Published : 31 Dec 2014 10:40 AM
Last Updated : 31 Dec 2014 10:40 AM

மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக சொத்து வரி மறுமதிப்பீடு செய்யாததால் வருவாய் இழப்பு

சென்னை மாநகராட்சியில் 15 ஆண்டுகளாக சொத்து வரி மறு மதிப்பீடு செய்யப்படவில்லை. இது மாநகராட்சிக்கு கடும் வருவாய் இழப்பை ஏற்படுத்தி வருகிறது.

சென்னை மாநகர முனிசிபல் சட்டத்தின் படி 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரியை மறு மதிப்பீடு செய்ய வேண்டும். 1993-94-ம் ஆண்டில் சொத்து வரி மதிப்பீடு செய்யப்பட்டது. அதன் பிறகு, 1998-99-ம் ஆண்டில் மறு மதிப்பீடு செய்யப்பட்டது. அப்போது, கட்டடத்தை உரிமையாளரே சொந்த பயன் பாட்டுக்கு வைத்திருந்தால் 25% சொத்து வரி உயர்த்தப்பட்டது.

கட்டடத்தை வாடகைக்கு விட்டிருந்தவர்களுக்கு 50% வரி அதிகரிப்பு, கட்டடத்தை வணிக பயன்பாட்டுக்கு உரிமை யாளரே வைத்திருந்தால் 90% வரி அதிகரிப்பு, கட்டடத்தை வணிக பயன்பாட்டுக்கு வாடகை விட்டிருந்தவர்களுக்கு 100% வரி அதிகரிப்பு என 4 இனங்களாக சொத்து வரி மறு மதிப்பீடு செய்யப்பட்டது. ஆனால், அதன் பிறகு மாநகராட்சி முழுமைக்கும் சொத்து வரி மறு மதிப்பீடு செய்யப்படவில்லை.

இது குறித்து மாமன்ற உறுப்பினர் விஜய ராமகிருஷ்ணா கூறும்போது, “மாநகராட்சியின் வருவாயை பெருக்கினால், பல வளர்ச்சி திட்டங்களுக்கு வங்கி கடனை எதிர்பார்க்காமல் துரிதமாக பணிகளை மேற்கொள்ளலாம். கடந்த 15 ஆண்டுகளில் பல கட்டடங்கள் உயர்த்தி கட்டப்பட்டிருக்கலாம். பல புதிய கட்டடங்கள் கட்டப்பட்டிருக்கலாம். அவற்றை மறு மதிப்பீடு செய்தால், மாநகராட்சியின் வருவாயை பெருக்கலாம்.” என்றார். சென்னை மாநகராட்சியில் ஒரு நபருக்கு செலவிடும் தொகை ரூ.2000க்கும் குறைவானதே. ஆனால், டெல்லி, மும்பை உள்ளிட்ட மாநகராட்சிகள் அதை விட அதிகமாக செலவிடுகின்றன.

இந்நிலையில், சென்னை மாநகராட்சியோடு இணைக்கப்பட்ட பகுதிகள், தமிழக அரசு உத்தரவின் பேரில் 2008-ம் ஆண்டு சொத்து வரியை மறு மதிப்பீடு செய்திருந்தன. எனவே, சென்னையின் வழிகாட்டு மதிப்பு (guideline value) அதிகமுள்ள மைய பகுதிகளான தி.நகர், அடையார், திருவான்மியூர் உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களும், வளர்ச்சி யடையாத செம்மஞ்சேரி, உள்ளிட்ட பகுதிகளில் வசிப்பவர்களும் கிட்டத்தட்ட ஒரே சொத்து வரியை கட்டும் நிலை இருந்து வருகிறது.

இது குறித்து மாநகராட்சி அதிகாரியிடம் விசாரித்த போது, “வணிக வளாகங்களை ஆய்வு செய்து சொத்து வரி மறு மதிப்பீடு செய் யும் பணி தொடர்ந்து நடை பெற்று வரு கிறது. அதன் மூலம், பல கட்டடங்களுக்கு மறு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது. சென்னை முழு மைக்கும் மறு மதிப்பீடு செய்வது குறித்து அரசு தான் முடிவு செய்ய வேண்டும்” என்றார்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x