Last Updated : 15 Dec, 2014 11:40 AM

 

Published : 15 Dec 2014 11:40 AM
Last Updated : 15 Dec 2014 11:40 AM

கூட்டணியை மட்டுமே நம்பி இல்லாமல் தமிழகத்தில் பாஜகவை தனித்து வளர்க்க வேண்டும்: தேசிய தலைமையின் முடிவால் குழப்பத்தில் தமிழக தலைவர்கள்

கூட்டணியை மட்டும் நம்பி இருக்காமல் கட்சியை தனியே பலப்படுத்துங்கள் என்று தமிழக பாஜகவுக்கு தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளது. இது சாத்தியமாகுமா என தமிழக பாஜக தலைவர்கள் குழப்பத்தில் உள்ளனர்.

கடந்த மக்களவை தேர்தலின்போது, தமிழகத்தில் பாஜக தலைமையில் உருவான கூட்டணியில் ஆறே மாதத்துக்குள் பிளவு ஏற்பட்டுவிட்டது. இலங்கையுடன் மத்திய அரசு நெருக்கம் காட்டுவதாகக் கூறி, தேசிய ஜனநாயக கூட்டணியில் இருந்து மதிமுக வெளியேறியுள்ளது. வைகோவின் நிலைபாட்டில் தங்களுக்கும் உடன்பாடு உண்டு என பாமக நிறுவனர் ராமதாஸ் கூறியுள்ளார். அன்புமணி ராமதாஸுக்கு மத்தியில் முக்கிய பொறுப்புகள் கிடைக்காத நிலையில், பாமகவும் கூட்டணியில் இருந்து வெளியேறும் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன. அதனால்தான் பாமக தலைமையில் புதிய கூட்டணி என ராமதாஸ் கூறி வருகிறார்.

தற்போதைய நிலையில் தேமுதிக மட்டுமே பாஜக கூட்டணி மீது விமர்சனங்களை முன்வைக்காமல் உள்ளது. ஆனால், பாஜக பொதுக்குழுவின்போது ‘124+’ என்று அறிவித்தது, விஜயகாந்துக்கு அதிருப்தியை ஏற்படுத்தி இருப்பதாக கூறப்படுகிறது. தமிழகத்தில் நிலவும் அரசியல் மற்றும் கூட்டணி கட்சிகளின் நிலை குறித்து பாஜக தேசிய தலைமையிடம் மாநிலத் தலைமை எடுத்துக் கூறியுள்ளது.

‘மாநில கட்சிகளை நம்பி செயல்படும் சூழலை மாற்றிவருகிறோம். மகாராஷ்டிராவில் பல வருடங்களாக கூட்டணியில் இருந்த வலுவான சிவசேனாவையே ஒதுக்கிவிட்டுதான் தேர்தலை சந்தித்து வெற்றி பெற்றோம். ஹரியாணாவிலும் தனியேதான் சாதித்தோம். எனவே, தமிழகத்தில் கூட்டணியை மட்டுமே நம்பி இருக்காமல் கட்சியை தனியாக முன்னிறுத்துங்கள். பாஜகவை முன்னிலைப்படுத்தி 2016 தேர்தலை சந்திக்க வேண்டும்’ என்று தேசிய தலைமை அறிவுறுத்தியுள்ளதாம்.

ஹரியாணா, மகாராஷ்டிர தேர்தலில் கையாண்ட யுக்திகள் தமிழகத்தில் பாஜகவுக்கு கைகொடுக்குமா என்று மாநில நிர்வாகிகள் குழப்பத்தில் உள்ளனர். இங்கு பலமான கட்சிகளாக உள்ள திமுக, அதிமுகவை தனியாக நின்று வீழ்த்துவது சிரமமானது என்று தமிழக பாஜக தலைவர்கள் நினைக்கின்றனர். பாஜக தேசிய தலைவர் அமித் ஷா இம்மாதம் 20, 21 ஆகிய தேதிகளில் தமிழகத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். அப்போது கட்சி வளர்ச்சி, உறுப்பினர் சேர்க்கை உள்ளிட்டவை குறித்து பாஜகவினருக்கு அவர் சிறப்பு பயிலரங்குகளை நடத்துவார் என கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x