Published : 29 Dec 2014 11:16 AM
Last Updated : 29 Dec 2014 11:16 AM
போக்குவரத்து கழக தொழிலாளர்கள் முன்கூட்டியே வேலைநிறுத்தப் போராட் டத்தில் ஈடுபட்டதால் மாவட்டங்களில் 90 சதவீத பஸ்கள் இயங்கவில்லை. இதனால் பஸ் கிடைக்காமல் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். நெரி சலைப் பயன்படுத்தி ஆட்டோக்கள், தனியார் பஸ்களில் கூடுதல் கட்டணம் வசூல் செய்யப்பட்டன.
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள அரசு போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட தலைமை அலுவலகம் மற்றும் மதுரை நகர் மற்றும் புறநகர் பகுதி களில் 15 டெப்போக்களிலும் நேற்று அதிகாலை முதலே பஸ்களை இயக் காமல் ஓட்டுநர், நடத்துநர்கள் உள்ளி ருப்பு போராட்டம் நடத்தினர். அண்ணா தொழிற்சங்கங்களை சேர்ந்த ஓட்டுநர், நடத்துநர்களால் சில பஸ்கள் இயக்கப் பட்டன. மொத்தமுள்ள 950 பஸ்களில் 875 பஸ்கள் நிறுத்தப்பட்டதால், பயணிகள் கடுமையாக பாதிக்கப்பட்டனர்.
ஆயுதங்களுடன் வந்து மிரட்டல்
மதுரை பைபாஸ் சாலையில் உள்ள போக்குவரத்துக் கழக மதுரை கோட்ட அலுவலகத்தில் தொழிலாளர்கள் உள்ளி ருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். பிற்பகல் 3.15 மணியளவில் சுமார் நூற்றுக் கும் மேற்பட்டவர்கள் ஆயுதங்களுடன் அலுவலகத்துக்குள் நுழைந்தனர். அவர்கள் பஸ்களை இயக்குமாறு தொழி லாளர்களை மிரட்டியுள்ளனர். தொழி லாளர்களின் கடும் எதிர்ப்பு காரண மாக அவர்கள் அங்கிருந்து வெளியேற்றப் பட்டனர்.
விருதுநகரில்..
நேற்று முன்தினம் இரவு பணிமனையில் தங்கியிருந்த தொழிலாளர்களை அலு வலர்கள் எழுப்பி, பணி முடிந்தவர்கள் இரவு தங்கக்கூடாது எனக்கூறி வெளியேறும் படி வற்புறுத்தினர். இதற்கு 150-க்கும் மேற்பட்டோர் மறுப்பு தெரிவித்துள்ளனர். இதனால், இருதரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.
விருதுநகர், அருப்புக்கோட்டை, காரி யாபட்டி, திருவில்லிபுத்தூர், ராஜபாளை யம், சாத்தூர், சிவகாசி ஆகிய இடங் களிலுள்ள அரசு போக்குவரத்துப் பணிமனைகள் மூலம் பெரும்பாலான பஸ்கள் இயக்கப்படாததால் வெளியூர் செல்ல வேண்டிய பயணிகள் பஸ் நிலையங்களில் நேற்று பரிதவித்தனர்.
தேனியில் பழைய, புதிய பஸ் நிலை யங்களில் பயணிகள் கூட்டம் அலை மோதியது. மதுரையில் நேற்று நடந்த அஞ்சல்துறை தேர்வெழுதச் சென்ற பலர், வேன்களை வாடகைக்கு பிடித்து சென்றனர். கம்பம், கூடலூர், போடி பகுதி யில் இருந்து கேரளத்துக்கு தோட்ட வேலைக்குச் செல்லும் நூற்றுக்கணக்கான தொழிலாளர்கள் பஸ் வசதி இன்றி பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
எம்.எல்.ஏ. வாக்குவாதம்
காரைக்குடி போக்குவரத்துக்கழக பணிமனையில் எம்எல்ஏ சோழன் சித. பழனிச்சாமி தலைமையில் அதிமுகவினர் பஸ்களை இயக்க வலியுறுத்தினர். ஆனால், தொழிலாளர்கள் பஸ்களை இயக்க மறுத்ததுடன், அவர்களிடையே வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் தள்ளு முள்ளு ஏற்பட்டது.
பயணிகள் வாக்குவாதம்
வேலூர் புதிய பஸ் நிலையத்தில் வெளியூரிலிருந்த பஸ்களின் ஓட்டுநர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபடுவதாகக் கூறி, பயணிகளை கீழே இறக்கி விட்டனர். அவர்களிடம் பயணிகள் கடும் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர். அரசு பஸ்கள் திடீரென நிறுத்தப்பட்டதால், தனியார் பஸ்கள், கால் டாக்ஸி, ஆட்டோக்களில் கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டது.
