Published : 12 Dec 2014 10:25 AM
Last Updated : 12 Dec 2014 10:25 AM

காஞ்சி மாவட்டத்தில் குறைந்துவரும் பெண் சிசுக்களின் எண்ணிக்கை: திட்ட இயக்குநர் கவலை

விஞ்ஞான தொழில்நுட்பத்தால் பெண் சிசுக்களின் எண்ணிக்கை குறைவதாக, காஞ்சிபுரம் மாவட்ட திட்ட இயக்குநர் கவலை தெரிவித்தார்.

காஞ்சிபுரம் மாவட்டம், படூர் பகுதியில் உள்ள இந்துஸ்தான் பல்கலைக்கழகத்தில் பெண் குழந்தைகளை காப்போம் மற்றும் தூய்மை இந்தியா திட்ட விளக்க சிறப்பு முகாம், பல்கலையின் பதிவாளர் ராமலிங்கம் தலைமையில் நேற்று நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் மாவட்ட ஊரக வளர்ச்சித் துறை திட்ட இயக்குநர் முத்துமீனாள் சிறப்பு அழைப்பாளராக கலந்துகொண்டு பேசியதாவது: பெண் சிசுவை கொல்லும் செயல் அதிகரித்து வந்த நிலையில், ஸ்கேன் தொழில்நுட்பம் வந்தவுடன், பெண்ணின் கருவில் இருக்கும் குழந்தை ஆணா, பெண்ணா என கண்டறிந்து பெண் சிசுக்களை கருவிலேயே கொன்றார்கள். தற்போது, விஞ்ஞான முன்னேற்றத்தால், உருவாகும்போதே ஆண் கருவாக உருவாக்கும் நிலை உள்ளது. இதனால், பெண் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துவருகிறது” என்றார்.

சைதாப்பேட்டை சுகாதார மாவட்ட துணை இயக்குநர் ராஜசகர், “நமது நாட்டில் பெண் குழந்தைகள் பிறப்பு விகிதம் குறைந்துவருகிறது. 6 வயதுள்ள குழந்தைகளில் ஆயிரம் ஆண் குழந்தைகளுக்கு, 918 பெண் குழந்தைகள்தான் நமது நாட்டில் உள்ளனர். இதில், காஞ்சிபுரம் மாவட்டத்தை பொறுத்தவரை 959 என்ற விகிதத்தில் பெண் குழந்தைகள் உள்ளனர்.

மேலும், மாவட்டத்தில் உள்ள ஸ்கேன் மையங்களில், கருவில் உள்ள குழந்தை ஆணா, பெண்ணா என்னும் முடிவை பெற்றோர்களிடம் சொல்கிறார்களா என்பதை தீவிரமாக கண்காணித்து வருகிறோம்” என்றார். இதைத் தொடர்ந்து, கல்லூரி மாணவ, மாணவிகளுடன் சிறப்பு விருந் தினர்கள் இணைந்து ராஜீவ் காந்தி சாலையில் தூய்மை இந்தியா திட்டத்தை செயல்படுத்தினர். இந்நிகழ்ச்சியில், கல்லூரி ஆசிரியர் கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x