Published : 27 Dec 2014 10:51 AM
Last Updated : 27 Dec 2014 10:51 AM

போக்குவரத்து தொழிலாளர்கள் ஊதிய ஒப்பந்த பேச்சு நடத்த தயார்: தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் பேட்டி

போக்குவரத்து ஊழியர்களின் ஊதிய ஒப்பந்தம் தொடர்பாக அரசுடன் பேச்சுவார்த்தை நடத்த நாங்கள் தயாராகவுள்ளோம் என தொமுச பொதுச் செயலாளர் மு.சண்முகம் தெரிவித்துள்ளார். தமிழக அரசு போக்குவரத்துத் துறையில் பணியாற்றி வரும் 1.43 லட்சம் பேருக்கான 12-வது ஊதிய ஒப்பந்தம் ஏற்படுத்தாததைக் கண்டித்து தொமுச, சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டியுசி, தேமுதிக, பாமக, மதிமுக, விடுதலை சிறுத்தைகள் ஆகிய கட்சிகளின் தொழிற்சங்கங்கள் உட்பட மொத்தம் 11 தொழிற்சங்கங்கள் தொடர்ந்து பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

கடந்த வாரம் நடந்த கூட்டத்தில் வரும் 29-ம் தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தம் செய்யவுள்ளதாக முடிவு செய்து அறிவித்தனர்.

இந்நிலையில், இந்த போராட்டத் துக்கான விளக்க கூட்டம் பல்லவன் இல்லத்தில் நேற்று மாலை நடந்தது. கூட் டத்துக்கு தொமுச பொருளாளர் கி.நடராஜன் தலைமை தாங்கினார். இதில் சிஐடியு, ஏஐடியுசி, ஐஎன்டி யுசி உள்ளிட்ட 11 தொழிற் சங்கங்களின் நிர்வாகிகள் மற்றும் ஆயிரக் கணக்கான போக்குவரத்து தொழி லாளர்கள் கலந்து கொண்டனர்.

இது தொடர்பாக தொமுச பொதுச் செயலாளர் சண்முகம் நிருபர்களிடம் கூறியதாவது:

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதமே போக்குவரத்து தொழிலா ளர்களுக்கு 12-வது ஊதிய ஒப்பந்தத்தை அமல்படுத்தியிருக்க வேண்டும். ஆனால், இந்த அரசு தொடர்ந்து காலம் தாழ்த்தி வருகிறது.

எனவே, புதிய ஊதிய ஒப்பந்தத்தை உடனே அமல்படுத்த வேண்டும், அதற்கான பேச்சு வார்த்தையை நடத்த வேண்டும், ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் வழங்க வேண்டும், 20 ஆயிரம் தொழிலாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை களை வலியுறுத்தி வரும் 29-ம் வேலைநிறுத்த போராட்டம் நடத்தவுள்ளோம்.

இன்று (நேற்று) மாலையில் திடீரென பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளனர். இது வெறும் கண்துடைப்புதான். உரிய முறையில் அமைச்சருடன் பேச்சு வார்த்தை நடத்த நாங்கள் தயாராக வுள்ளோம்.

தொழிலாளர்களை வேலை நிறுத்தத்தில் கலந்து கொள்ள வேண்டாமென மிரட்டி வருவதாக புகார் வருகிறது.அதை எதிர் கொள்ளவும் தயாராக உள்ளோம். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x