Published : 05 Dec 2014 10:32 AM
Last Updated : 05 Dec 2014 10:32 AM

சென்னையில் உலக தமிழர் திருநாள் விழா: ஜனவரி 10-ம் தேதி நடக்கிறது

சென்னையில் உலக தமிழ் வர்த்தக சங்கம் சார்பில் உலக தமிழர் திருநாள் விழா ஜனவரி 10-ம் தேதி நடத்தப்படுகிறது.

இது குறித்து உலக தமிழ் வர்த்தக சங்கத்தின் தலைவர் செல்வகுமார் சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

உலக அளவில் தமிழர்கள் வர்த்தக ரீதியாக வலுப்பெற வேண்டும் என்ற நோக்கில் உலக தமிழ் வர்த்தக சங்கம் தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு மலேசியா, கனடா, துபாய் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட நாடுகளில் கிளைகள் உள்ளன. இச்சங்கத்தின் சார்பில் உலகத் தமிழர்களை ஒருங்கிணைக்கும் விதமாக ஜனவரி 10-ம் தேதி சென்னையில் உலக தமிழர் திரு நாள் விழாவை நடத்தப்படுகிறது.

இதில் பல்வேறு நாடுகளில் உயர் பதவிகளில் உள்ள 265 தமிழர்களும், தமிழகத்தைச் சேர்ந்த 32 அரசியல் தலைவர்கள் மற்றும் தொழிலதிபர்கள் பங்கேற்க உள்ளனர். இவர்கள் தமிழர் வளர்ச்சி குறித்து மட்டுமே பேசுவர். அரசியல் பேசமாட்டார்கள்.

இந்த விழாவில் தமிழர் கலை, பண்பாடு மற்றும் கலாச்சாரம் குறித்த நிகழ்வுகளும், வர்த்தகம் சார்ந்த விவாதங்களும் நடைபெற உள்ளன. குறிப்பாக தமிழகத்தில் உள்ள மகளிர் சுய உதவிக்குழுக்களின் உற்பத்தி பொருள்களுக்கு சந்தை வாய்ப்பை ஏற்படுத்த முயற்சி மேற்கொள்ளப்படும். ஏற்றுமதி வாய்ப்புகள் மற்றும் அதற்கான வழிமுறைகள் குறித்து மகளிருக்கு பயிற்சி அளிப்பது குறித்தும் இவ்விழாவில் விவாதிக்கப்பட உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார். இந்த சந்திப்பின்போது தமிழ்நாடு வணிகர் சங்கப் பேரவைத் தலைவர் வெள்ளையன் உடனிருந்தார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x