராதிகாவின் குடும்பத்தினருக்கு ரூ. 10 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்க வேண்டும் என வலியுறுத்தினர்.
ரேஸ்கோர்ஸ் போலீஸார் மற்றும் வட்டாட்சியர் ரவி தலைமையிலான அதிகாரிகள் மறியலில் ஈடுபட்டவர்களுடன் பேச்சு நடத்தினர். அதன் பின்னர், ராதிகாவின் சடலத்தை, உறவினர்கள் வாங்கிச் சென்றனர்.
ராதிகாவின் உயிரிழப்பு குறித்து கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் எஸ்.ரேவதி கூறுகையில், பிரசவ சிகிச்சைக்கு பின்னர் ராதிகாவின் உடல்நிலை மோசமான நிலையில்தான் கோவை அரசு மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக கொண்டு வரப்பட்டது. அவருக்கு கூடுதல் கவனம் எடுத்து சிகிச்சை அளிக்கப்பட்டது. இருந்தபோதும், அவரது உடல் உறுப்புகள் ஒவ்வொன்றும் செயல் இழக்க ஆரம்பித்துவிட்டன. சிறுநீரக கோளாறு ஏற்பட்டதால் டயாலிசிஸ் சிகிச்சை உடனடியாக மேற்கொள்ளப்பட்டது. நேற்று அதிகாலை 4 மணிக்கு சுவாசக் கோளாறு ஏற்பட்டது. அதை உடனடியாக சரி செய்தோம். காலை 7.30 மணி அளவில் இதய ரத்த நாளங்களில் ஏற்பட்ட அடைப்பையும் சரி செய்தோம். அவரை எப்படியும் காப்பாற்றிவிடலாம் என்ற நம்பிக்கையில் தொடர்ந்து மருத்துவக் குழுவினருடன் நானும் சிகிச்சையை பார்வையிட்டு வந்தேன். இருந்தபோதும், காலை 9 மணிக்கு மீண்டும் இதய நாளங்களில் ரத்த அடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார் என்றார்.
சரஸ்வதி உறவினர்களும் சாலை மறியல்
இதேபோல், உதகை அரசு மருத்துவமனையில் இருந்து பிரசவ மேல் சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு நேற்று முன்தினம் கொண்டு வரும் வழியில் சரஸ்வதி என்ற பெண் உயிரிழந்தார். அவரது சடலம் பிரேதப் பரிசோதனை செய்யும் வேலை நேற்று நடைபெற்றது. அப்போது, சடலத்தை வழங்க மருத்துவமனை நிர்வாகம் தாமதிப்பதாகக் கூறி அவரது உறவினர்களும் திருச்சி சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை ரேஸ்கோர்ஸ் போலீஸார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT