Published : 08 Dec 2014 08:44 AM
Last Updated : 08 Dec 2014 08:44 AM

அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக ரஜினியின் சகோதரர் சர்ச்சை கருத்தால் பரபரப்பு: தமிழ் தெரியாது என மன்னிப்பு கேட்டார்

காவிரியில் அணை கட்டும் விவகாரத்தில் கர்நாடகத்துக்கு ஆதரவாக நடிகர் ரஜினிகாந்தின் சகோதரர் சத்திய நாராயணராவ் கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் அவர் அதற்காக மன்னிப்பு கேட்டார்.

திருச்சியில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்க வந்திருந்த சத்திய நாராயணராவ் ரங்கம் ராகவேந்திரர் மடத்தில் வெள்ளித் தேர் இழுத்தார். பின்னர் செய்தி யாளர்களிடம் பேசும்போது, ‘எனது சகோதரர் ரஜினிகாந்த் பிறந்தநாளை (டிச.12) முன்னிட்டும், ‘லிங்கா’ திரைப்படம் எந்த பிரச்சினையும் இல்லாமல் வெளிவந்து படம் நல்லவிதமாக ஓடவும் வேண்டி ரங்கம் ராக வேந்திரர் மடத்தில் உள்ள ராகவேந்திரரை வழிபட வந்தேன்.

ரஜினிக்கு அரசியல் வேண்டாம். ரஜினி நேர்மையாக வும், தர்மப்படியும் வாழ்ந்து வருபவர். அவருக்கு அரசியல் சரிப் பட்டு வராது. அரசியல் நிலைமை இப்போது மோசமாகிவிட்டது. அரசியலில் ஈடுபட்டால் நல்லவர் களும் கெட்டவர்களாகி விடுவார்கள். ரஜினியை அரசியலுக்கு வரச்சொல்லி பலரும் அழைக்கின்றனர். ஆனால், அவர் அரசியலுக்கு வரமாட்டார். தமிழ்நாடு புண்ணிய பூமி. தமிழகத்தின் பிள்ளையான ரஜினிக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆசீர்வாதம் எப்போதும் வேண்டும்.

காவிரி யில் வீணாகும் தண்ணீரைச் சேமிக்கவே காவிரியின் குறுக்கே கர்நாடகம் அணை கட்டப்போவதாக சொல்கிறார்கள். தமிழ்நாட்டுக்கும் தண்ணீர் வேண்டும், கர்நாடகத்துக்கும் தண்ணீர் வேண்டும் அல்லவா? நதிகளை இணைக்க ரஜினி தருவதாக சொன்ன ரூ.100 கோடி தயாராக இருக்கிறது. நதிகளை இணைக்கும் திட்டப் பணிகளை தொடங்கும்போது அவர் சொன்னபடி நிதி வழங்குவார் என்றார்.

இதையடுத்து காவிரியில் அணை கட்ட கர்கநாடகத்துக்கு ஆதரவாக சத்திய நாராயணாராவ் கருத்து தெரிவித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இந்நிலையில், தனது கருத்தை மாலையில் அவர் மறுத்தார். செய்தியாளர்களை அழைத்து பேட்டியளித்த அவர், ‘எனக்கு தமிழ் சரியாக வராது. நிருபர்கள் கேட்டதை சரியாக புரிந்துகொள்ளாமல் நான் கர்நாடகம் காவிரியில் அணை கட்டுவது குறித்து கருத்து சொல்லிவிட்டேன். கர்நாடகம் காவிரியில் அணை கட்டும் விவகாரம் குறித்து நான் ஏதாவது சொல்லியிருந்தால் மன்னித்துக் கொள்ளுங்கள். இதுகுறித்து மத்திய, மாநில அரசுகளிடம்தான் கேட்க வேண்டும். இதுபோன்ற அரசியல் விவகாரங்களில் என்னிடம் கருத்து கேட்பது சரியல்ல. மேலும், ரஜினி அரசியலுக்கு வருவது குறித்து அவரிடம்தான் கருத்து கேட்க வேண்டும். அவர் அரசியலுக்கு வருவது பற்றி கடவுள் முடிவு செய்வார்’ என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x