Published : 04 Apr 2014 12:00 AM
Last Updated : 04 Apr 2014 12:00 AM

பிரபுவுக்கு ஆதரவாக பிரச்சாரம்: வாசனுக்குத் தடையா?

கோவைக்கு பிரச்சாரம் செய்ய வரும் ஜி.கே.வாசனை திட்டமிட்டே வேட்பாளர் ஆர்.பிரபுவுக்கு பிரச்சாரம் செய்யாதபடி பார்த்துக்கொள்ளும் அதிரடி வேலைகள் காங்கிரஸ் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

முன்னாள் மத்திய அமைச்சர் ஆர்.பிரபு கோவை தொகுதியில் போட்டியிடுகிறார். அவர் மக்களவைத் தேர்தலுக்கு 10-வது முறையாக போட்டியிடுவது குறிப்பிடத்தக்கது.

திருப்பூரில் இ.வி.கே.எஸ். இளங்கோவனும், பொள்ளாச்சியில் பூச்சியூர் செல்வராஜும் (சிதம்பரம் கோஷ்டி) காங்கிரஸ் கட்சியில் போட்டியிடுகின்றனர். இந்த சூழ்நிலையில் வரும் 6-ம் தேதி ஜி.கே.வாசன் திருப்பூரில் இ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு வாக்கு கேட்டு பிரச்சாரம் செய்கிறார்.

அதேசமயம் கோவை, ஆர்.எஸ்.புரம் பூ மார்க்கெட் பகுதியில் நடக்கும் பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் வேட்பாளர்களுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்ய விருக்கிறார் வாசன். இந்த பொதுக்கூட்ட மேடை அமைய விருக்கும் பகுதி பொள்ளாச்சி தொகுதிக்குள் வருகிறது. அங்கே காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பூச்சியூர் செல்வராஜிக்கு மட்டும் வாசன் பிரச்சாரம் செய்துவிட்டு திரும்பும் வகையில் அவருடைய சுற்றுப்பயணம் அமைக்கப் பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. இதை திட்டமிட்டே வாசன் கோஷ்டியினர் செய்திருக்கின்றனர் என்றும் புகார் தெரிவிக்கின்றனர் பிரபு ஆதரவாளர்கள்.

இதுகுறித்து அவர்களில் சிலர் நம்மிடம் பேசுகையில், கடந்த புதன்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்த ஆர்.பிரபுவுடன் வாசன் கோஷ்டியை சேர்ந்த சிலர் சென்றிருந்தனர். அவர்கள் ஆர்.பிரபுவுக்கு பிரச்சாரத்திலும் ஈடுபட்டனர்.

இந்நிலையில் 6ம் தேதி வாசன் வருகைக்கான பிரச்சார ஏற்பாடுகள் திட்டமிடுதல் குறித்து வியாழக்கிழமை வாசன் கோஷ் டியினர் தங்கள் அலுவலகத்தில் கூட்டம் நடத்தினர். அந்த கூட்டத்தில் ஆர். பிரபுவுக்காக புதன்கிழமை வேட்பு மனு தாக்கலுக்கும், பிரச்சாரத்துக்கும் போனவர்களும் சென்றுள்ளனர். அவர்களை அங்கே அரங்கிற்குள் விட மறுத்து விட்டனர். ஆக, கோவையில் ஆர்.பிரபுவுக்கு எதிராக கட்சியில் ஒரு பிரிவினர் செயல்படுவதாக டெல்லிக்கு பிரபு ஆதரவாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x