Published : 14 Dec 2014 01:43 PM
Last Updated : 14 Dec 2014 01:43 PM

விதிகளை மீறிய பொறியியல் கல்லூரிகளை தமிழக அரசே ஏற்று நடத்த வேண்டும்: ராமதாஸ்

கல்வித் தரத்தை பாதிக்கும் வகையில் விதிகளை மீறி செயல்படும் கல்லூரிகளை அரசே ஏற்று, தரமான கல்லூரிகளாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் உள்ள பொறியியல் கல்லூரிகளின் செயல்பாடு, கல்வித்தரம் ஆகியவை குறித்து நாடாளுமன்றத்தில் மத்திய அரசு வெளியிட்ட புள்ளி விவரங்கள் அதிர்ச்சி அளிக்கின்றன.

இந்தியாவில் ஒட்டுமொத்தமாக 3389 பொறியியல் கல்லூரிகள் செயல்பட்டு வருகின்றன. இவற்றில் அதிகபட்சமாக ஆந்திரத்தில் 670 பொறியியல் கல்லூரிகளும், தமிழகத்தில் 532 கல்லூரிகளும் இயங்கி வருகின்றன. கல்லூரிகளின் எண்ணிக்கையில் தமிழகம் இரண்டாவது இடத்தில் இருந்தாலும், விதி மீறல்களில் தமிழகம் தான் முதலிடத்தில் இருப்பதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

கடந்த 4 ஆண்டுகளில் விதிமீறல்களில் ஈடுபட்டதாக கண்டறியப்பட்ட கல்லூரிகளில் 20 முதல் 25% கல்லூரிகள் தமிழகத்தை சேர்ந்தவை என்று நாடாளுமன்றத்தில் உறுப்பினர்களின் வினாக்களுக்கு அளித்த பதிலில் மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சர் ராம் சங்கர் கத்திரியா தெரிவித்துள்ளார்.

கடந்த 2011-12 ஆம் ஆண்டில், நாடு முழுவதும், அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக்குழுவின் விதிமுறைகளை மீறியதாக கண்டறியப்பட்ட 82 பொறியியல் கல்லூரிகளில் சுமார் 20% கல்லூரிகள் அதாவது 16 கல்லூரிகள் தமிழகத்தைச் சேர்ந்தவை ஆகும். அதேபோல் 2012-13 ஆம் ஆண்டில் விதிகளை மீறிய 331 கல்லூரிகளில் 81 கல்லூரிகளும் (25%), 2013-14 ஆண்டில் விதிகளை மீறிய 80 கல்லூரிகளில் 4 கல்லூரிகளும் (5%), நடப்பாண்டில் விதிகளை மீறிய 233 கல்லூரிகளில் 45 கல்லூரிகளும் (20%) தமிழகத்தைச் சேர்ந்தவை என்றும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

தேசிய அளவில் விதிகளை மீறிய கல்லூரிகளில் தமிழகக் கல்லூரிகளின் விகிதம் 20 முதல் 25% என்ற அளவில் இருக்கும் போதிலும், தமிழகத்தில் ஆய்வுக்கு உட்படுத்தப்படும் கல்லூரிகளில் பாதிக்கும் மேற்பட்டவை விதிகளை மீறியிருப்பதாகவும் கண்டறியப்பட்டிருக்கிறது.

தமிழ்நாட்டில் உயர்கல்வி நிறுவனங்கள் எந்த லட்சணத்தில் செயல்பட்டு வருகின்றன என்பதற்கு இதுவே சிறந்த உதாரணமாகும்.

தமிழகத்தில் உள்ள தனியார் கல்லூரிகளில் அரசு ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் ரூ.40 ஆயிரமும், நிர்வாக ஒதுக்கீட்டு இடங்களில் சேரும் மாணவர்களிடம் ரூ.70 ஆயிரமும் கல்விக் கட்டணமாக வசூலிக்கப்பட வேண்டும் என்று கட்டண நிர்ணயக்குழு அறிவித்திருக்கிறது.

ஆனால், தமிழகத்தில் ஓரளவு தரமான கல்லூரிகளில் கூட இதைவிட குறைந்தது இரு மடங்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. சென்னை, கோவை, மதுரை, திருச்சி உள்ளிட்ட பெரிய நகரங்களை ஒட்டியுள்ள கல்லூரிகளில் அரசு நிர்ணயித்தக் கட்டணத்தை விட பல லட்ச ரூபாய் கூடுதலாக வசூலிக்கப்படுகிறது.

போதிய உட்கட்டமைப்பு வசதிகளோ, தகுதி வாய்ந்த ஆசிரியர்களோ இல்லாத போதிலும் பெரும்பாலான தனியார் கல்லூரிகள் மாணவர்களிடம் கட்டணம் என்ற பெயரில் பணத்தைக் கொள்ளையடிக்கின்றன.

அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்த பின்னர் கடந்த மூன்றரை ஆண்டுகளில் 146 தனியார் பொறியியல் கல்லூரிகள் விதிகளை மீறியிருப்பதை அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு கண்டுபிடித்துள்ள போதிலும் இதுவரை அவற்றில் எந்த கல்லூரி மீதும் நடவடிக்கை எடுக்கப்பட வில்லை.

தவறு செய்த கல்லூரிகளின் பட்டியலை இணையதளத்தில் வெளியிட்டு மாணவர்களும், பொதுமக்களும் அறிந்து கொள்ள வகை செய்ய வேண்டியது அண்ணா பல்கலைக்கழகத்தின் பணியாகும். ஆனால், அதை செய்யாததுடன் எந்த வசதியும் இல்லாமலேயே கல்லூரிகள் இயங்க தமிழக அரசு அனுமதிப்பதாலும் தமிழகத்தில் பொறியியல் கல்லூரியின் தரம் குறைந்துவிட்டது.

அதன்விளைவாக 1.98 லட்சம் பொறியியல் பட்டதாரிகளும், 1.87 லட்சம் பொறியியல் முதுநிலை பட்டதாரிகளும் வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்து விட்டு பல ஆண்டுகளாக வேலை கிடைக்காமல் காத்திருக்கின்றனர்.

ஒரு காலத்தில் உடனடியாக வேலைவாய்ப்பு அளிக்கும் படிப்பாக பார்க்கப்பட்ட பொறியியல் கல்வி இன்று வேலைக்கு வாய்ப்பே இல்லாத கல்வியாக மாறிவிட்டது மிகுந்த வருத்தமளிக்கும் விஷயமாகும்.

நாட்டின் வளர்ச்சிக்கு தகுதியும், திறமையும் வாய்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் தேவை. இதை உணர்ந்து தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் உள்ள கட்டமைப்புக் குறைபாடுகளை போக்கவும், கல்வித் தரத்தை உயர்த்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கல்வித் தரத்தை பாதிக்கும் வகையில் விதிகளை மீறி செயல்படும் கல்லூரிகளை அரசே ஏற்று, அண்ணா பல்கலைக் கழகத்தின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்து தரமான கல்லூரிகளாக நடத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்" இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x