Published : 28 Dec 2014 10:53 AM
Last Updated : 28 Dec 2014 10:53 AM
தேனியில் பார்வர்டு பிளாக் கட்சியின் மாவட்ட செயலர் இறுதி ஊர்வலத்தில் இரு தரப்பினர் கல்வீசிக் கொண்டனர். இதையடுத்து போலீஸார் துப்பாக்கிச்சூடு, கண்ணீர்புகை குண்டுகளை வீசினர். இந்த கலவர சம்பவத்தில் சிக்கி 2 பேர் உயிரிழந்தனர்.
அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் தேனி மாவட்டச் செயலராக இருந்தவர் எஸ்.ஆர்.தமிழன். பெங்களூரில் எல்.எல்.பி. தேர்வு எழுதச் சென்ற இவர் நேற்று முன்தினம் மாரடைப்பால் உயிரிழந்தார். நேற்று அவரது உடல் சொந்த ஊரான தேனிக்கு கொண்டுவரப்பட்டது.
எஸ்.பி. உட்பட 6 பேருக்கு காயம்
பொதுமக்களின் அஞ்சலிக்காக வைக்கப்பட்ட பின் நேற்று மதியம் அல்லிநகரம் வழியாக இவரது உடல் ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. அப்போது ஊர்வலத்தில் சென்ற சிலர் சாலையில் பூக்களை வீசியபடி சென்றனர். இதற்கு அல்லிநகரத்தில் நின்றிருந்த மற்றொரு தரப்பினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இதில் ஏற்பட்ட பிரச்சினையில் இருதரப்பினரும் மாறிமாறி கல்வீச்சில் ஈடுபட்டனர். இவர்களைக் கலைக்க போலீஸார் தடியடி நடத்தினர். அப்போது பலரும் சிதறி ஓடினர். ஊர்வலத்தில் வந்த டிராக்டரை அவசரமாக திருப்பியபோது தவறி விழுந்த சங்ககோணம்பட்டியை சேர்ந்த ராமர் (50) என்பவர் டிராக்டரில் சிக்கி பலியானார்.
கல்வீச்சு சம்பவத்தில் தேனி எஸ்.பி. கே.மகேஷுக்கு காயம் ஏற்பட்டது. அதேபோல் எஸ்.எஸ்.ஐ. இளமுருகபாஸ்கரன், தலைமைக் காவலர் ரமேஷ் ஆகியோர் காயம் அடைந்தனர். தவிர ஊர்வலத்தில் சென்ற 3 பேருக்கு தலையில் காயமேற்பட்டது. இதனால் அப்பகுதியில் கலவரம் ஏற்பட்டது. கல்வீசி தாக்கிய நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி இரு தரப்பினரும் சாலை மறியலில் ஈடுபட்டனர். பின்னர் இவர்கள் மாறி மாறி கற்களை வீசித் தாக்கிக்கொண்டனர். இதில் சிக்கிய பொம்மையகவுண்டன்பட்டியைச் சேர்ந்த மலைச்சாமி (35) என்பவர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்படும் வழியில் இறந்தார்.
இதனால் கலவரம் பெரிய அளவில் வெடிக்கலாம் எனக் கருதி போலீஸார் தடியடி நடத்தி யதுடன் வானத்தை நோக்கி துப்பாக்கியால் சுட்டனர். இதில் பஸ், வேன் என 4 வாகனங்களின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. சிறிது நேரத்துக்குப் பின்னர் ஊர்வலம் புறப்பட்டு, ரத்னா நகரில் உள்ள சொந்த இடத்தில் எஸ்.ஆர்.தமிழன் உடல் அடக்கம் செய்யப்பட்டது.
ஊர்வலத்தில் சென்றோர் வந்த வழியில் மீண்டும் செல்ல வேண்டும் என்று கூறினர். வந்த வழியில் சென்றால் பிரச்சினை ஏற்படும் என போலீஸார் மறுத்தனர். இதனால் போலீஸாருக்கும் ஊர்வலத்தில் சென்றோருக்கும் தகராறு ஏற்பட்டது. இதனையடுத்து வானத்தை நோக்கி போலீஸார் துப்பாக்கியால் சுட்டனர். மேலும் கண்ணீர்ப் புகை குண்டு வீசப்பட்டது. இதனையடுத்து முக்கிய நபர்கள் மட்டும் வந்த வழியில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். ஆனாலும் கலையாத கும்பல் அல்லிநகரத்தில் மீண்டும் கலவரத்தில் ஈடுபட்டது. அப்போது பெட்ரோல் குண்டுகள் போலீஸாரை நோக்கி வீசப்பட்டன. இந்த குண்டுகள் வீடுகள் மீது விழுந்து வெடித்ததில் சிலரது வீடுகள் தீப்பற்றின.
கலவரத்தைக் கட்டுப்படுத்த தென்மண்டல ஐ.ஜி. அபய்குமார்சிங் தலைமையில் டிஐஜி அறிவுச்செல்வன், எஸ்.பி.க்கள் மகேஷ், ஜெயச்சந்திரன், சரவணன் ஆகியோர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். பதற்றத்தைத் தணிக்க 500-க்கும் மேற்பட்ட போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT