Published : 31 Dec 2014 10:16 AM
Last Updated : 31 Dec 2014 10:16 AM
கிருஷ்ணகிரி மாவட்டம் தேன்கனிக்கோட்டை வட்டம் அஞ்செட்டி அருகே உள்ள பாண்டுரங்கன் தொட்டி கிராமத்தைச் சேர்ந்த விவசாயி பெருமாள். இவரது மனைவி சேலத்தம்மாள். இவர்களுக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு, அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் 3-வது பெண் குழந்தை பிறந்தது.
இந்தக் குழந்தையை அஞ்செட்டி ஆரம்ப சுகாதார நிலைய செவிலியர் அல்போன்சா, ஓசூரைச் சேர்ந்த ஜான்சன் என்பவரது உதவியுடன் ரூ.20 ஆயிரத்துக்கு விற்பனை செய்ததாகத் தகவல் வெளியானது.
இதனைத் தொடர்ந்து தக்கட்டி கிராம நிர்வாக அலுவலர் கொடுத்த புகாரின்பேரில், தேன்கனிக்கோட்டை மகளிர் போலீஸார் நடத்திய விசாரணையில், சேலத்தம்மாளின் 3-வது பெண் குழந்தை மற்றும் முத்தாந்தபுரத்தைச் சேர்ந்த பச்சியம்மாள் என்பவரின் 4-வது பெண் குழந்தை ஆகிய இரு குழந்தைகளையும் ஓசூரைச் சேர்ந்த ஜான்சன் என்பவருக்கு அல்போன்சா விற்பனை செய்தது தெரியவந்தது.
பிறந்து 20 நாட்களுக்கும் குறைவான குழந்தைகள்
ஜான்சன் அந்த குழந்தைகளை கேரள மாநிலத்தில் குழந்தை இல்லாத தம்பதியினருக்கு விற்பனை செய்தது தெரியவந்தது. அதன் பேரில் அங்கு சென்ற தனிப்படை போலீஸார், கேரள மாநிலம் திருவனந்தபுரம் மாவட்டத்துக்கு உட்பட்ட ஹரிகராபுரம், கடக்காவூர் ஆகிய பகுதிகளில் இருந்து பிறந்து 20 நாட்களுக்கும் குறைவான இரு பெண் குழந்தைகளையும், 2 வயதுடைய ஒரு பெண் குழந்தையையும் மீட்டனர். இதில் ஒரு மாதமான 2 குழந்தைகள் ஓசூர் காப்பகத்தில் பாதுகாப்பாக வைக்கபட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குழந்தை விற்பனை வழக்கில் செவிலியர் அல்போன்சா மற்றும் ஜான்சன் ஆகிய இருவரையும் போலீஸார் கைது செய்தனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT