Published : 15 Dec 2014 11:57 AM
Last Updated : 15 Dec 2014 11:57 AM

வேட்புமனுவில் பதவியை திருத்திய விவகாரம்: மதுரை திமுக நிர்வாகிகள் சென்னையில் மோதல்- உட்கட்சித் தேர்தலில் அடுத்தடுத்த காட்சிகள்

பதவியை மாற்றி வேட்புமனு திருத்தப்பட்டதாக மதுரை திமுக நிர்வாகிகள் சென்னை திமுக தலைமையகமான அறிவாலயத்தில் மோதிக்கொண்டனர் .

திமுக உட்கட்சி தேர்தல் தற்போது முக்கிய கட்டத்தை நெருங்கியிருக்கிறது. கட்சியின் ஒன்றிய, பகுதி செயலர்கள் தேர்தல் முடிவடைந்துவிட்டதால், அடுத்தகட்டமாக மாவட்ட நிர்வாகிகள் தேர்வுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கு வேட்புமனு தாக்கல் செய்வதற்காக மதுரை மாவட்ட திமுக நிர்வாகிகள் சென்னை திமுக தலைமை அலுவலகமான அறிவாலயம் சென்றுள்ளனர். மதுரை மாநகர் மாவட்ட (தெற்கு) அவைத் தலைவர் பதவிக்கு, முன்னாள் பொருளாளர் மிசா பாண்டியன் வேட்புமனு தாக்கல் செய்திருந்தார். மாநகர் மாவட்ட திமுக பொறுப்புக்குழு தலைவர் கோ.தளபதியிடம் கொடுக்கப்பட்ட அந்த வேட்புமனு திடீரென காணாமல் போனது. தளபதியின் ஆதரவாளர்கள் சிலர் அவைத் தலைவர் பதவிக்கு வர விரும்புவதால், மிசா பாண்டியனின் மனுவை ஒதுக்கி வைத்துவிட்டதாக தகவல் பரவியது. இதைத் தொடர்ந்து மிசா பாண்டியன் தளபதியுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். இதனால் அறிவாலயத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

இந்தச் சம்பவம் பற்றி மிசா பாண்டியனிடம் நேற்று கேட்டபோது அவர் கூறியதாவது: காணாமல்போன என் வேட்புமனு மாவட்ட பொருளாளர் பதவிக்கான வேட்புமனுக்களுடன் வைக்கப்பட்டிருந்தது. இதனால் கோபமடைந்து தளபதியிடம் நியாயம் கேட்டேன். ‘நீங்கள் மாவட்ட செயலர் பதவிக்கு வேட்புமனு செய்திருக்கிறீர்கள். அதை எடுத்து துணை செயலர் பதவிக்கு என்று திருத்திவைத்தால் ஏற்றுக்கொள்வீர்களா? ஏற்கெனவே 6 ஆண்டுகள் பொருளாளராக இருந்துவிட்டேன். எனவே, என் வேட்புமனுவை உள்ளபடியே திருத்திக் கொடுங்கள்’ என்றேன். அவரும், அவைத் தலைவர் என்று திருத்திக் கொடுத்துவிட்டார். ஒரு கட்சிக்குள் நடக்கிற சாதாரண பிரச்சினைதான் இது என்றார்.

தளபதி கூறும்போது, ‘மதுரை நபர்களைப் பற்றி உங்களுக்குத் தெரியாதா? கோபம் வந்தால் சத்தமா பேசுவாங்க அவ்வளவுதான். என் ஆதரவாளர்களுக்கும், மிசா பாண்டியனுக்கும் இடையேதான் சண்டை நடந்திருக்கிறது. அவர் என்னை அடிக்க வந்ததாக சொல்வதெல்லாம் பொய். இப்போது பிரச்சினை முடிந்துவிட்டது. இன்றுகூட என்னைப் பார்க்க வருவதாகச் சொன்னார். நாளை சந்திக்கலாம் என்று கூறியிருக்கிறேன்’ என்றார்.

மு.க.ஸ்டாலின் அணிக்கு முன்பே வந்த தளபதி, தாமதமாக வந்த மிசா பாண்டியன் இடையேயான இந்த மோதலால் மதுரை திமுக வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த விவகாரம் மு.க.அழகிரி ஆதரவாளர்களின் கவனத்துக்கும் போயிருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x