திருவண்ணாமலையில்..
திருவண்ணாமலை மண்டலத்தில் உள்ள 10 பணிமனைகளில் பதற்றம் நிலவி யதால் போலீஸ் பாதுகாப்பு போடப் பட்டுள்ளது. பஸ்கள் ஓடாது என்றும் பஸ்கள் ஓடும் என்றும் பஸ் களில் துண்டுப் பிரசுரங்களை தொழிற் சங்கத்தினர் ஒட்டியுள்ளனர். இரவு நேரத்தில் பஸ்களை இயக்குவது பாதுகாப்பானதல்ல என்று காவல்துறை தெரிவித்துள்ளது. அதனால், பஸ்கள் இயக்கம் என்பது நேற்று மாலை 6 மணிக்குப் பிறகு கணிசமாக குறைந்து விட்டது.
விழுப்புரத்தில்..
விழுப்புரம் அரசு போக்குவரத்து கழக பணிமனையை பூட்டு போட்டு பூட்டி போக்குவரத்து தொழிலாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதைத் தொடர்ந்து போலீஸாரின் பாதுகாப்போடு பஸ்கள் இயக்கப்பட்டன.
கோவையில்..
கோவை, திருப்பூர், நீலகிரி ஆகிய மாவட்டங்களில் 50 சதவீதத்துக் கும் அதிகமான பஸ்கள் இயக்கப் படாததால் பொதுமக்கள் பெரிதும் பாதிக் கப்பட்டனர். `கோவை மண்டலத்தில் உள்ள 26 பணிமனைகளில் 50 சதவீத பஸ் கள் நிறுத்தப்பட்டதாகவும், இன்று காலை முதல் அனைத்து பஸ் களும் நிறுத்தப்படும்’ என்று அரசு போக்கு வரத்துக் கழக கோவை, திருப்பூர், நீலகிரி மண்டல தொழிலாளர் முன்னேற்ற சங்கத் தலைவர் பெரியசாமி தெரிவித்தார்.
திருப்பூரில்..
திருப்பூரில் காங்கயம் சாலையில் உள்ள அரசு பணிமனை எண் 1 மற்றும் 2ல் ஓட்டுநர், நடத்துநர், பணி மனைத் தொழிலாளர்கள் நூறு பேர் நேற்று பிற்பகலில் உள்ளிருப்புப் போராட் டத்தில் ஈடுபட்டனர். மதுரை, திருச்சி, தேனி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து திருப்பூருக்கு பஸ்கள் இயக்கப்பட வில்லை. இதனால் திருப்பூர் புதிய பஸ் நிலையம் வெறிச்சோடிக் காணப்பட்டது.
சேலத்தில்..
சேலத்தில் இரு இடங்களில் அரசுப் பஸ்களின் கண்ணாடிகள் உடைக்கப் பட்டன. நேற்று காலை சேலம் பழைய பஸ் நிலையம் வணிக வளாகத்தில் நூற்றுக்கும் மேற்பட்ட அரசுப் பஸ் ஓட்டுநர் உள்ளிட்டோர் திரண்டனர். அவர்கள் தங்களது கோரிக்கையை வலி யுறுத்தி கோஷம் எழுப்பினர். அப்போது அங்கு வந்த காவல் துறையினர் அவர்களை கலைந்து செல்லும்படி எச்சரித்த தால், அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
பஸ்கள் ஓடாததால் சேலத்தி லிருந்த சென்னை செல்லும் ரயில்களில் கூட்டம் மிகுந்து காணப்பட்டது. பெரும் பாலான இடங்களில் நகரப் பஸ்கள் இயக்கப்படாததால் போக்குவரத்துக்காக மக்கள் ஷேர் ஆட்டோக்களை நாட வேண்டியிருந்தது. அதனால் வெளி யூர் பயணிகள் மட்டுமின்றி உள்ளூர் பயணிகளும் பெரும் சிரமத்துக் குள்ளாகினர்.
கிருஷ்ணகிரியில்..
பஸ்கள் ஓடாததால் கிருஷ்ணகிரியில் பயணிகள் அவதிக் குள்ளாயினர். ஓசூர், பெங்களூர் உள்ளிட்ட நகரங்களுக்கு விடுமுறை முடிந்து வேலை செல்பவர்கள் பெரி தும் அவதிப்பட்டனர். இதேபோல் தரும புரியிலும் வெளியூர் செல்லும் பயணிகள் பஸ்கள் கிடைக்காததால் ரயில்கள் மூலம் சென்றனர். இதனால் ரயில்களில் கூட்டம் நிரம்பி வழிந்தது.
பஸ் கண்ணாடி உடைப்பு
திருச்சி மாநகரில் துவாக்குடி, தீரன்நகர், மலைக்கோட்டை பணிமனைகளிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு நகரப் பஸ்களில் 20 சதவீதம் மட்டுமே இயக்கப்பட்டன.
