Published : 26 Dec 2014 10:16 AM
Last Updated : 26 Dec 2014 10:16 AM
சுனாமியால் பாதிக்கப்பட்ட மீனவர்கள் அரசு கட்டிக் கொடுத்துள்ள குடியிருப்புகளில் எவ்வித அடிப்படை வசதிகளும் இல்லாமல் தவித்து வருவதாக புகார் எழுந்துள்ளது.
கடந்த 2004-ம் ஆண்டு தாக்கிய சுனாமியில் சென்னை காசிமேட்டில் உள்ள மீனவ மக்கள் ஏராளமானோர் பாதிக்கப்பட்டனர். அவர்கள் குடியிருந்த குடிசை வீடுகள் எல்லாம் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டன. வீடு இழந்து தவித்த அவர்களுக்கு, தண்டையார்பேட்டையில் உள்ள திலகர் நகர், வஉசி நகர், கார்கில் நகர் மற்றும் எர்ணாவூர் ஆகிய இடங்களில் அரசு சார்பில் குடியிருப்புகள் கட்டித் தரப்பட்டன. இக்குடியிருப்புகளில் போதிய அடிப்படை வசதிகள் இன்றி அங்கு வசிக்கும் மக்கள் தவித்து வருகின்றனர்.
திலகர் நகரில் வசிக்கும் சபீதா கூறும்போது, “இக்குடியிருப் புகளைக் கட்டி கிட்டத்தட்ட 7 ஆண்டுகளே ஆகியுள்ளன. அதற்குள் பெரும் பாலான கட்டிடங்கள் சேதம் அடைந்துள்ளன. வீடுகளின் மேற்கூரைகள் மழைக் காலத்தில் ஒழுகுகின்றன. பல வீடுகளில் மேற்கூரையின் சிமென்ட் காரைகள் பெயர்ந்து விழுகின்றன. தரைகள், படிக்கட்டுகள் சிமென்ட் பூச்சுகள் பெயர்ந்து ஆங்காங்கே குழிகள் ஏற்பட்டுள்ளன” என்றார்.
வஉசி நகரில் வசிக்கும் சாந்தா கூறும்போது, “இக்குடியிருப்பில் 450-க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. இங்கு போதிய கால்வாய், சாலை வசதி இல்லை. இதனால், வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் குடியிருப்பு பகுதிகளிலேயே தேங்கி நிற்கிறது” என்றார். எர்ணாவூரில் உள்ள சுனாமி குடியிருப்பில் வசிக்கும் ராஜன் கூறும்போது, “சுனாமியால் வீடிழந்த எங்களுக்கு பல்வேறு கட்ட போராட்டங்களுக்குப் பிறகு இங்கு வீடுகள் ஒதுக்கப்பட்டன. இந்த வீடுகள் போதிய தரத்துடன் கட்டப்படவில்லை. ஒரு சில ஆண்டுகளிலேயே கட்டிடங்களில் விரிசல்கள் ஏற்பட தொடங்கிவிட்டன” என்றார்.
சென்னை செங்கை சிங்கார வேலர் விசைப்படகு உரிமையா ளர்கள் சங்கத்தின் தலைவர் ஜி.அரசு கூறும்போது, “சுனாமி தாக்குதலில் எங்கள் பகுதியில் உயிர்ச்சேதம் ஏற்படவில்லை. மாறாக, படகுகள் சேதம் அடைந்தன. அதற்கு அரசு போதிய அளவு நிவாரணத் தொகை வழங்கியது. அத்துடன், மீனவர்களின் கடன்களும் தள்ளுபடி செய்யப்பட்டன. அதே சமயம், ஏற்றுமதிக்காக மீன்களை பார்சல் செய்து வைத்தவர்களுக்கு பெரும் பொருள் நஷ்டம் ஏற்பட்டது. அவர்களுக்கு போதிய அளவு நிவாரணத் தொகை வழங்கப்படவில்லை” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT