Published : 12 Dec 2014 12:22 PM
Last Updated : 12 Dec 2014 12:22 PM

தவறான செய்திகளுக்கு துரைமுருகன் கண்டனம்

தான் விளக்கம் தந்த பிறகும், திமுகவிலிருந்து விலகியதாக தன்னைப் பற்றி தவறான செய்திகளை வெளியிட்ட பத்திரிகைகளை வன்மையாக கண்டிப்பதாக திமுக துணைப் பொதுச் செயலாளர் துரைமுருகன் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: "திராவிட முன்னேற்றக் கழகத்தின், துணைப் பொதுச் செயலாளர் பதவியை நான் ராஜினாமா செய்து விட்டதாக - தவறான - ஜமக்காளத்தில் வடிகட்டிய ஒரு பொய்யை, ஒரு செய்தியாக ஆக்கி சில பத்திரிகைகள் பெரிதாக வெளியிட்டிருப்பதைப் பார்த்து நான ஆச்சரியப்பட்டுப் போனேன். நேற்று, சில பத்திரிகை நிருபர்கள் தொலைபேசியில் என்னோடு தொடர்பு கொண்டு இப்படியொரு செய்தி உலவுகிறதே என்று கேட்ட போது அதைத் திட்டவட்டமாக மறுத்து பதிலளித்தேன்.

நேற்றிரவு சுமார் 10 மணி அளவுக்கு சென்னைக்குத் திரும்பிய போது என் வீட்டு வாசலிலே நின்றிருந்த சில தொலைக்காட்சியினரிடமும் "இது அப்பட்டமான பொய்; யாரோ சில விஷமிகள் இதைத் திட்டமிட்டு பரப்பியிருக் கிறார்கள்" என்று பேட்டி கொடுத்தேன்.

ஆனால் இன்று காலையில் எந்தெந்த பத்திரிகை நிருபர்கள் என்னோடு பேசினார்களோ, அதே பத்திரிகைகளில் நான் துணைப் பொதுச் செயலாளர் பதவியை ராஜினாமா செய்து விட்டதாக செய்தி வெளியிட்டிருப்பது கண்டு, தமிழ்நாட்டில் நிலவும் பத்திரிகா தர்மத்தை என்ன சொல்வது?

நான் முறையாக கட்சியில் வளர்ந்தவன். நிறை வாழ்க்கையோடு வாழ்ந்து வருபவன். 1954ஆம் ஆண்டிலிருந்து கட்சியில் உறுப்பினராக இருப்பவன். 50 ஆண்டுகளாக தலைவர் கலைஞரின் அடியொற்றி நிற்பவன். கழகத்தின் மீது அடித்த எந்தப் புயலிலும் காணாமல் போகாமல் இருப்பவன். நான் வெறும் அரசியல் வாதி அல்ல; திராவிட இயக்கத்தின் கொள்கையின் மீது பற்று கொண்டவன்.

இப்படிப்பட்ட என் மீது நான் செய்யாத ஒன்றை செய்து விட்டதாகக் கற்பனையில் ஒரு செய்தியை உருவாக்கி நான் விளக்கம் தந்த பிறகும், பத்திரிகைகள் வெளியிட்டிருப்பதை வன்மையாகக் கண்டிக்கிறேன். தி.மு.க. தான் என்றும் என் கட்சி, தலைவர் கலைஞர் தான் என்றும் என் தலைவர் தளபதி ஸ்டாலின் எங்கள் வழிகாட்டி இது தான் என் முடிவு! கட்சியிலிருந்து விலகல் என்பது என்றும் நடக்காது" இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x