மணப்பாறையிலிருந்து பில்லூர் செல்லும் நகர பஸ் களத்துப்பட்டி பஸ் நிறுத்தத்தில் நின்று கொண் டிருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் பஸ் கண்ணாடிகளை உருட்டுக் கட்டைகளால் அடித்து உடைத்து விட்டு தப்பிச் சென்றனர்.
இதேபோல, மணப்பாறை அருகே பொத்தமேட்டுப்பட்டியில் அடையாளம் தெரியாத நபர்கள் கல்வீசி தாக்கியதில் திருச்சி - கடவூர் செல்லும் அரசு பஸ்ஸின் பின்பக்க கண்ணாடி உடைந்தது. நாகை மாவட்டத்தில் நேற்று 50 சதவீத பஸ்கள் மட்டுமே இயங்கியதால் பெரும்பாலான இடங்களில் மக்கள் அவதிக்குள்ளானார்கள்.
வாக்குவாதம்
வேதாரண்யத்தில் சட்டப்பேரவை உறுப்பினர் காமராஜ், நகர்மன்ற தலைவி மலர்க்கொடியின் கணவர் நமச்சிவாயம், அசோக் உள்ளிட்டோர் போக்குவரத்துக் கழக பணிமனைக்குள் சென்று அங்கி ருந்த தொழிற்சங்கத்தினரிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டு பஸ்களை இயக்க வலியுறுத்தினர். இதனால் இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழல் ஏற்பட்டது. போலீஸார் மற்றும் திமுக வினர் பலரும் அங்கே கூடியதால் பரபரப்பு நிலவியது. பின்னர் காமராஜ் உள்ளிட்ட அதிமுகவினர் 100 பேர் மீது தொழிற்சங்கத்தினர் போலீஸில் புகார் அளித்தனர்.
சீர்காழி, பொறையார், மயிலாடு துறையில் உள்ள பஸ் பணிமனை களுக்குள் சென்ற சட்டப்பேரவை உறுப்பினர்கள் சக்தி, பவுன்ராஜ் மற்றும் அதிமுகவினர் அங்கிருந்தவர்களை வலுக் கட்டாயமாக பஸ்ஸை இயக்க வலியுறுத் தினர். எனினும், அதிமுக தொழிற் சங்கத்தினர் மட்டுமே பஸ்களை இயக்கினர்.
தஞ்சாவூர்…
தஞ்சாவூரிலிருந்து இயக்கப்படும் 130 நகரப் பஸ்களும் நேற்று காலை 10 மணி முதல் முழுவதுமாக நிறுத்தப் பட்டன. பழைய பஸ் நிலையத்திலும் நகர மற்றும் புறநகர் டெப்போக்களில் தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். தஞ்சாவூர், திருவாரூர் மாவட் டங்களில் சுமார் 1,200 தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.
பட்டுக்கோட்டை, திருவாரூர், மன்னார்குடி, திருத்துறைப்பூண்டி புறநகர் பஸ் டெப்போக்களைச் சேர்ந்த புறநகர் மற்றும் நகரப் பஸ்கள் முழு மையாக நிறுத்தப்பட்டன. தனியார் பஸ்கள் வழக்கம்போல் இயக்கப் பட்டன. கரூர் மண்டலத்துக்குட்பட்ட 4 கிளைகளில் உள்ள அனைத்து பஸ்களும் நேற்று வழக்கம் போல இயங்கின. கரூர் பஸ் நிலையத்தில் பொதுமேலாளர், உதவி மற்றும் கிளை மேலாளர்கள், போக்குவரத்துத்துறை அலுவலர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பெரம்பலூர், அரியலூர் மாவட்டங்களில் பெரும்பாலான பஸ் கள் இயங்கின.
நெல்லையில்.. 90% ஓடவில்லை
திருநெல்வேலி மண்டலத்தில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங் களில் 16 பணிமனைகள் உள்ளன. இவற்றில் இருந்து 1,096 பஸ்கள் இயக்கப் படுகின்றன.
திருநெல்வேலி மாநகரத்தில் 90 சதவீத நகர பஸ்கள் நேற்று காலை முதல் ஓடவில்லை. இதனால் பயணிகள் கடும் பாதிப்புக்குள்ளாயினர். இதனால் கிறிஸ்துமஸ் விடுமுறை முடிந்து வெளியூர் செல்லும் பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். தூத்துக்குடியில் தனியார் நகர பஸ்கள் மற்றும் மினி பஸ்கள் திருச்செந்தூர், கோவில்பட்டி, திருநெல்வேலி போன்ற இடங்களுக்கு திருப்பிவிடப்பட்டன.
