Published : 10 Dec 2014 10:06 AM
Last Updated : 10 Dec 2014 10:06 AM

பிரதமர் மோடி பற்றி விமர்சனம்: வைகோ பேசியதில் எந்த தவறும் இல்லை - பாமக நிறுவனர் ராமதாஸ் பேட்டி

‘பிரதமர் மோடி பற்றி வைகோ பேசியதில் எந்தத் தவறும் இல்லை. அவரது கருத்தில் நாங்களும் உடன்படுகிறோம்’ என்று பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்தார்.

தமிழகத்தில் சாதிவாரி மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தக் கோரி, பாமக சார்பில் மாவட்ட தலை நகரங்களில் நேற்று தொடர் முழக்கப் போராட்டம் நடத்தப் பட்டது. சென்னை வள்ளுவர் கோட்டம் அருகே பாமக துணைப் பொதுச் செயலாளர் ஏ.கே.மூர்த்தி தலைமையில் நடந்த போராட்டத்தில், கட்சியின் நிறுவனர் ராமதாஸ் உட்பட ஏராள மானோர் பங்கேற்றனர்.

போராட்டத்தில் ராமதாஸ் பேசியதாவது:

கர்நாடகத்தில் சாதி வாரி கணக்கெடுப்பு நடத்த, அந்த மாநில முதல்வர் சித்தராமையா உத்தரவிட்டுள்ளார். அவர் நம் எல்லோருக்கும் ஒரு வழிக்காட்டி. மத்திய அரசும், அவருடைய வழியைப் பின்பற்ற வேண்டும்.

சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தி னால்தான் எந்த சமூக மக்கள் குடிசையில் அதிகம் வாழ் கின்றனர், யார் வேலை இல்லாமல் இருக்கின்றனர் என்பது முழுமை யாக தெரியவரும். தமிழகத்தில் சாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தொடர்ந்து போராடுவேன். இவ்வாறு ராமதாஸ் பேசினார்.

அதன்பிறகு நிருபர்களுக்கு அவர் அளித்த பேட்டி:

சுப்பிரமணியன் சுவாமி, தனது ட்விட்டர் பக்கத்தில் ராமதாஸ் விடுதலைப் புலிகளின் ஆதரவாளர் என்றும் தலித்களுக்கு எதிரானவர் என்றும் குறிப்பிட்டுள்ளாரே?

அவர் பல பிரச்சினைகளில் சிக்கியுள்ளார். அதனால், அவரது கருத்துக்கு முக்கியத்துவம் தர விரும்பவில்லை.நாடாளுமன்ற உறுப்பினர் கள் மற்றும் பாஜகவினர் நாவடக் கத்துடன் பேச வேண்டும் என பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பாஜக கூட்டணியில் இருந்து வைகோ வெளியேறிவிட்டாரே?

அது அவரது தனிப்பட்ட விஷம். அவருடைய கருத்துக்கு நாங்களும் உடன்படுகிறோம். வைகோ பேசிய தில் எந்தத் தவறும் இல்லை. பிரதமர் மோடி விமர்சனத்துக்கு அப்பாற் பட்டவர் அல்ல. திமுக மற்றும் அதிமுக கூட்டணியில் இருந்த போதே, அவர்களைப் பற்றி விமர்சித் துள்ளேன். எங்களுடைய விமர் சனம் எப்போதும் நாகரிகமாகவும் ஆக்கப்பூர்வமாகவும் இருக்கும்.

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் 3 நாட்கள் மட்டும் நடந்துள்ளதே?

அதில் எனக்கு உடன்பாடு இல்லை. ஜனநாயகம் காப்பாற்றப் படுவதாக தெரியவில்லை. சட்டப் பேரவை கேலிக்கூத்தாக நடக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x