Published : 30 Dec 2014 09:26 AM
Last Updated : 30 Dec 2014 09:26 AM

ஈசிஆர் பகுதியில் சிக்கும் பெண்கள்; மறைக்கப்படும் பாலியல் குற்றங்கள்

கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள கடற்கரை பகுதிகளில் சிக்கும் பெண்கள் பலர் பாலியல் கொடுமைக்கு உள்ளாவதாகவும், இதில் பல குற்றங்கள் மறைக்கப்படுவதாகவும் கூறப்படுகிறது.

சென்னை கிழக்கு கடற்கரை சாலை நீலாங்கரை அருகே அக்கரை பகுதியில் உள்ள கடற்கரையில் கடந்த 22-ம் தேதி மாலை 6 மணி அளவில் காதலனுடன் கல்லூரி மாணவி ஒருவர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த இளைஞர் தன்னை போலீஸ் என்று கூறிக் கொண்டு, மாணவியை மட்டும் விசாரணைக்கு வருமாறு மோட்டார் சைக்கிளில் அழைத்துச் சென்று பாலியல் தொந்தரவு செய்தார்.

போலீஸ் விசாரணையில் சோழிங்கநல்லூர் கிராம நெடுஞ்சாலை 5-வது குறுக்கு தெருவில் வசிக்கும் அருண்மொழி என்ற பாரதிராஜா(29) என்பவர்தான் கல்லூரி மாணவியை அழைத்து சென்று பாலியல் தொந்தரவு செய்தது தெரிந்தது. ஒரு ஐ.டி. நிறுவனத்தில் வேலை பார்க்கும் இவருக்கு திருமணமாகி குழந்தைகளும் உள்ளனர். இவரது சொந்த ஊர் காரைக்கால். சென்னையில் தனியாக தங்கியிருக்கும் இவர், இதுபோல் பல பெண்களிடம் பாலியல் குற்றங்களில் ஈடுபட்டது விசாரணையில் தெரிந்தது. அவரை கைது செய்த போலீஸார் நேற்று புழல் சிறையில் அடைத்தனர்.

சென்னை மெரினா, பெசன்ட் நகர் கடற்கரைகளில் மக்கள் கூட்டம் அதிகமாக இருந்தாலும் குற்றங்கள் நடைபெறுவது மிகக் குறைவு. ஆனால் கிழக்கு கடற்கரை சாலையில் (ஈசிஆர்) உள்ள கடற்கரைக்கு செல்லும் பெண்களில் பலர் பாலியல் கொடுமைகளில் சிக்குகின்றனர்.

இங்கு செல்லும் காதலர்கள் பலர் பெற்றோர்களுக்கு தெரியாமல் செல்வதால் தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை அவர்கள் வெளியில் சொல்வதில்லை. இங்கு வரும் பெண்களிடம் பாலியல் செயல்களில் ஈடுபடுவதற்கென்றே சில கும்பல்கள் இந்த பகுதிகளில் சுற்றுகின்றனர் என்று கூறப்படுகிறது.

திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் வரை உள்ள 55 கி.மீ. சாலையில் உடைந்த பாலம், பாலவாக்கம், கொட்டிவாக்கம், அக்கரை, கானாத்தூர், முட்டுக்காடு, புலி குகை, முதலியார்குப்பம், கடப்பாக்கம், கோவளம், நெம்மேலி, தேவனேரி, வயலூர், புதுப்பட்டினம் என பிரபலமான பல கடற்கரைகள் உள்ளன. ஆனால், இங்கு வரும் மக்கள் மிகக் குறைவு. இந்த இடங்களில் இருந்து கடற்கரை ஓரமாக சிறிது தூரம் தள்ளி சென்றாலும் சமூக விரோதிகளின் பிடியில் சிக்குவதற்கான வாய்ப்புகள் அதிகம். இதனால் பெண்கள் இந்த பகுதிகளுக்கு செல்லாமல் இருப்பது நல்லது என்று சமூக ஆர்வலர்கள் எச்சரிக்கைவிடுத்துள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x