Published : 09 Dec 2014 08:59 AM
Last Updated : 09 Dec 2014 08:59 AM

புதுச்சேரியில் விஸ்வ இந்து பரிஷத் மாநாடு: ஒற்றுமை இன்மையால்தான் தமிழர்களைப் பாதுகாக்க முடியவில்லை - இலங்கை போர் குறித்து பிரவீண் தொகாடியா பேச்சு

இலங்கையில் ஒற்றுமை இன்மை காரணமாகவே தமிழர்களைக் காப்பாற்ற முடியவில்லை என்றும் நாடு முழுவதும் உள்ள இந்துக்களுக்கு உதவும் வகையில் இலவச ஹெல்ப் லைன் சேவையை செயல்படுத்துகிறோம் என்றும் விஸ்வ இந்து பரிஷத் தலைவர் டாக்டர் பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

விஷ்வ இந்து பரிஷத் பொன்விழாவை முன்னிட்டு புதுச்சேரியில் இந்து ஒற்றுமை மாநாடு நேற்று நடைபெற்றது. மாநில தலைவர் அன்பழகன். ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் உட்பட பலர் பங்கேற்றனர். மாநாட்டில் விஸ்வ இந்து பரிஷத் இயக்க அகில உலக செயல் தலைவர் பிரவீண் தொகாடியா கலந்து கொண்டு பேசினார்.

அப்போது அவர் கூறும்போது, “இந்தியா, தனது 3000 ஆண்டு பெருமைகளை இழந்துவிட்டது. ஒற்றுமை குறைவு காரணமாகவே இலங்கை போரில் தமிழர்களைப் பாதுகாக்க முடியவில்லை. இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் மலேசியாவில் இந்துக்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. கல்வி, மருத்துவ சேவைக்கு முக்கியத்துவம் தருகிறோம். முக்கியமாக தீண்டாமை இந்து தர்மத்தில் இல்லை.

தீண்டாமை வேண்டாம்

தீண்டாமையை இந்தியா விலிருந்து தூக்கியெறிய சபதம் ஏற்க வேண்டும். இந்துக்கள் எந்த ஊருக்கு சென்றாலும் அவர் களுக்கு உதவும் வகையில் இலவச ஹெல்ப் லைன் சேவையை தொடங்கியுள்ளோம். 020 66803300 என்ற எண்ணில் அழைத்தால் உதவுவோம்” என்றார்.

முன்னதாக செய்தியாளர்களுக்கு தொகாடியா பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

விஸ்வ இந்து பரிஷத் பொன்விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. தமிழகத்தில் சென்னை, திருச்சி, ஓசூர், கன்னியாகுமரி உட்பட 26 இடங்களில் மாநாடு நடத்த உள்ளோம். வடக்கு இலங்கையில் இந்து கோயில்கள் முற்றிலுமாக அழிக்கப்பட்டுள்ளன. அங்கு 70 ஆயிரம் பெண்கள் விதவைகளாகவும், 1 லட்சம் குழந்தைகள் ஆதரவு அற்றவர் களாகவும் ஆகியுள்ளனர்.

வங்கதேசம், மலேசியா, பாகிஸ்தான் என பல நாடுகளிலும் இந்துக்களுக்கு கொடுமை நடக்கிறது. நாடு முழுவதும் 53 ஆயிரம் கிராமங்களில் 20 லட்சம் குழந்தைகளுக்கு இலவச கல்வி அளிக்கிறோம். ஹைதராபாத், டெல்லி, நாக்பூர், ராஜஸ்தான் உள்ளிட்ட இடங்களில் இலவச மருத்துவ சிகிச்சை தருகிறோம். இன்னும் 2 ஆண்டுகளில் நாடு முழுவதும் மாவட்டங்கள்தோறும் இலவச மருத்துவ சிகிச்சை அளிக்க மையங்கள் அமைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம். இலவச மருத்துவ சிகிச்சை பெற 18602333666 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

மோடி தலைமையிலான மத்திய அரசின் செயல்பாட்டை தெரிவிக்க நான் அரசியல்வாதி அல்ல. நான் ஒரு டாக்டர். மருத்துவம் பற்றி கேளுங்கள். மோடி அரசின் செயல்பாட்டை உன்னிப்பாக கவனித்து வருகிறேன். மத்திய அரசுக்கும் கால அவகாசம் அளிக்க வேண்டும். நாங்கள், ‘விஷன் 2025’ என்ற இலக்கை நோக்கி செல்கிறோம்.

இவ்வாறு பிரவீண் தொகாடியா தெரிவித்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x