Published : 05 Dec 2014 12:56 PM
Last Updated : 05 Dec 2014 12:56 PM

ரேஷனில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தில் மாற்றம் கூடாது: ராமதாஸ்

மின் இணைப்பு பெறாத குடும்பங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் மானியம் நேரடி பயன்மாற்ற முறையில் வழங்கப்படும் என்ற முடிவை மத்திய அரசு கைவிட வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "மானியங்களைக் குறைக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மத்திய அரசு, அதன் அடுத்தக் கட்டமாக நியாயவிலைக் கடைகள் மூலம் வழங்கப்படும் மண்ணெண்ணெயை ரத்து செய்ய முடிவு செய்துள்ளது. ஏழை மக்களுக்கு கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் இந்த முடிவு தவறானது; கண்டிக்கத்தக்கது.

மத்தியில் ஆட்சி செய்த முந்தைய காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு, மண்ணெண்ணெய்க்கு வழங்கப்படும் மானியத்தை படிப்படியாக குறைத்து வந்தது. எனினும், நியாயவிலைக் கடைகளில் மண்ணெண்ணெய் வழங்கும் திட்டத்தை அடியோடு ரத்து செய்யும் அளவுக்கு அந்த அரசு துணியவில்லை.

மத்தியில் மோடி அரசு பதவியேற்ற பின்னர் மண்ணெண்ணெய் மானியத்தைக் குறைக்கும் திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது. இதனால், மக்கள் நிம்மதி அடைந்த நிலையில், மானிய விலை மண்ணெண்ணெய் திட்டத்தை அடியோடு ரத்து செய்ய நரேந்திர மோடி அரசு தீர்மானித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தியது மட்டுமின்றி, மண்ணெண்ணெய்க்கு மானியம் வழங்கிய வாஜ்பாய்க்கும் துரோகம் செய்திருக்கிறது.

மண்ணெண்ணெய் சமையலுக்காக பயன்படுத்தப்படவில்லை; விளக்கு எரிப்பதற்காக மட்டுமே பயன்படுத்தப்படுவதாக 2011 ஆம் ஆண்டு மக்கள்தொகைக் கணக்கெடுப்பில் தெரியவந்திருப்பதாகவும், அதனடிப்படையில் மின் இணைப்பு இல்லாத வீடுகளுக்கு மட்டும் மண்ணெண்ணெய் மானியம் வழங்க முடிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மத்திய அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. மத்திய அரசின் இந்த வாதமே தவறானதாகும். இந்தியாவிலுள்ள குடும்பங்களின் எண்ணிக்கை சுமார் 25 கோடி ஆகும்.

மத்திய பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்டுள்ள புள்ளி விவரங்களின்படி இவற்றில் 16 கோடி குடும்பங்கள் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு பெற்றுள்ளனர். ஊரகப்பகுதிகளில் சில லட்சம் குடும்பங்கள் சாண எரிவாயுவைப் பயன்படுத்துகின்றனர். மீதமுள்ள சுமார் 37% குடும்பங்கள் மண்ணெண்ணெய், விறகு போன்றவற்றையே எரிபொருளாக பயன்படுத்துகின்றனர். நடுத்தர குடும்பங்களில் கூட எரிவாயு தீரும்போது மண்ணெண்ணெய் தான் கை கொடுக்கிறது. இத்தகைய நிலையில், யாருமே சமையலுக்கு மண்ணெண்ணெயை பயன்படுத்தவில்லை என்பது நகைப்புக்குரியது.

மத்திய அரசின் சார்பில் எடுக்கப்படும் கணக்கெடுப்புகள் எப்போதுமே துல்லியமாக இருப்பதில்லை. உதாரணமாக, 2012 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் வெளியிடப்பட்ட தேசிய மாதிரிக் கணக்கெடுப்பில் நாடு முழுவதும் 9 கோடி குடும்பங்கள் மட்டுமே சமையல் எரிவாயு இணைப்பு பெற்றிருப்பதாகக் கூறப்பட்டுள்ளது. ஆனால், பெட்ரோலிய அமைச்சகம் வெளியிட்ட புள்ளிவிவரத்தில் 16 கோடி குடும்பங்கள் எரிவாயு இணைப்பு பெற்றிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அரசு சார்பில் எடுக்கப்படும் கணக்கெடுப்புகளில் இவ்வளவு குளறுபடிகள் இருக்கும் நிலையில், இத்தகைய புள்ளிவிவரங்களை நம்பிக் கொண்டு மானிய விலையில் மண்ணெண்ணெய் வழங்குவதை நிறுத்துவது ஏழை மற்றும் நடுத்தர மக்களுக்கு மிகக்கடுமையான பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அரசு உணர வேண்டும்.

மத்திய அரசின் புதிய முடிவுப்படி மின் இணைப்பு பெறாத 11 லட்சம் குடும்பங்களுக்கு மட்டுமே மண்ணெண்ணெய் மானியம் நேரடி பயன்மாற்ற முறையில் வழங்கப்படும்.

இந்த முறையில் மத்திய அரசு வழங்கும் மானியத்தைக் கொண்டு வெளிச்சந்தையில் அதிக விலைக்கு விற்கப்படும் மண்ணெண்ணெயை வாங்க முடியாது.

உதாரணமாக சென்னையில் நியாயவிலைக் கடைகளில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் ரூ.13.70க்கு விற்பனை செய்யப்படுகிறது. மானியவிலை மண்ணெண்ணெய் திட்டம் ரத்து செய்யப்படும்போது மத்திய அரசு மானியமாக சுமார் ரூ.25 வழங்கும். ஆனால், வெளிச்சந்தையில் ஒரு லிட்டர் மண்ணெண்ணெய் அதிகபட்சமாக ரூ. 60 வரை விற்பனை செய்யப்படும் நிலையில் ஏழை மக்களால் அவ்வளவு அதிக விலை கொடுத்து வாங்கவே முடியாது.

இதையெல்லாம் உணர்ந்து மானிய விலை மண்ணெண்ணெய் விற்பனையை ரத்து செய்யும் திட்டத்தை மத்திய அரசு கைவிட வேண்டும்.

தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களில் சமையல் எரிவாயு இணைப்பு இல்லாதவர்களுக்கும், ஒரே ஒரு உருளை இணைப்பு பெற்றிருப்பவர்களுக்கும் நியாயவிலைக் கடைகள் மூலம் இப்போது எப்படி மாதத்திற்கு 3 முதல் 15 லிட்டர் வரை மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறதோ அதே முறையை தொடர்ந்து செயல்படுத்த மத்திய அரசு முன்வர வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x