வள்ளியூரில் 72 பேர் கைது
திருநெல்வேலி மாவட்டம் வள்ளியூர் பணிமனை முன்பு நேற்று காலை கோரிக்கைகளை வலியுறுத்தி மறியலில் ஈடுபட்ட பல்வேறு தொழிற்சங்கங்களை சேர்ந்த 72 தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டனர். கன்னியாகுமரி மாவட்டத்தில் ராணித்தோட்டம், குளச்சல், கன்னியாகுமரி, மார்த்தாண்டம், திருவட்டாறு, செட்டிக்குளம் உள்ளிட்ட 13 பணிமனைகளிலும் 40 சதவீதத்துக்கும் மேல் பஸ்கள் இயக்கப்படவில்லை. புதுவையில் வழக்கம்போல் இயங்கின.
பொதுமக்கள் கடும் அதிருப்தி
போக்குவரத்து தொழிலாளர்களின் திடீர் வேலைநிறுத்தம், பொதுமக்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து சென்னையைச் சேர்ந்த சிலர் கூறியதாவது: அரசு போக்குவரத்துத் துறை தொழிலாளர்கள் மட்டுமின்றி, அரசு மற்றும் பொதுத்துறையில் பணியாற்றும் ஊழியர்கள் வேலைநிறுத்தம் அறிவிக்கின்றனர். ஆனால், அறிவித்த தேதிக்கு முன்னதாக எந்தவித முன்அறிவிப்பும் இன்றி திடீரென போராட்டத்தில் ஈடுபடுகின்றனர். இதனால், பொதுமக்கள்தான் கடுமையான பாதிப்புக்குள்ளாகின்றனர்.
போக்குவரத்து தொழிலாளர்கள் 29-ம் தேதி வேலைநிறுத்தம் என்று அறிவித்துவிட்டு, திடீரென 28-ம் தேதி அதிகாலையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். முன்அறிவிப்பின்றி பஸ்களை நிறுத்தியதால் மக்கள் பஸ் நிலையங்களில் மணிக்கணக்கில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.
எல்லா தரப்பு மக்களுக்கும் விலைவாசி உயர்வு போன்ற பிரச்சினைகள் இருக்கிறது. தங்களுக்கு தொழிற்சங்கம் இருக்கிறது என்பதற்காக போராட்டத்தில் குதிக்கின்றனர். போராட்டம் நடத்துவதால் மட்டுமே பிரச்சினைக்கு தீர்வு காண முடியாது. கிறிஸ்துமஸ் பண்டிகைக்காக விடுப்பில் சென்ற மக்கள் சென்னை திரும்ப முடியாமல் அவதிப்படுகின்றனர். எனவே, அரசுடன் பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காணாமல் திடீரென வேலைநிறுத்தம் செய்வதால் பொதுமக்களின் ஆதரவை இழந்து, வெறுப்பைதான் தொழிலாளர்கள் பெறுவர்.
மக்கள் படும் அவதியைப் பற்றி சிந்திக்காமல் அரசியல் கட்சிகளும் இதுபோன்ற போராட்டங்களுக்கு ஆதரவு தெரிவிக்கின்றன. இதனால் அவர்களும் மக்களின் கோபத்துக்கு ஆளாகின்றனர். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அப்போதும் இப்போதும் ஓ.பி.எஸ்.
கடந்த 2001-ம் ஆண்டில் போனஸ் தொகையை உயர்த்தித் தரக்கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் 17 நாள் தொடர் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். அப்போது தமிழகம் முழுவதும் சுமார் ஒன்றரை லட்சம் தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டனர். தற்காலிக ஊழியர்களை வைத்து பஸ்களை அரசு இயக்கியது. அதன்பிறகு இப்போதுதான் ஒட்டுமொத்த தொழிலாளர்களும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். நேற்று நடந்த வேலைநிறுத்தத்தில் தமிழகம் முழுவதும் பெரும்பாலான தொழிலாளர்கள் பங்கேற்றதால் அரசு பஸ் போக்குவரத்து அடியோடு ஸ்தம்பித்தது.
2001-ல் வேலைநிறுத்தம் நடந்தபோது ஓ.பன்னீர்செல்வம்தான் முதல்வராக இருந்தார். இப்போதும் அவர் முதல்வராக இருக்கும்போதுதான் வேலை நிறுத்தம் நடக்கிறது.
எம்டிசிக்கு ஒரே நாளில் ரூ.17 கோடி இழப்பு
சென்னை மாநகர போக்குவரத்துக் கழகம், நாளொன்றுக்கு சுமார் 22 கோடி வருவாய் ஈட்டி வருகிறது. நேற்று ஒருநாள் வேலைநிறுத்தத்தால் மட்டும் 16 முதல் 17 கோடி ரூபாய் வரை மாநகர போக்குவரத்து கழகத்துக்கு இழப்பு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT