Published : 30 Dec 2014 08:15 AM
Last Updated : 30 Dec 2014 08:15 AM
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலு வையில் இருக்கும்போது ஊதிய ஒப்பந்தப் பேச்சுவார்த்தையை எப்படி நடத்த முடியும் என திமுக தலைவர் கருணாநிதிக்கு முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுதொடர்பாக அவர் நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறியி ருப்பதாவது:
2006 முதல் 2011 வரை ஆட்சி நடத்தி போக்குவரத்து துறையை சீரழித்துவிட்டுச் சென்ற திமுக தலைவர் கருணாநிதி, இன்றைக்கு போக்குவரத்துக் கழகங்களில் குறைந்த எண்ணிக்கையில் உள்ள திமுகவைச் சேர்ந்த தொழிற் சங்கமான தொ.மு.ச.வுடன் பேச்சு வார்த்தை நடத்த வேண்டும் என்ற ரீதியில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்ப தால், போக்குவரத்து தொழிலாளர் களுக்கு ஜனவரி முதல் இடைக் கால நிவாரணமாக மாதம் ரூ.1,000 வழங்கப்படும் என சட்டப்பேரவையில் அறிவித் தேன். அதன்பிறகும் அப்பாவித் தொழிலாளர்களை போராட்டத் திலும் வன்முறையிலும் ஈடுபடத் தூண்டிவிட்டு பொதுமக்களுக்கு இடையூறு விளைவிப்பது எந்த விதத்தில் நியாயம் என்பதை கரு ணாநிதி சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
நீதிமன்ற தீர்ப்புப்படி, 2010-ம் ஆண்டு நவம்பர் 25-ம் தேதி நடந்த தொழிற்சங்க அங்கீகார தேர்தலில் 73,450 வாக்குகளை, அதாவது 57.31 சதவீத வாக்குகளை தொ.மு.ச. பேரவை பெற்றது. இதனால், தமிழக போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சம்பந்தமாக அனைத்து விஷயங்களுக்கும் பேச்சுவார்த்தைகளில் கலந்து கொள்ள 5 ஆண்டுகளுக்கு அங்கீ காரம் வழங்கப்பட்டது. இந்த அங்கீ காரம், சிறப்பு விடுப்பு மனுவின் மேல் உச்ச நீதிமன்றம் வழங்கும் தீர்ப்புக்கு உட்பட்டது என தெரி விக்கப்பட்டது.
தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழக பணியாளர் சம்மேளனம், அண்ணா தொழிற்சங்கப் பேரவை மற்றும் தமிழக அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்ட பதில் மனுவில் அண்ணா தொழிற் சங்கப் பேரவையில் ஜுலை 2011 நிலவரப்படி 70,386 உறுப்பி னர்களும், தொ.மு.ச. பேரவையில் 34,944 உறுப்பினர்களும் உள்ளனர் என தெரிவிக்கப்பட்டது. மேலும், கடந்த நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி அண்ணா தொழிற் சங்கப் பேரவையில் 91,440 (70.90%) உறுப்பினர்கள் உள்ள னர். தொ.மு.ச. பேரவைக்கு 18,000 (13.96%) உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர். இதனால், பேச்சு வார்த்தையில் கலந்து கொள்ளும் தகுதியை இழந்த நிலையில் தொ.மு.ச. உள்ளது.
கடந்த 4-ம் தேதி தொ.மு.ச. உள்ளிட்ட 11 சங்கங்கள் புதிய ஊதிய ஒப்பந்தம் ஏற் படுத்த கூட்டாக கோரிக்கை மனு அளித்தன. வேலை நிறுத்தத் தில் ஈடுபட உள்ளதாக வேலை நிறுத்த அறிவிப்பும் அளித் தன. தொழிற்சங்கங்கள் வேலை நிறுத்தத்தை கைவிடக் கோரி 26, 27-ம் தேதிகளில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இரண்டாம்கட்ட பேச்சு வார்த்தையின்போது, அனைத்து சங்கங்களையும் அழைத்து பேசலாம் என தொ.மு.ச. எழுத்துப் பூர்வமாக நீதிமன்றத்தில் தெரிவித்து, நீதிமன்ற உத்தரவு பெற்றால் மட்டுமே பேச்சு வார்த்தை நடத்த இயலும் என தெரிவிக்கப்பட்டது. ஆனால், இதை ஏற்றுக்கொள்ளாமல், தன்னிச்சை யாக சில தொழிற்சங்கங்களுடன் கூட்டு சேர்ந்து வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக தெரிவித்தனர்.
உச்ச நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருக்கும் போது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த் தையை எவ்வாறு நடத்த இயலும்? போக்குவரத்துக் கழகங் களில் தற்போது மிக அதிக உறுப்பினர்களைக் கொண்டுள்ள தொழிற்சங்கம், அண்ணா தொழிற் சங்கப் பேரவைதான் என்பதை தொ.மு.ச.வைச் சேர்ந்தவர்கள் உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றின் மூலமாகத் தாக்கல் செய்தால், நிலுவையில் உள்ள வழக்கு முடிக்கப்படும். அதன்பிறகு தொழிற்சங்க நிர்வாகிகளுடன் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்தப்படுவதற்கு வழிவகை ஏற்படும். இவ்வாறு அறிக்கையில் பன்னீர்செல்வம் கூறியுள்ளார்.
கடந்த நவம்பர் 30ம் தேதி நிலவரப்படி அண்ணா தொழிற்சங்கப் பேரவையில் 91,440 (70.90%) உறுப்பினர்கள் உள்ளனர். தொ.மு.ச. பேரவைக்கு 18,000 (13.96%) உறுப்பினர்கள் மட்டுமே உள்ளனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT