Published : 14 Dec 2014 10:23 AM
Last Updated : 14 Dec 2014 10:23 AM

முல்லை பெரியாறில் புதிய அணை கட்ட ஆய்வு: கேரளத்துக்கு அளித்த அனுமதியை திரும்பப் பெறக் கோரி பிரதமருக்கு முதல்வர் கடிதம்

முல்லை பெரியாறு பகுதியில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வு நடத்த, கேரள அரசுக்கு வழங்கப்பட்ட அனுமதியை திரும் பப் பெறவேண்டும் என்று மத்திய அரசை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து பிரதமர் நரேந்திர மோடிக்கு நேற்று அனுப்பிய கடிதத்தில் பன்னீர்செல்வம் கூறியிருப்பதாவது:

முல்லை பெரியாறு அணைப் பகுதியில் 10 கி.மீ. சுற்றளவில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச் சூழல் விளைவுகள் குறித்த ஆய்வு செய்ய, கேரள அரசுக்கு தேசிய வன விலங்குகள் வாரியத்தின் நிலைக்குழு அனுமதி வழங்கியுள்ளதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை இணை யதளத்தில் கூறப்பட்டுள்ளது.

புதிய அணை கட்டுவது என்பது தமிழகமும், கேரளமும் இணைந்து எடுக்க வேண்டிய முடிவு. தமிழகத்தை கேரள அரசு கட்டாயப்படுத்த முடியாது என்று உச்ச நீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் கொண்ட அமர்வு ஏற்கெனவே கூறியுள்ளது. எனவே, கேரள அரசு புதிய அணை கட்ட உச்ச நீதிமன்றம் தடை விதித்துள்ளது.

மேலும் உச்ச நீதிமன்றத்தால் அதிகாரமளிக்கப்பட்ட நீதிபதி ஏ.எஸ்.ஆனந்த் கமிட்டியும், தற்போதைய அணை வலுவாக, பாதுகாப்பாக உள்ளதால் புதிய அணை தேவையில்லை என்று தெரிவித்துள்ளது. இந்தப் பிரச்சினை குறித்த வழக்கு உச்ச நீதிமன்றத்தால் முடித்து வைக்கப்பட்டு, கேரள அரசின் புதிய அணை கட்டக் கோரும் மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், இதையெல்லாம் மறைத்து, மத்திய தேசிய வனவிலங்குகள் வாரியத்தை அணுகி, ஆய்வு நடத்த கேரள அரசு அனுமதி பெற்றுள்ளது. இதனால், தமிழக மக்கள் மிகவும் கவலை அடைந்துள்ளனர். அணை வலுவாக உள்ளதாகவும், நீர்மட்டத்தை 142 அடியாக உயர்த்தவும் உச்ச நீதிமன்றம் அனுமதி அளித்துள்ள நிலையில், கேரள அரசுக்கு சாதகமாக மத்திய தேசிய வன விலங்குகள் வாரியம் அளித்துள்ள அனுமதி, நீதிமன்றத் தீர்ப்பை மீறுவதாகவும், சட்டத்துக்கு புறம்பானதாகவும் அமைகிறது.

எனவே, கேரள அரசுக்கு வழங்கிய அனுமதியை உடனடி யாகத் திரும்பப்பெற வேண்டும். முல்லை பெரியாறு அணை தமிழக அரசுக்கு சொந்தமாக, தமிழக அரசால் இயக்கப்படுகிறது. அதன் மீதான தமிழக அரசின் உரிமையானது, உச்ச நீதிமன்ற உத்தரவுகளால் சட்டப்பூர்வமாக் கப்பட்டுள்ளது. எனவே, முல்லை பெரியாறில் புதிய அணை கட்டு வது தொடர்பான எந்த அனுமதியும் கேரள அரசுக்கு மத்திய அரசு வழங்கக்கூடாது எனக் கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x